அலுவலகத்தில் சிவாவிடம் வேலையில் சந்தேகம் கேட்கிறாள் காயத்ரி. அதை சொல்லிக் கொடுக்கும்போது காயத்ரியின் கணினி திரையில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை பார்த்துவிட்டு அது யார் என்று கேட்கிறான். காயத்ரி, அது தனது அம்மா என்று சொல்கிறாள். காயத்ரி அலுவலகத்தின் விதிகளை மீறிவிட்டதாக எல்லோர் முன்னிலையிலும் சிவா கோபப்பட்டு சத்தம் போடுகிறான். அவள் அவமானமாக நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அழுகிறாள்.
பெண்கள் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள் என்பது பொதுக்கூற்று. சிவா காயத்ரியை பார்த்து சொல்வதுபோல பள்ளி வயதிலேயே பெண்கள் அலுவலக வேலைக்கு வந்துவிடுவது இல்லை. கல்லூரி முடித்து 21-22 வயதில் வேலைக்கு வருகிறார்கள். அலுவலகத்தில் மற்றவர்கள் பேசுவதற்கு எல்லாம் எளிதில் உணர்ச்சிவசப்பட தேவையில்லை. அதற்கான மனமுதிர்ச்சி கல்லூரியிலேயே வந்திருக்க வேண்டும். அதுபோக நம் குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மை நடத்துவது போல வெளியில் இருப்பவர்களும் நம்மை புரிந்து அனுசரித்து நடந்து கொள்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு தவறு. சிவாவை போல எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆட்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கோபப்பட்டு திட்டுவது அவர்களுக்குத்தான் களங்கமே தவிர எதிரில் உள்ளவர்களுக்கு இல்லை.
சாதாரண விஷயங்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரி சத்தம் போடும்போது அதை கண்டுக்காமல் செல்லலாம் அல்லது அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். சிவா கத்தும்போது காயத்ரி, சாதாரணமாக சொல்லாமல் எதற்கு கத்துகிறீர்கள் என்று நேரடியாக கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து காயத்ரி அலுவலகத்தில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறாள். தனது புறத்தோற்றத்தை ஒரே நாளில் மாற்றிக்கொண்டது போல மனரீதியாகவும் தன்னை மாற்றிக்கொண்டு சிவாவை தைரியமாக எதிர்கொள்ளவாள் என நம்புவோம்.
பல பெண்கள் அலுவலகத்தில் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளுக்காக வீட்டில் வந்து அழுவதை பார்க்கலாம். பொதுவாக நம் குடும்பங்களில் பெண் பிள்ளைகளை அடித்து, திட்டி வளர்க்க மாட்டார்கள். அப்படி பழகியவர்களுக்கு கல்லூரியில் அல்லது அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் திட்டு வாங்கும்பொழுது அதை அவமானமாக கருதுகிறார்கள். கல்லூரிப் படிப்பு முடிக்கும்போதே பெண்களுக்கு வெளியுலகை எதிர்கொள்வதற்கான மன முதிர்ச்சியும் இருக்க வேண்டும். காயத்ரியைப்போல தனியாக வெளியூரில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நிச்சயமாக வெளியில் இருக்கும் விதவிதமான மனிதர்களை எதிர்கொள்ளும் தைரியமும், துணிவும் இருக்க வேண்டும்.
வேலையில் தவறு நடந்ததை ஒட்டி தனது டீமில் இருப்பவர்களிடம் கடுமையாக பேசிவிடுகிறாள் புனிதா. கோபமாக இருக்கும் அவள், தனக்கு அந்த நாள் மிக மோசமானதாக இருப்பதாகவும் என்ன செய்வது எனத் தெரியவில்லை என்றும் பரத்துக்கு வாட்ஸ்அப் செய்கிறாள். சிறிது நேரத்தில் தன் அறையில் புனிதாவுக்கு பரத் ஆர்டர் செய்திருந்த காபி வந்திருக்கிறது. கூடவே Have a Nice Day என்கிற செய்தியும் அதில் இருக்கிறது. புனிதா சட்டென இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி அடைகிறாள்.
இது மிகச்சிறிய விஷயம்தான். தன்னுடைய நாள் சரியில்லை என்று வேலை நேரத்தில் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் பகிர்ந்து கொள்ள யாராவது இருக்கிறார்கள் என்பதே மிகப்பெரிய ஆறுதல். இன்றைய சூழ்நிலையில் அப்படி பகிர்ந்து கொள்ளும்போது உடனடியாக அதற்கு எதிர்வினையாக மனநிலையை சரி செய்ய காபி ஆர்டர் செய்வதெல்லாம் பல பெண்களுக்கும் இங்கு கிடைக்காத Luxury!
பொதுவாக பெண்களை விட ஆண்களே கடினமான வேலை செய்பவர்களாகவும், ஆண்களின் வேலை நேரத்தில் பெண்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதும் இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் கூட எழுதப்படாத விதியாக இருக்கிறது. அப்படி இருக்க புனிதாவுக்கு அலுவலகத்தில் நடக்கும் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பவனாகவும், உடனடியாக காபி வடிவத்தில் சிறிது அன்பை அனுப்பி வைப்பவனாகவும் பரத் இருப்பது ரசிக்க வைக்கிறது.
பெண்களுக்கு நிறைய பணம் செலவழித்து பெரிய பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது ஆண்களின் கூற்றாகவும், அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி என்னுடன் ஒரு காபி அருந்தினால் போதும் என்பது பெண்களின் கூற்றாகவும் காலம் காலமாக இருந்து வருகிறது. இன்று பெண்கள் சுய வருமானத்துடன் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர்களே வாங்கிக் கொள்ள முடியும். தேவையெல்லாம் அவர்களுடைய பிரச்னைகளை கேட்கும் காதுகள்தான். பரத் செய்தது போல ஒரு காபி ஆர்டர் செய்வது சின்ன விஷயமாக இருந்தாலும் அது ஒரு நாளையே மாற்றிக் காட்டும் வல்லமை கொண்டது.
Also Read: AKS - 18 | எல்லா உறவுக்கும் ஏன் அவசரமாக ஒரு லேபிள் ஒட்டப் பார்க்கிறோம்?
கவிதாவும் பாண்டியனும் இரவு உணவு சமைப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கவிதா சமைப்பதற்கு காய்கறிகளை நறுக்கிக் கொண்டு இருக்கிறாள். தான் சிவாவுக்குச் சேர்த்து சமைக்க முடியாது என்று கூறும் காயத்ரியிடம், புனிதா அலுவலக பிரச்னையை வீட்டுக்குக் கொண்டுவர தேவையில்லை என்கிறாள். காலையில் சிவா காயத்ரியை திட்டிவிட்டதை தொடர்ந்து அவள் சமைக்கும் உணவை சாப்பிட வேண்டாம் என்று வரும்போது தனக்கான உணவை வாங்கிக் கொண்டு வருகிறான். அதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சிவாவுக்கு எளிதில் கோபம் வருகிறது என்பது பெரிய குறைதான். ஆனாலும் முதல் நாள் உணவகத்தில் நடந்த பிரச்னையின்போது அதை காயத்ரியிடம் சொல்ல வேண்டாம் என்று பரத்திடம் சொல்லும்போதும் சரி, அலுவலகத்தில் அவளை திட்டிவிட்டதற்காக அவள் தனக்காக சமைப்பது அவளுக்கு எரிச்சலாக இருக்கலாம் என்பதால் பார்சல் வாங்கி வந்ததும் சரி, சிவாவிடம் முன்கோபத்தை தவிர்த்துப் பார்த்தால் அவனும் மற்றவர்களை கவனித்து, புரிந்து நடந்து கொள்கிறான்.
புனிதாவிடம் இயர்போன்ஸ் கேட்கிறாள் காயத்ரி. புனிதா தனது கைப்பையில் இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள சொல்கிறாள். புனிதாவின் கைப்பையில் பெண்கள் பயன்படுத்தும் கர்ப்பத்தடை சாதனம் இருப்பதை பார்த்து காயத்ரி அதிர்ச்சியடைகிறாள். புனிதா வாழ்க்கையில் தரங்கெட்டு போய்விட்டதாக காயத்ரி நினைக்கிறாள். இரவு புனிதா அறைக்கு வரும்போது காயத்ரி தூங்குவது போல நடிக்கிறாள். அவர் தூங்கிவிட்டதாக நினைத்து புனிதா பரத்தின் அறைக்குச் செல்கிறாள். விடிந்ததும் புனிதா வரும்போது காயத்ரி தூங்காமல் காத்திருக்கிறாள். அதைப் பார்க்கும் புனிதா அதிர்ச்சியாகிறாள். பரத்தின் அறையில் இருந்து திரும்பும் புனிதாவிடம் காயத்ரி ஒரு கலாசார காவலர் ஆட்டிட்யூடில் கேள்வி கேட்கிறாள்.
பரத்தும், புனிதாவும் 18 வயது நிரம்பியவர்கள். இந்தியாவில் 18 வயது நிரம்பிய இருவர் திருமணமாகாமல் சேர்ந்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை. அப்படி இருப்பவர்களை யாரும் ஜட்ஜ் பண்ண தேவையில்லை. காயத்ரி இன்னும் போன நூற்றாண்டு பிற்போக்குத் தனங்களை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு புனிதாவை தவறாக எடை போடுகிறாள்.
காயத்ரியின் மூலமாக புனிதாவை பற்றி அவள் வீட்டுக்குத் தெரிந்துவிடுமா? காயத்ரியை புனிதா எப்படி சமாளிக்க போகிறாள்?
காத்திருப்போம்!
source https://cinema.vikatan.com/web-series/aks-19-why-the-judgmental-attitude-will-spoil-the-relationships
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக