சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். ஈசனே மலையாகக் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்பு மிக்க தலம். இங்குள்ள 14 கி.மீ அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பௌர்ணமி அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு, அவரின் அருளை பெற்று செல்வார்கள். கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதமும் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 05.51 வரையில் திருவண்ணாமலை கிரிவல சுற்றுவட்டப்பாதையில் பௌர்ணமி கிரிவலம் யாரும் வர வேண்டாம் என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read: 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! வரலாறு சொல்வது என்ன?
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாம் அனைவரும் வீட்டில் இருந்தபடியே எம்பெருமான் அருணாச்சலேஸ்வரரை மனமுருக வேண்டி அவரின் முழு அருளையும் பெறுவோம்.
source https://www.vikatan.com/spiritual/news/the-district-collector-orders-to-ban-full-moon-day-giriwalam-in-thiruvannamalai-this-month-too
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக