Ad

சனி, 18 செப்டம்பர், 2021

கொடூரமான கொலை சம்பவம்; 16 வருடம் கழித்து இரட்டை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிமன்றம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழத் திருப்பாலக்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பொய்யாமொழி என்பவருக்கு, 16 ஆண்டுகள் கழித்து தற்போது இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை பூந்தமல்லி சிறப்பு நிதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களான வழக்கறிஞர் இளங்கோவன், அமுதரசன் ஆகியோருக்கு, 2019-ம் ஆண்டு இதே பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்க்யிருந்தது. அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா, கீழத்திருப்பாலக் குடியை சேர்ந்தவர், தமிழ்செல்வன். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசைதம்பிக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அச்சூழலில் தான், உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி, ஆசைத்தம்பிக்கு ஆதரவாக தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட மோதலில் பொய்யாமொழியின் ஆடைகளை கழற்றி, தமிழ்ச்செல்வன் ஆவமானப்படுத்தியதாகவும் அதனால் பொய்யாமொழி கடும் ஆத்திரத்தில் இருந்ததாகவும் அடுத்த சில நாள்களில் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். மேலும் அந்த சம்பவத்தின்போது தமிழ்ச்செல்வனின் வலது கையை வெட்டி சிலர் ஊர் முழுவதும் சுற்றி வந்ததாக அப்போது மக்கள் அதிர்ச்சியுடன் பேசிக் கொண்டார்கள். சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கு, வெடிகுண்டு வழக்குகள் தொடர்பாக விசாரனை நடத்தக்கூடிய சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பொய்யாமொழி மற்றும் அவரது உறவினரும் வழக்கறிஞ ருமான இளங்கோவன், வாகன ஓட்டுநர் அமுதரசன், ஆசைத்தம்பி, பொய்யாமொழியின் சகோதரர் செல்வம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த கொலைக்கு தூண்டுதலாகவும், கொலைக் குற்றத்துக்கு உறுதுணையாகவும் இருந்ததாக பொய்யாமொழியின் அம்மா பத்மாவதி, மனைவி கயல்விழி, உள்ளிட்ட இன்னும் பலர் மீதும் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பொய்யாமொழி, விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.

Also Read: மாமனாரைக் கொலை செய்த மருமகன்; முன்னாள் தி.மு.க எம்.பி பேரன் படுகொலையில் நடந்தது என்ன?

பொய்யாமொழி

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட இடத்தில் வெடிகுண்டு இருந்ததால், இந்த வழக்கின் விசாரணை சென்னை பூந்தமல்லியில் இயங்கும், வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இளங்கோவன், வாகன ஓட்டுநர் அமுதரசன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி,, அந்த இருவருக்கும் 2019-ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார்.

மேலும், பத்மாவதி, கயல்விழி, கனிமொழி ஆகியோருக்கு எதிரான குற்றச் சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். 2005-ம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்திற்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதால் அப்போது அத்தீர்ப்பு பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே, முதல் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்ட பொய்யாமொழி நீண்டகாலம் தலைமறைவாக இருந்ததால், இவர் மீதான வழக்கு தனியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது, இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து, சென்னை பூந்தலமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து, பொய்யாமொழி சிறையில் அடைக்கப்பட்டார்.



source https://www.vikatan.com/news/crime/court-rules-after-16-years-in-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக