Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

`அது பெரியார் விருப்பம்’ - கருணாநிதி சிலையும் இடிக்கப்பட்ட கதையும்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்குச் சென்னை அண்ணாசாலையில் சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, அண்ணா சாலையில் ஏதாவது ஓரிடத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” என அறிவித்திருக்கிறார். திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் கோரிக்கையை அடுத்து பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கலைஞருக்குச் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் உத்தரவு. சிலை அமைப்பதற்காக ஏற்கெனவே அனுமதி பெற்றிருப்பதால் புதிதாக அனுமதி வாங்கவும் தேவையில்லை. முன்னர் சிலை இருந்த இடத்திலேயே மீண்டும் சிலை அமைப்பதால் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை” எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியிருக்கிறார். ஆம், கலைஞர் கருணாநிதிக்குச் சிலை அமைக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் விருப்பம்.

பெரியார் கருணாநிதி

1968 ஜனவரியில் சென்னையில் அறிஞர் அண்ணா தலைமையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் நினைவாக மெரினாவில் காந்தி, காமராஜர் உள்ளிட்ட 10 தலைவர்களின் சிலைகள் நிறுவப்பட்டன. அந்த மாநாடு முடிந்த கையோடு, அப்போதையை முதலமைச்சர் அண்ணாவுக்கும் அப்போதைய மவுண்ட் ரோடு இப்போதைய அண்ணாசாலையில் சிலை திறக்கப்பட்டது.

Also Read: கருணாநிதி சிலை முதல் அங்கன்வாடி கட்டடத்துக்கு மின்சாரம் வரை - இன்றைய சட்டசபை ஹைலைட்ஸ்!

அண்ணாவுக்குச் சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதிக்கும் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கோரிக்கை வைத்து, அனுமதியும் பெற்றார் தந்தை பெரியார். ஆனால், கருணாநிதிக்குச் சிலை வைப்பதற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. “சிலை வைக்கும் தந்தை பெரியாரின் முயற்சி தேவையில்லாதது. சிலை வைக்கும் அளவுக்குத் தான் தகுதி பெற்றவன் அல்ல” என்று கலைஞரே மறுத்து அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 1968-ஆம் ஆண்டு மே மாதம் 28, 29 ஆகிய இரண்டு தேதிகளில் வெளியான விடுதலை இதழில் கருணாநிதி சிலை விமர்சிப்பது அயோக்கியத்தனம் எனவும் முட்டாள்தனம் எனவும் சின்னத்தனமான அற்பப்புத்தி எனவும் கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார். அண்ணா மறைவுக்குப் பிறகு, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி பெரியார் திடலில் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்ட தந்தை பெரியார், “யார் யாருக்கோ சிலை இருக்கிறது. செயற்கரிய செயல்களைச் செய்த முதல்வர் கலைஞருக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும்” என இரண்டாவது முறையாகக் கருணாநிதிக்குச் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்த கோரிக்கையை மேடையில் அமர்ந்திருந்த குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட பலர் ஆமோதித்தனர்.

அண்ணா- கருணாநிதி

சிலை அமைக்கும் குழுவுக்குப் புரவலர் தந்தை பெரியார், தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி. துணைத் தலைவர்கள்: நெ.து.சுந்தரவடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்), மேயர் சா.கணேசன், ஏ.என்.சட்டநாதன், செயலாளர் கி.வீரமணி அடங்கிய கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் பெரியார் அதே மேடையில் அறிவித்ததோடு முதல் நபராக நன்கொடை கொடுத்து பணியையும் ஆரம்பித்து வைத்தார்.

திகைத்துப்போன கலைஞர் கருணாநிதி பெரியாரின் கோரிக்கையை எப்படி நிராகரிப்பது என்று தெரியாமல், “திமுக சார்பில் பெரியாருக்கு முதலில் ஒரு சிலை அமைக்கிறோம், அதன் பின்னர் எனக்குச் சிலை வைப்பதைக் குறித்துச் சிந்திக்கலாம்” எனத் தட்டிக் கழித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1973-ஆம் ஆண்டு பெரியார் மறைவுக்குப் பின் திமுக சார்பில், சென்னை அண்ணாசாலையில், கூவம் நதிக் கரையில், சிம்சன் அருகில் அதாவது தற்போது அமைந்துள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலுக்கு எதிரில் பேராசிரியர் க.அன்பழகன், மணியம்மை முன்னிலையில், பெரியார் சிலையைக் கருணாநிதி திறந்து வைத்தார். அந்தச் சிலை திறப்பு விழாவில் பேசிய அப்போதைய தி.க. தலைவர் மணியம்மை, “அன்று நீங்கள் சொன்னபடியே பெரியாருக்குச் சிலை அமைத்துவிட்டீர்கள். அதேபோல் இனியும் தட்டிக்கழிக்காமல் பெரியார் ஆசைப்பட்ட படி உங்களுக்குத் திராவிட கழகம் சார்பில் அண்ணா சாலையில் சிலை எழுப்பப்படும் இதற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிக்கக்கூடாது” என அன்பாகக் கட்டளையிட்டார்.

விடுதலை தலையங்கம்

இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்ணா சாலையில் தர்கா அருகில் இரண்டு விரல்களை மடக்கி மூன்று விரல்களை நீட்டின மாதிரி இருக்கும் கலைஞர் கருணாநிதியின் ஆள் உயரச் சிலை அமைக்கப்பட்டு 1975-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி மணியம்மை தலைமையில் குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார். குறை மனத்துடன் திறந்ததாலோ என்னவோ... அச் சிலை, நீண்ட காலம் நீடிக்காமல் போனது.

மற்ற தலைவர்களுக்கு வைக்கப்பட்ட சிலைகள்போல இல்லாமல் நீண்ட கல்லறை வடிவிலான மேடையின் மேல் முப்பதுகளின் இறுதியில் இருக்கிற இளம் கருணாநிதியின் உருவத்தைச் சிலையாக நிறுவியிருக்கிறார்கள். இந்த சிலை திறப்புக்கு அதிமுக சார்பில் தடை விதிக்க வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் திராவிட கழகம் வெற்றியடைந்து சிலையை நிறுவியிருக்கிறார்கள். அது ஒரு தனிக்கதை.

சிலை நிறுவி 12 ஆண்டுகள் கழித்து, 1987 டிசம்பர் 24-ஆம் தேதி எம்.ஜி.ஆர் மரணமடைந்தபோது, சென்னை மாநகரம் முழுக்க வெடித்த கலவரத்தில் அ.தி.மு.க-வினர் சிலர் கருணாநிதியின் சிலையைக் கடப்பாரையால் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை “கலைஞர் சிலைமீது முதலில் செருப்பு வீசப்பட்டது. அடுத்து கல். கலைஞர் சிலை அப்படியே இருந்தது. உடனே ஒருவர் அருகிலிருந்த ஒயின் ஷாப்பிலிருந்து பலகையொன்றை எடுத்து வந்து சாய்வாகப் போட்டு அதன்மூலம் மேலே ஏறினார். சுற்றிலும் கூட்டம் கூடியது - சில போலீஸார் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மேலே ஏறிய நபரின் கையில் ஒரு கம்பு கொடுக்கப்பட்டது. அதை வைத்துச் சிலையைத் தட்டிப்பார்த்தார். வெண்கலத்தாலான சிலை என்பதால் அந்தத் தட்டலுக்கு அசைந்து கொடுக்கவில்லை. அதற்குள் ஐந்தாறு பேர் பீடத்தில் ஏறிவிட்டார்கள்.

கருணாநிதி சிலை

எங்கிருந்தோ ஒரு கடப்பாரை வர அதன்மூலம் முதலில் முதுகுப் பக்கம் துளை ஏற்படுத்தப்பட்டது. யாரோ ஒருவர் இது தீயிலே உருகிடும்ப்பா... என்று கூற ஐந்தாவது நிமிடம் கார் மற்றும் சைக்கிள் டயர்கள் வந்தன. அதைக் கொளுத்தித் சிலையில் போடப்பட்ட துவாரத்தினுள் போட்டுப்பார்த்தார்கள். ஆனாலும் சிலை உருகவில்லை. சூடேறி இறுக்கம் மட்டும் தளர்ந்திருக்கிறது. கடப்பாரையால் மேலும் மேலும் இடித்ததில் சிலை உடைந்தது. அடுத்த கணம் அந்த இடத்தில் ஏற்பட்ட கரகோஷம் விண்ணைப்பிளந்தது நிஜம்.

மேலும், உடைக்கப்பட்ட கலைஞரின் சிலையருகே இரண்டு நபரின் உடல்கள் கிடந்தன. உடம்பெங்கும் ரத்தமயம். யார் அவர்கள்? எப்படி இறந்தார்கள்? யாருக்கும் தெரியவில்லை. தெரிந்துகொள்ள யாரும் ஆர்வம் காட்டவுமில்லை. கடைசியில் நாளிதழ் நிருபர் ஒருவர் போய் ஐ.ஜி-யிடம் விஷயத்தைச் சொல்ல, பின்னர் பிணங்கள் அகற்றப்பட்டன” என அப்போது வந்த ஜூனியர் விகடனில் எழுதியிருக்கிறார்கள்.

இந்த செய்தி அறிந்து திமுக தொண்டர்கள் ஆத்திரமடைந்தார்கள். கலைஞர் கருணாநிதியின் சிலை உடைக்கப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கருணாநிதியோ

"உடன்பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத் தம்பி

என் முதுகில் குத்தவில்லை,

நெஞ்சிலேதான் குத்துகிறான்

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!!"

என, அப்போது முரசொலியில் எழுதினார்.

குறை மனத்துடன் திறந்ததாலோ என்னவோ... அச் சிலை, நீண்ட காலம் நீடிக்காமல் போனது.

ஒருவேளை அந்தச் சிலை இடிக்கப்படாமலிருந்தால் அண்ணாசாலையின் தொடக்கத்தில் பெரியார் சிலை அங்கிருந்து கால் கி.மீட்டரில் ரிச்சி ஸ்ட்ரீட் அருகே அண்ணாவின் சிலை.. அங்கிருந்து கொஞ்சதூரம் தேவி தியேட்டர் தாண்டிவந்தால் இப்போது இருக்கும் புகாரி ஹோட்டல் அருகே கலைஞர் சிலை. இன்னும் கொஞ்சம் எல்ஐசி தாண்டி வந்தால் ஸ்பென்சர் அருகே எம்ஜிஆர் சிலை எனத் தமிழக அரசியல் வரலாறு சரியான வரிசையிலிருந்திருக்கும். அதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-behind-the-karunanidhi-statue-demolish

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக