Ad

திங்கள், 20 செப்டம்பர், 2021

வட கொரியா தென் கொரியா ஏவுகணை மோதல் : அச்சத்தில் உலக நாடுகள் - கிம் தேசத்தில் நடப்பது என்ன?

இந்தியா - சீனா எல்லைப் பதற்றம், ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி, இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் எனச் சமீப காலத்தில் சர்வதேச அரசியலில் பதற்றமான சூழலே நிலவிவருகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் வட கொரியாவும், தென் கொரியாவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளுக்கான சோதனைகளை அடுத்தடுத்து நடத்தியிருக்கின்றன. இது உலக நாடுகளைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. பல ஆண்டுகளாகவே ஏவுகணை சோதனைகளை நடத்தி, அமெரிக்காவின் எதிர்ப்பைச் சம்பாதித்து வந்தது வடகொரியா. ஐ.நா கவுன்சிலின் எச்சரிக்கைகளையும் மீறி ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது அந்த நாடு. இதனால், பல நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடையை எதிர்கொண்டு வரும் வட கொரியா, கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கிறது.

வடகொரியா ஏவுகணை பரிசோதனை

தொடர்ந்து, பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைச் சோதனை செய்துவந்த வட கொரியா, கடந்த சில மாதங்களாக அமைதியாகவே இருந்தது. இதற்கிடையில், கடந்த வாரம் க்ரூஸ் ரக ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்திருப்பதாகத் தெரிவித்தது தென்கொரியா. இதையடுத்து செப்டம்பர் 15-ம் தேதியன்று இரண்டு பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை, புதிய முயற்சியாக ரயிலிலிருந்து ஏவியிருக்கிறது வடகொரியா. இந்த ஏவுகணைகள் ஜப்பானை நோக்கி 800 கி.மீ தூரத்துக்குச் சென்று, கொரிய தீபகற்பத்துக்கும், ஜப்பானுக்கு இடையில் கடலில் விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.

பாலிஸ்டிக், க்ரூஸ் வித்தியாசம் என்ன?

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் அதிக அளவிலான அணுகுண்டுகளைச் சுமந்துகொண்டு, வெகு தூரத்தைச் சில நொடிகளில் சென்றடையும் திறன்கொண்டவை. அதுவே க்ரூஸ் ரக ஏவுகணைகள் அணுகுண்டுகளைச் சுமந்துகொண்டு மெதுவாக, தாழ்வாகச் செல்லக்கூடியவை. ``கண்காணிப்பு வளையத்தில் சிக்காமல் செல்லும் க்ரூஸ் ரக ஏவுகணைகள், எதிர்பாராத திசையிலிருந்து தாக்கக்கூடியவை. எனவே, அதை இடைமறித்துத் தடுக்கவே முடியாது'' என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
தென்கொரியா ஏவுகணை பரிசோதனை

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளைச் சோதனை செய்ய வடகொரியாவுக்குத் தடை விதித்திருந்தது ஐ.நா சபை. இருந்தும் ஒரே நாளில் இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்திருக்கிறது வட கொரியா. க்ரூஸ் ரக ஏவுகணை சோதிக்கப்பட்ட சில நாள்களில், பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளும் சோதிக்கப்பட்டிருப்பதால், மீண்டும் ஏவுகணைத் தயாரிப்பு, அணு ஆயுதப் பயன்பாடு உள்ளிட்டவற்றை வடகொரியா அரசு தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், `ஏவுகணை சோதனைகள் பாதுகாப்பு காரணம் கருதிச் செய்யப்பட்டது' என வட கொரிய வட்டாரங்கள் கூறியிருப்பது, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைக் கவலையடையச் செய்திருக்கிறது. ``அணுகுண்டுகளை ஏவுகணைகள் மூலம் செலுத்து தயாராக இருப்பதைத்தான் `பாதுகாப்பு காரணம்' என்று நாசுக்காக வட கொரியா குறிப்பிடுகிறது'' என்கிறார்கள் அணுசக்தியில் அறிவாற்றல் கொண்டவர்கள்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார், கோமாவிலிருக்கிறார் என்கிற வதந்திகள் ஒருபுறம் பரவிக் கொண்டிருக்க, மறுபுறம் உணவுப் பஞ்சமும், பொருளாதார சிக்கலும் வட கொரியாவில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இருந்தும், எங்களிடம் ஆயுதத் தொழில்நுட்பங்களில் எந்தக் குறையும் இல்லை என உலக நாடுகளுக்குக் காட்டிக் கொள்ளவே இந்த ஏவுகணைகள் சோதனையை வட கொரியா நடத்தியிருப்பதாகத் தெரிகிறது.

முதல் தென் கொரிய ஏவுகணை!

செப்டம்பர் 15 அன்று வட கொரியா, ஏவுகணைகளைச் சோதனை செய்த சில மணிநேரங்களில், தென் கொரியாவும் தன் பங்குக்கு பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றைச் சோதனை செய்தது. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தென் கொரியா செய்த இந்த சோதனைதான், அந்த நாட்டின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை சோதனை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், வட கொரியா, இந்தியா ஆகிய நாடுகளிடம் மட்டுமே நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செலுத்தும் பலம் இருந்தன. தற்போது முதன்முறையாக இந்தச் சோதனையைச் செய்து, `எங்களிடமும் நீர்மூழ்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் பலம் இருக்கிறது' என்பதை உலகுக்குச் சொல்லியிருக்கிறது தென்கொரியா!

வடகொரியா - தென்கொரியா அதிபர்கள்

Also Read: வடகொரியா: கோமாவில் அதிபர் கிம் ஜாங் உன்... ஆட்சிப் பொறுப்பில் இருப்பது யார்?

இந்தச் சோதனையில் பங்குகொண்ட தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in), ``எந்த நேரத்திலும் வட கொரியாவுக்குப் பதிலளிக்க எங்களிடம் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன'' என்றிருக்கிறார். இதன்மூலம், தொடர்ந்து வட கொரியாவைச் சமாளிப்பதற்காக தென்கொரியாவும் ஆயுத தொழில்நுட்பங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பது தெரியவருகிறது.

காலம் காலமாக முட்டி மோதிக்கொள்ளும் வட கொரியாவும், தென் கொரியாவும் இம்முறை ஏவுகணைகளைப் பதிலுக்குப் பதில் விண்ணில் செலுத்தியிருப்பது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

``வட கொரியா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே யார் பலம் பொருந்தியவர்கள் என்பதை நிரூபிப்பதில் போட்டி நிலவுகிறது. இந்த இரு நாடுகளுக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்துவது அவசியம். இல்லையென்றால், இது உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்'' என்கிறார்கள் கொரிய அரசியலை உற்றுநோக்குபவர்கள்!

ஆபத்தாகும் அணு ஆயுதங்கள்!

ஆண்டுதோறும் செப்டம்பர் 26-ம் தேதி, `அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் தின'மாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் அனுசரிக்கப்படும் அதே மாதத்தில் அணு ஆயுத ஏவுகணைகளைச் சோதனை செய்திருக்கின்றன வட கொரியாவும், தென் கொரியாவும். ``வல்லரசு நாடுகள் ஒன்றிணைந்து இவ்விரு நாடுகளுக்குமிடையே அமைதி நிலவ பாடுபட வேண்டும். இல்லையென்றால், இதுவே மூன்றாம் உலகப் போருக்கான அடிக்கல்லாக அமைந்துவிடும்'' என எச்சரிக்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

அணு ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கு சாட்சியாக ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் இன்றும் அதற்கான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. சூற்றுச்சூழலை நஞ்சாக்கி, அடுத்தடுத்த தலைமுறைகளை கதிர்வீச்சின் மூலம் அவதிக்குள்ளாக்கும் அணு ஆயுதங்கள் வேண்டாம் என்பதுதான் சுற்றுச்சூழலியளாலர்களின் கருத்தாக இருக்கிறது.

அமெரிக்க அதிபர் பைடன் - ரஷ்ய அதிபர் புதின்

Also Read: `கொரோனா அச்சுறுத்தல் முதல் வடகொரியா மோதல் வரை!’– அதிபராக ஜோ பைடனின் சவால்கள் என்னென்ன?

``உலக அமைதிக்காக பாடுபடுகிறோம் என்கிற போர்வையில், அமெரிக்காவும், ரஷ்யாவும் தனது ஆதரவு நாடுகளுக்கு அடிக்கடி அணு ஆயுதங்களை பரிசளித்து, உலகம் முழுவதும் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அணு ஆயுதங்கள், அதைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் என உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களையும் ஒழித்துக்கட்டினால் மட்டுமே உலக சமாதானத்துக்கு வழி வகுக்க முடியும். ரஷ்யாவும், அமெரிக்காவும் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்'' என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-north-korea-vs-south-korea-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக