Ad

சனி, 25 செப்டம்பர், 2021

அசாம் : `சட்டவிரோத ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் மக்கள் வெளியேற்றமா! என்ன நடக்கிறது அசாமில்?

கடந்த சிலமாதங்களாக அசாம் மாநிலமே, கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. அண்டை மாநிலம் மிசோரம் உடனான எல்லைப் பிரச்னையில் ஒலித்த துப்பாக்கிச் சத்தம், தற்போது சொந்த மாநிலத்துக்குள்ளாகவே கேட்கத்தொடங்கிவிட்டன. இரண்டும் வெவ்வேறு பிரச்னை என்ற போதிலும்,`ஆக்கிரமிப்பு' என்ற சொல்லில் ஒன்றுசேர்கின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு அசாம் அரசு மேற்கொண்ட `சட்டவிரோத ஆக்கிரமிப்பு நில மீட்பு' நடவடிக்கை, காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான கலவரமாக மாறியது. இதில், 12-வயது சிறுவன் ஷேக் ஃபரீத் உட்பட பொதுமக்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 9-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயமடைந்தனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் மற்றொரு நபர்மீது, அரசு புகைப்படக்கலைஞர் ஏறிநின்று தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிஜாய் சங்கர் பனியா எனும் அந்த புகைப்படக்காரர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கலவரம் நடந்திருக்கும் இந்த சூழலிலும்,`` ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும்" என தெரிவித்திருக்கிறார் அசாம் முதல்வர்.

பிஜாய் சங்கர் பனியா

என்ன நடக்கிறது அசாமில்? விரிவாக பார்ப்போம்.

அசாம் பாஜக அரசின் திட்டம்:

அசாமில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2021 தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக வெற்றிபெற்றதும், ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வரானார். அதனைத்தொடர்ந்து, அசாம் மாநிலத்தின் அரசு நிலங்கள், கோவில் மற்றும் மடத்தின் நிலங்கள் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும் எனக்கூறி, மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். தர்ராங் மாவட்டம் தோல்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 2,800 ஏக்கர் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, அவை விவசாயத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.

ஹிமாந்த பிஸ்வா சர்மா

முதல்கட்ட நடவடிக்கை:

அதனைத்தொடந்து, கடந்த ஜூன் மாதம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தர்ராங் மாவட்டம் தோல்பூர் பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தவிட்டார். முதல்கட்டமாக, கடந்த திங்கள்கிழமை (செப்.20) தர்ராங் மாவட்டம் சிபாஜார் கிராமத்தில் குடியிருந்த 800 குடும்பங்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் குடியிருந்த வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இதன்மூலம், 1,487 ஏக்கர் (4,500 Bigha) நிலம் மீட்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

கலவரமான தோல்பூர்:

இரண்டாம் கட்டமாக, கடந்த வியாழக்கிழமை (செப்.23) தர்ராங் மாவட்டம் சிபாஜார் கிராமத்தில் மீதமிருந்த ஆக்கிரமிப்பு நிலங்களை, மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இறங்கியது. ஆனால், அரசாங்கத்தால் மாற்று இடங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், குடியிருந்த வீடுகளை விட்டு வெளியேற மறுத்திருக்கின்றனர். எச்சரிக்கை செய்த காவல்துறையினர் ஜே.சி.பி. மூலம் வீடுகளை இடிக்கும் பணியைத் தொடங்க முற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இடிக்கப்பட்ட மசூதி முன்பு அழும் மக்கள்

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளை்த தடுத்துநிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், வாக்குவாதம் வன்முறைத் தாக்குதலாக வெடித்திருக்கிறது. காவல்துறை தடியடி நடத்த, மக்களும் பதிலுக்குக் கற்கள், கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த காவல்துறையினர் மேலிட உத்தரவின்பேரில் துப்பாக்கியைக் கையிலெடுத்தனர்.

Also Read: இரண்டு நாள்களில் 80 பேர்! - அசாம் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த விஷ சாராயம்

12 வயது சிறுவன் ஷேக் ஃபரீத்

சுடப்பட்ட 12 வயது சிறுவன்:

காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் ஷேக் ஃபரீத் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். அதேபோல், சதாம் உசேன் என்பவர், மாவட்ட நிர்வாகத்தால் அழைத்துவரப்பட்ட அரசு புகைப்படக்காரரைத் துரத்தியபோது காவல்துறையால் சுடப்பட்டார். உயிருக்குப்போராடிய நிலையில் இருந்த சதாம் உசேனை காவல்துறையும், புகைப்படக்காரர் பிஜாய் சங்கர் பனியாவும் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கண்டனம்:

இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக செயற்பாட்டாளர்கள் கண்டம் தெரிவித்துவருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, ``அஸ்ஸாம் அரசின் ஆதரவுடன் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. மாநிலத்திலுள்ள எங்களது சகோதர, சகோதரிகளுக்கு எப்போதும் நாங்கள் துணையாக இருப்போம்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார

ஆக்கிரமிப்பு அகற்றம்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனும் பெயரில் வெளியேற்றப்படும் மக்கள் யார்?

இதன் பின்னணி பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுவது என்ன?

அசாம் மாநில அரசால் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்று மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து பலதரப்பட்ட மக்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் வெளியேற்றப்பட்ட மக்களில் பலர் பங்களாதேஷ் முஸ்லீம்களாக உள்ளனர். `குடியுரிமை சட்டதிருத்தத்தின்' மூலம் இவர்களை வெளியேற்ற முடியாத சூழல் தற்போது எற்பட்டுள்ள நிலையில், அசாம் மாநில அரசாங்கம் `சட்டவிரோத ஆக்கிரமிப்பு' என்னும் பெயரில் இந்த மக்களை வெளியேற்றி வருகிறதா என்ற கேள்வியை பலரும் முன்வைக்கிறார்கள். மேலும் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்று குடியிருப்புகளும் அரசாங்கத்தால் ஏற்படுத்தித் தரப்படவில்லை என்பதால் அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களின் வாழ்நிலை கேள்விக்குறியாகி உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/is-muslims-evicted-in-assam-in-the-name-of-illegal-occupation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக