Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

AKS - 9|சிவா Vs காயத்ரி… சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது யார்?

தனது கூட்டுக்குடும்பத்தில் எல்லாவற்றுக்கும் பணிந்து மறுபேச்சு பேசாமல் சென்ற காயத்ரி பொது இடத்தில் முன் அறிமுகம் இல்லாதவர்களிடத்தில் சகிப்புத்தன்மை இன்றி இருக்கிறாள். ஆனால், சகிப்புத்தன்மை இல்லை என்று மனநல மருத்துவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்லும் சிவா தன்னை வெறுக்கும் காயத்ரியின் நிலையைக் கூட புரிந்து அவளுக்காக யோசிக்கிறான்.

“இந்த மாதிரி விஷயத்தில் எல்லா ஆண்களின் மனநிலையும் ஒரே மாதிரி தான் இருக்கும். அவங்க Manufacturing-ஏ அப்படித்தான். பொண்ணுங்களை பொருத்த வரைக்கும் நம்ம வீட்டு ஆளுங்ககிட்டதான் ரொம்ப கவனமா பேசணும்... ஊரு, உலகம், ரூல்ஸ்னு பேசி நம்மை எதுவுமே செய்ய விடமாட்டாங்க” என்ற காயத்ரிக்கு புனிதா அட்வைஸ் செய்வதில் களேபரமாக தொடங்குகிறது ‘ஆதலினால் காதல் செய்வீர்' 9-வது எபிசோட்.

ஆண்களை இப்படி பொதுமைப்படுத்துவதில் உடன்பாடு இல்லைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் #NotAllMen என்று சொல்லும்போது #YesAllMen என்று சொல்வது போல ஏதாவது சம்பவம் நடந்து நம் உறுதியை அசைத்துப் பார்க்கிறது.

AKS - 9| ஆதலினால் காதல் செய்வீர்

இளம் வயதில் முதல் காதலின் தொடக்கத்தின்போது தனக்கு காதல் உறவில் சுதந்திரம் இருப்பது போல தெரிந்தாலும் பின்னாட்களில் பொசசிவ்னெஸ் உருவாகி பெரும்பாலான காதல்கள் பிரிந்ததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கிறது. அதேபோல் திருமணமான புதிதில் மனைவி வெளிப்படையாக இருப்பதற்கு, அவளது கடந்த காலத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு ஸ்பேஸ் இருப்பதாக சொல்லும் ஆண்கள், அவள் தனது நண்பர்கள் அல்லது பழைய காதல் பற்றி சொன்ன பிறகு பொசசிவ்னெஸ் உருவாகி அவளை கண்காணிக்க ஆரம்பிப்பதும் அதிகளவில் நடக்கிறது.

திருமண வாழ்வில் சில வருடங்கள் கழிந்து, சுக துக்கங்களை ஒன்றாக பகிர்ந்து கொண்ட அனுபவத்தில் மனைவியின் மேல் நம்பிக்கை ஏற்படும். ஆனாலும் மனதின் ஒரு மூலையில் இந்த உடைமை எண்ணம் எப்போது வேண்டுமானாலும் பாய காத்திருக்கும் விலங்கைப் போல பதுங்கி இருக்கும்.

”பெண்களுக்கு அறிவு கிடையாது, சமையல் தாண்டி எதுவும் தெரியாது, இந்த பெண்களே இப்படித்தான்” என்றெல்லாம் ஆண்கள் பொதுமைப்படுத்தி வைத்திருப்பதைப் போல, “ஆண்களே இப்படித்தான்” என்று பெண்களும் சிலவற்றை பொதுமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆண்களை கண்டு பயப்படுவது மட்டுமே.

புனிதா காயத்ரியிடம் சொல்வதை போன்று பல பெண்களுக்கும் வீட்டில் மூத்தவர்கள் தங்கள் அனுபவங்களின் மூலம் ஆண்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். அதன் விளைவாக பெண்கள் தனது பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்கள் பற்றிய சாதாரண விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ள அஞ்சி மறைத்து விடுகிறார்கள். பெண்கள் தங்களது உடைமை இல்லை என்று ஆண்களும், தாங்கள் ஆண்களுக்கு அடிமை இல்லை, தவறு செய்யாத போது எதையும் மறைக்க தேவையில்லை என்று பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

AKS - 9| ஆதலினால் காதல் செய்வீர்

எல்லோருக்கும் புனிதா பார்ட்டி கொடுக்க உணவகம் அழைத்து செல்கிறாள். உணவகத்தில் சிவாவின் பக்கத்து இருக்கை காயத்ரிக்கு அமைகிறது. சிவா மது அருந்துவதை பார்த்து காயத்ரி முகம் சுளிப்பதை கண்ட கவிதா, பாண்டியனையும் காயத்ரியையும் இடம் மாறி உட்காரச் செய்கிறாள். இடம் மாறி உட்கார்ந்தும் சிவா மது அருந்துவதையும், சிக்கன் சாப்பிடுவதையும் கண்டு முகம் சுளித்துக்கொண்டே இருக்கிறாள் காயத்ரி. தனக்கு சைவ உணவு ஆர்டர் செய்யும் காயத்ரி, மற்றவர்கள் அசைவம் உண்பதை கண்டு அருவருப்பு கொள்வது போல முகத்தை வைத்துக் கொள்கிறாள். அடுத்தவர் உண்ணும் உணவை பழிப்பது, கேவலமாக பேசுவது அநாகரீகம் மட்டுமல்ல அதில் யாருக்கும் உரிமையும் கிடையாது.

60 பேர் படித்த வகுப்பில் மதிய உணவின்போது வாரம் ஒரு முறை கருவாட்டு குழம்பு கொண்டு சென்று அதே இருக்கையில் உட்கார்ந்து சாப்பிட்டபோது ஒரு முறைகூட யாரும் முகம் சுளிக்கவில்லை என்பதை இந்த காட்சியை கண்டபோது மகிழ்ச்சியாக நினைவுகூற முடிந்தது.

உணவகத்தில் பக்கத்து மேசையில் இருந்த இளைஞன் காயத்ரியை செல்போனில் படம் பிடித்து தன்னுடைய நண்பர்களுக்கு காட்டி கொண்டிருக்கிறான். அதை கவனித்த சிவா எழுந்து சென்று அவனுடன் சண்டையிடுகிறான், ஆனால், காரணத்தை யாரிடமும் சொல்ல மாட்டான்.

சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு கிளம்ப கால் டாக்சிக்கு காத்திருக்கும் சமயம், மருத்துவர் சொன்னதை மறந்து சிவா கோபப்பட்டதை பற்றி வருத்தத்துடன் கேட்பான் பரத். சிவா உண்மையில் தான் எதற்காக அந்த இளைஞனை அடித்தேன் என்று சொல்வேன். இந்த உண்மையை அங்கேயே சொல்லி இருக்கலாமே என்று கேட்கும் பரத்திடம், ”காயத்ரி ஆசைப்பட்டு வேலைக்கு போக வந்திருக்கா... முதல் நாளே இதுபோன்ற பிரச்னை என்றால் திரும்பி போய்விடுவாள். அதனால்தான் சொல்லவில்லை” என்பான் சிவா.

AKS - 9| ஆதலினால் காதல் செய்வீர்

ஆக்ரோஷமான கதாநாயகனுக்கு மென்மையான இன்னொரு பக்கம் உண்டு என்றும், கதாநாயகியுடன் மோதலில் ஆரம்பித்தாலும் பின் அவள் மேல் நாயகனுக்கு அக்கறை இருக்கும் என்பதும் வழக்கமான தமிழ் சினிமா காட்சிதான். என்றாலும் சிவா பரத்திடம் காயத்ரியின் மீது அக்கறையுடன் பேசிய அந்தக் காட்சியில் காண்பவர்கள் மனதில் இவ்வளவு நாட்களாக தான் உண்டாக்கிய கோபத்தை, அதிருப்தியை தானே களைந்து ரசிக்க செய்கிறான் சிவா.

கால் டாக்ஸியில் ஏறியவுடன் அதுவரை புகை பிடித்துக் கொண்டிருந்த சிவாவின் மீதிருந்து சிகரெட் வாசம் வருகிறது. காயத்ரி சட்டென்று காரில் இருந்து இறங்கி, வேறு டாக்ஸி புக் செய்யுமாறு சொல்கிறாள். இதைக்கண்ட சிவா காரில் இருந்து இறங்கி நடந்து செல்கிறான். அவனும் பரத்தும் தனியாகவும், மற்றவர்கள் ஒன்றாகவும் வீடு வந்து சேர்கிறார்கள்.

புகை வாசத்துடன் ஒரே காரில் பயணம் செய்ய இயலவில்லை என்றால், காயத்ரி அதை பொறுமையாக புனிதாவிடம் சொல்லி வேறு கால் டாக்ஸி புக் செய்ய சொல்லி இருக்கலாம். எல்லோர் முன்னிலையிலும் சிவாவை அவமானப்படுத்துவது போல பேசிவிட்டு காரிலிருந்து இறங்கி விடுகிறாள். சுந்தருக்கும் காயத்ரிக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. சுந்தர் எப்படி தான் சரியாக இருப்பதால் காயத்ரியும் சரியாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறானோ அதையேதான் காயத்ரியும் மற்றவர்களுக்கு செய்கிறாள்.

புனிதா பரத்துக்கு சாப்பிடும்போது ஊட்டி விடுவதும், புனிதாவின் தட்டிலிருந்து அவள் மீதம் வைத்ததை பரத் எடுத்து சாப்பிடுவதையும் கண்டு அதிர்ச்சியாகும் காயத்ரி, புனிதா லிவ்-இன் உறவில் இருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்வாளா?

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinaal-kaadhal-seiveer-digital-series-episode-9-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக