"இராஜதந்திரம் முடிவடையும் போது, போர் தொடங்குகிறது."
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி, கலாசார முன்னேற்றம், நவீன சிந்தனைகள், மேம்படுத்தப்பட்ட சமூகம் என எல்லாவற்றிலும் மேன்மை பெற்றிருந்த ஐரோப்பிய தேசங்கள் மேலும் மேலும் காலனிகளை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள ஆசைப்பட்டன. எல்லா அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தங்களுக்குள்ளேயே போட்டி போடத் தொடங்கின. ஒருவரின் வளர்ச்சி அடுத்தவர் கண்களை உறுத்தியது. செல்வமும் அதிகாரமும் கூடக் கூட தேவையும், பயமும் சேர்ந்தே கூடியது. அதற்குத் தீர்வாக எல்லோருக்குமே ஒரு யுத்தம் தேவைப்பட்டது. ஜெர்மனியிடம் பறிகொடுத்த தன் பாரம்பரியம் மிக்க நிலமும் மரியாதையும் பிரான்சுக்குத் தேவைப்பட்டது. ரஷ்யாவுக்கு பால்கேன் தேவைப்பட்டது. ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு செர்பியா தேவைப்பட்டது. பிரிட்டனுக்கு ஜெர்மனியின் அதிகாரம் தேவைப்பட்டது. ஜெர்மனிக்கு எல்லாரிடமும் இருக்கும் எல்லாமுமே தேவைப்பட்டது. இவ்வாறு ஒரு யுத்தத்தை தொடங்குவதற்கான தேவை ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிடமும் இருந்தது.
மௌரியப் பேரரசின் அசோகருக்கும் கலிங்கத்துக்கும் இடையே நடந்த போரைப் பற்றி நாம் வரலாற்றுப் பாடத்தில் படித்திருப்போம். அந்த வெற்றி அசோகரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. போரின் பயங்கரமான விளைவுகள், அவரது வெற்றியின் விலையையும் அதன் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்கியது. அதே போலத்தான் முதலாம் உலகப் போர் பலம் வாய்ந்த ஜெர்மனியின் வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதில் ஜெர்மனியின் வெற்றியும் தோல்வியும் அதற்காக கொடுக்கப்பட்ட விலையை கேள்விக்குள்ளாக்கியது.
முதலாம் உலகப் போர் ஆரம்பித்த போது ஜெர்மனியைப் பார்த்து ஒட்டுமொத்த ஐரோப்பாவுமே பயந்தது. அப்போது உலகம் எங்கும் பெரும்பாலான காலனிகளை கைப்பற்றி இருந்த பிரிட்டன், மிகச்சிறந்த ராணுவ பலத்தை வைத்திருந்த பிரான்ஸ் போன்ற நாடுகள் கூட ஜெர்மனியை பார்த்து அஞ்சி நடுங்கி பாதுகாப்பு தேடி தமக்குள் கூட்டணி வைத்துக் கொண்டன. இவர்கள் எல்லோரது கண்களிலும் விரலை விட்டு ஆட்டிய ஜெர்மனி வீழ்ந்தது வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய அரசியல் சதுரங்க ஆட்டம்.
சூடு பிடித்த ஜெர்மனியின் ஆட்டம்
“If you want to shine like sun first you have to burn like it” என்பது ஹிட்லரின் ஒரு புகழ்பெற்ற கூற்று. உலகத்தின் சூரியனாக பிரகாசிக்க விரும்பிய ஜெர்மனி தன் தொடர் வெற்றிகளால் அதன் எதிரிகளை முதலில் சுட்டெரிக்கத் தொடங்கியது.
முதல் உலகப் போரில் ஜெர்மனி பல புதிய தொழிநுட்ப யுக்திகளை கையாண்டது. பணபலம், படைபலம், முன்னேற்றமடைந்த தொழில்நுட்பம், நவீன போர் யுக்திகள், மிகத் திறமையான தளபதிகள், அதிக ராணுவ பட்ஜெட் என ஜெர்மனி யாருமே தொட முடியாத தூரத்தில் இருந்தது. முதன் முதலாக நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து நேச நாடுகளின் கடற்படை கப்பல்களை தாக்கியது. அதுவரை உலகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த கடற்படையாகக் கருதப்பட்ட பிரிட்டிஷ் கடற்படையை இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் காலி செய்தது. பிரிட்டனின் கடற்படைக் கப்பல்களை தனது நீர்மூழ்கிக் கப்பல்களால் மூழ்கடித்தது. அதேபோல மெஷின் கன்கள் மூலம் நேச நாடுகளின் வான்படையை தன் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தது. இதுதான் முதலாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம்.
அமெரிக்கரான ஹிராம் மாக்சிம் உருவாக்கிய இயந்திர துப்பாக்கிகள் எதிர்காலத்தில் தமக்கு பேருதவியாக இருக்கும் என ஏற்கனவே கணித்த ஜெர்மனி அவற்றை அதிகளவில் கொள்முதல் செய்து தயாராக வைத்திருந்தது. 1914-ல் யுத்தம் வெடித்தபோது வேறு எந்த நாட்டை விடவும் ஜெர்மனியிடம் மெஷின் கன்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. மறுபக்கம் ஜெர்மன் தயாரித்த போர் விமானங்கள் நேச நாடுகளின் வான்பரப்பில் கழுகாய் மாறி முற்றுகையிட்டன. அதே போல இன்டோரோப்டர் கியர் எனப்படும் புரோப்பல்லர் மூலம் சுடும் புதிய கண்டுபிடிப்பைக் கூட ஜெர்மனியே மேற்கொண்டது. நேச நாடுகளின் நகரங்களில் வெடிகுண்டுகளை வீசுவதற்காக பெரிய குண்டுவீச்சு விமானங்களை உருவாக்கியது. அதே போல முதன் முதலாக பெல்ஜியத்தின் ஃபிளாண்டர்ஸில் விஷ வாயுவையும் ஜெர்மனியே பயன்படுத்தியது.
The Rape of Belgium என்று அழைக்கப்பட்ட பெல்ஜியத்தின் மீதான ஜெர்மனியின் போர்க் குற்றங்களில் அதன் வெற்றியின் விலை புதைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல நகரங்கள் சூறையாடப் பட்டன. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்டனர். நினைத்தாலே நடுங்கச் செய்யும் பல மனிதாபிமானமற்ற அவலங்களை பெல்ஜியத்தில் அரங்கேற்றியது ஜெர்மன் ராணுவம். பலம் குன்றிய பெல்ஜியப் படை முடிந்தளவு தாக்குப் பிடித்து இறுதியில் ஜெர்மன் காலில் மண்டியிட்டது. இது முதலாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் முதல் வெற்றியாக பொறிக்கப்பட்டது. ஆனால், ஜெர்மன் படைகள் பெல்ஜியத்தில் நிகழ்த்திய வெறியாட்டம் அதுவரை நடுநிலை வகித்த நாடுகளை ஜெர்மனிக்கு எதிராகத் திருப்பியது.
மறுபுறம் ஜெர்மனியை வளைத்த ரஷ்யாவை வெற்றிகரமாக பின்வாங்கச் செய்த Battle of Masurian Lake போரில் கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய படைகளைக் கொன்று வெறும் 6 வாரத்திலேயே ரஷ்யாவை விரட்டியடித்தது. இது ஜெர்மனியின் இரண்டாவது பெரிய வெற்றியாக வரிசைப்படுத்தப்பட்டது. இவ்வாறு தொடர் வெற்றிகளை அசால்ட்டாக அடுக்கிக்கொண்டே போனது ஜெர்மன் ராணுவம்.
ஜெர்மன் படை ஆப்பிரிக்காவில் இருந்த பல பிரிட்டன் காலனிகளை தாக்கிக் கைப்பற்ற, அதற்கு மாறாக பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் காலனிகளை தாக்கத் தொடங்கியதான் விளைவு இது வெறும் ஐரோப்பிய யுத்தமாக இல்லாது உலக யுத்தமாக உருவெடுத்தது. எரியும் வீட்டில் பிடிங்கியது லாபம் என சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்த ஏனைய நாடுகளும் தத்தமது பழைய கணக்குகளை தீர்த்துக் கொள்ள களத்தில் குதித்தன.
துருக்கியின் ஓட்டமான் பேரரசு மைய நாடுகளுடன் இணைந்து தனது நீண்ட நாள் எதிரியான ரஷ்யா மீது போர் தொடுத்தது. ஜெர்மனி தன்னை சுற்றி வளைப்பது தெரியாத பிரான்ஸ் பிளான் XVII-ன் படி ஜெர்மனியை தாக்கத் தொடங்கியது. இரு பக்கமும் மிகப்பெரிய இழப்புக்களை ஏற்படுத்திய இந்த தாக்குதலின் இறுதியில் பிரிட்டிஷ் படைகள் பிரெஞ்சு ராணுவத்துடன் இணைந்தது. முதலில் சிறிது தடுமாறிய ஜெர்மனி பின்னர் சுதாகரித்து திருப்பி அடித்ததில் பிரெஞ்சு-பிரிட்டன் படைகள் தெறித்து ஓடின. இது ஜெர்மனிக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்றாலும் பல லட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்டு இருபுறமும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இரண்டு ராணுவமும் தத்தம் படைகளின் உயிரிழப்பு அளவைக் குறைக்க பிரெஞ்சு ஜெர்மன் எல்லையில் மிகப்பெரிய பதுங்கு குழிகளை தோண்டத் தொடங்கின. முதலாம் உலகப் போரின் முதல் நரகம் தோண்டப்பட்டது. வரலாற்றின் மிகவும் கொடூரமான பக்கங்களைக் கொண்ட Trench warfare ஆரம்பமானது.
யூனியன் ஆர்மி ஜெனரல் வில்லியம் டெகும்சே ஷெர்மனின் ‘War is Hell’ என்ற கூற்று உலகப் பிரசித்தி பெற்றது. ஆனால் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி இருந்து சண்டையிட்ட முதலாம் உலகப் போரின் Trench warfare-க்குத் தான் உண்மையிலேயே இக்கூற்று பொருந்தும். பண்டைய காலத்தில் அரச கோட்டைகளையும் அரண்மனைகளையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க பயன்பட்ட இந்த அகழிகள், நவீன ஆயுதங்களின் வருகைக்குப் பின் பல மில்லியன் ராணுவ உயிர்களை காவு வாங்கிய புதை குழிகளாக மாறின. அகழிப் போரின் உச்ச கட்ட கொடூரமாக 1916-ம் ஆண்டு பிரான்சில் நடந்த Battle of the Somme போரைக் குறிப்பிடலாம். பிரிட்டிஷ் துருப்புக்கள் போரின் முதல் நாளில் மட்டும் 60,000 உயிரிழப்புகளை சந்தித்தன.
சுகாதாரமற்ற சூழ்நிலையில் ராணுவ வீரர்கள் அகழிகளினுள் பதுங்கி இருந்து சண்டையிட்டதால் வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வேகமாக பரவின. எலிகள், நச்சுப் பூச்சிகள் ஆகியவை இன்னொருபக்கம் மரண விகிதத்தை கூட்டின. trench foot என அழைக்கப்பட்ட ஒரு வலி மிகுந்த நோயும் வீரர்களை பீடித்தது. தொடர்ச்சியாக பல மாதங்கள் தொடர் ஷெல் தாக்குதல்களுக்கு மத்தியில் வீரர்கள் அந்த பதுங்கு குழிகளுக்குள் இருந்ததால் post-traumatic stress disorder எனும் ஒரு வித மன அழுத்தத்துக்கும் ஆளானார்கள்.
நாள்கள் செல்லச் செல்ல பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என மரண விகிதம் அதிகரித்ததே தவிர இந்தப் போருக்கு ஒரு முடிவு தெரியவில்லை. நாடுகள் மெல்ல மெல்ல சோர்வடையத் தொடங்கின. வீரர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நாட்டின் பண இருப்பு வற்றத் தொடங்கியது. ஐரோப்பாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. வறுமை, உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடத் தொடங்கியது. போரில் பல வீரர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்ததால் பிரிட்டன் போன்ற நாடுகளில் பல இடங்களில் ஆண்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு குறைந்தது.
Also Read: யூரோ டூர் - 5 | பிரிட்டனோடு ஜெர்மனி ஏன் மோதியது, உலகின் முதல் போர் எப்படி இருந்தது?!
இதனால் பெண்கள் குடும்பத்தை நடத்த வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. குழந்தைகள் அனாதைகளானார்கள். ஐரோப்பா முழுவதுமே சமூக கட்டமைப்பு சிதறியது. பிரிட்டன் தனது காலனித்துவ நாடுகளில் இருந்து படைகளை எடுத்து வந்து போரிட ஆரம்பித்தது. இந்தியாவில் இருந்து கூட சுமார் 1,60,000 படை வீரர்கள் போருக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனால் ஐரோப்பாவில் பற்றிய தீ உலகம் முழுவதையும் சுட்டெரித்து சாம்பலாக்க ஆரம்பித்தது.
ஜெர்மனி ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போய் அதுவரை நடுநிலை வகித்த நாடுகளும் மெல்ல மெல்ல ஜெர்மனிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்தன. ஆனாலும் ஜெர்மனியை அசைக்க முடியவில்லை. ஒன் மேன் ஆர்மியாக நின்று வெளுத்து வாங்கியது. சிங்கம் போல தனித்து நின்று வெற்றிகளை குவித்துக்கொண்டே முன்னேறியது ஜெர்மனி. ஆஸ்திரியா-ஹங்கேரி கூட செர்பியாவிடம் பலத்த அடி வாங்கி ஜெர்மனின் பின்னால் ஓடிச்சென்று ஒளிந்து கொண்டது.
ஜனவரி 1915-ல் உலகப் போர் ஆரம்பித்து 5 மாதங்கள் முடிந்திருந்தபோதே கிட்டத்தட்ட 1 மில்லியன் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி மத்தியஸ்தம் வகித்த சமாதான நடவடிக்கை ஊசிப் பட்டாசாக நமுத்து போனது. 1916ன் போது முதலாம் உலகப் போர் ஒரு பழிவாங்கும் போராக மாறியது. நாடுகள் தம் வெற்றியில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு எதிரியை வீழ்த்தினால் போதும் என்ற நிலைக்குப் போனது. இதனால் ஏற்பட்ட மில்லியன் கணக்கான சேதத்தின் விளைவாக நாடுகள் வேறு வழியில்லாமல் ஒன்றான பின் ஒன்றாக சரணடைய ஆரம்பித்தன. இது ஐரோப்பாவின் பிரதான சூப்பர் பவர்களை கண் இமைக்கும் நேரத்திற்குள் அதல பாதாளத்தில் தள்ளியது.
1917-ல் யுத்தம் தொடர்ந்த போது நேச நாடுகளை எதிர்த்து ஒரு நீண்ட பழிவாங்கும் போரை வெல்ல முடியாது என்பது ஜெர்மனிக்கு திட்டவட்டமாக தெரிய ஆரம்பித்தது. குருஷேத்திரப் போரில் சக்கரவியூகத்துக்குள் நுழைந்த அபிமன்யுவான ஜெர்மனி கடைசி நிமிடம் வரை தனித்து ஆடிய விறு விறு நிமிடங்கள், முதல் உலகப் போரின் உச்சக்கட்ட கிளைமாக்ஸ்.
சூடு பிடித்த சதுரங்க ஆட்டத்தில் ஜெர்மனி சறுக்கிய புள்ளி எது?
- யூரோ டூர் போவோம்!
source https://www.vikatan.com/social-affairs/international/the-role-of-germany-in-world-war-one-and-how-it-became-the-superpower
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக