“பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூரில் ‘பெரியார் உலகம்’ என்ற பெயரில் பெரியாரின் 40 அடி பீடத்துடன் 95 அடி உயரப் பெரியார் சிலை அமைய உள்ளது. மேலும், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்” எனவும் திராவிடர் கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வந்ததும் பெரியாருக்குச் சிலை எதற்கு எனச் சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்க்கருத்தை முன்வைத்தனர். அரசு சார்பில் அமைக்கப்படவில்லை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செயலாளராக இருக்கும் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் சார்பில்தான் இந்தச் சிலை அமைக்கப்படவுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டது. கிடப்பிலிருந்த திட்டத்துக்கு தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார்” என விளக்கம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குஜராத்தில் படேலுக்குச் சிலை வைத்ததை எதிர்த்தவர்கள் தற்போது தமிழ்நாட்டின் மட்டும் எதன் அடிப்படையில் பெரியாருக்குச் சிலை அமைக்கப் போகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது.
படேலுக்குச் சிலை அமைத்ததை எதிர்த்தவர்கள் பெரியாருக்குச் சிலை அமைப்பதை எதிர்த்து ஏன் பேசவில்லை என தமிழ்நாட்டின் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read: `அது பெரியார் விருப்பம்’ - கருணாநிதி சிலையும் இடிக்கப்பட்ட கதையும்
பெரியார் சிலை அமைக்கப்படுவது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் கேட்டோம் “குஜராத் மாநிலத்தின் முக்கியமான தலைவர் என்ற அடிப்படையில்தான் வல்லபாய் படேலுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதமர் மோடி சிலையை நிறுவினார். நேரு, காந்தியின் அரசியல்களுக்கும் எதிர்நிலையில்தான் படேல் செயல்பட்டார். காந்தி படுகொலை செய்யப்பட்ட 15 நாட்களுக்கு முன்புகூட மற்றொரு படுகொலை முயற்சி நடந்தபோதும்கூட காந்திக்கு உரிய பாதுகாப்பு படேல் தலைமையிலான நிர்வாகம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. குஜராத்தைச் சேர்ந்த படேல், நேரு, காந்தியை எதிர்த்தார். மதச்சார்பற்ற என்ற கொள்கைக்கு எதிரானதோடு மாற்றுக் கொள்கையைப் பின்பற்றினார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் தங்கள் கொள்கைகளைப் பேசவும், ஆதரவாக இருக்கும் ஒரு தலைவர் என்றுதான் பா.ஜ.க-வினர் பார்க்கிறார்கள். அதனடிப்படையிலேயேதான் அவருக்குச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. படேல் சிலை முழுக்க முழுக்க மக்கள் வரிப்பணத்தில் மத்திய அரசு அமைத்திருக்கிறது. ஆனால், பெரியாரின் சிலை என்பது தமிழ்நாட்டின் அடையாளம் என்பதையும் தாண்டி சமூக நீதிக்கும், மக்களின் உரிமைக்குப் போராடிய தலைவர் என்ற நோக்கில்தான் அமைக்கப்படவுள்ளது. வரிப்பணத்தில் இல்லாமல் மக்களிடம் நிதியைத் திரட்டி திராவிட கழகம் என்ற தனிப்பட்ட ஓர் அமைப்பின் சார்பில் சிலை நிறுவப்படவுள்ளது. சிலை மட்டுமல்லாது `பெரியார் உலகம்' என்ற ஒன்றை உருவாக்கி அதில் நூலகம், அருங்காட்சியகம் போன்றவையும் அமைக்கப்படவுள்ளது. சிலை அமைப்பது இவற்றில் ஒரு பகுதிதான்.
இளைய தலைமுறையினர் பெரியார் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவரது வரலாறு பற்றிப் புரிந்துகொள்வதற்காகவுமே இந்தப் பெரியார் உலகம் அமைக்கப்படவுள்ளது. கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் மையம், சென்னையில் இருக்கும் 'வள்ளுவர் கோட்டம்' போன்றுதான் 'பெரியார் உலகம்' அமையவுள்ளது. ஆனால், இவை இரண்டையும் போல வெறும் சுற்றுலாத் தலமாக மாறிவிடாமல் பெரியார் உலகமும் மாறிவிடும் வாய்ப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.” என விளக்கினார்.
படேல் சிலையை எதிர்த்தவர்கள் பெரியாருக்குச் சிலை அமைப்பது தொடர்பாக ஏன் பேச மறுக்கிறார்கள் என்ற கேள்வியை பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசனிடம் முன்வைத்தோம் “இந்தியாவை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவின் பிஸ்மார்க் என்கிறார்கள். ஆனால், பிஸ்மார்க் ஜெர்மனியை ஒருங்கிணைக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். படேல் இந்தியாவின் 540 சமஸ்தானங்களை ஓராண்டிற்குள் ஒருங்கிணைத்தார். அவ்வளவு பெரிய மனிதருக்கு உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டபோது இங்குள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், இப்போது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் அந்தச் சிலை அமைக்கப்பட்ட செலவுத் தொகையைச் சுற்றுலா வருமானம் மூலம் சரி செய்துவிடலாம் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். படேல் பா.ஜ.க தலைவர் கூட இல்லை. தேசத்தின் நலனுக்காக உழைத்தவர் என்பதால் அவரைக் கொண்டாடுகிறோம். இதை மட்டுமல்ல நாடாளுமன்றத்திற்கென புதிய கட்டடம் கட்டப்படுவதையும் இங்கிருப்பவர்கள் எதிர்த்தார்கள். இவர்களின் நோக்கம் எல்லாம் பா.ஜ.க கொண்டுவந்தால் எது என்னவாக இருந்தாலும் எதிர்ப்போம் என்பதுதான். ஆனால், ஈ.வெ.ரா-வுக்குச் சிலை வைப்பதை பா.ஜ.க எதிர்க்கவில்லை. மக்களுக்குப் பயன்படும் வகையில் அந்த உலகம் அமைய வேண்டும். இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக அமையக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.
பெரியார் வாழ்ந்த காலத்திற்குப் பின்புதான் தமிழ்நாட்டில் பக்தி, பாதயாத்திரை வளர்ந்திருக்கிறது. இப்போதும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வியலைப் பார்க்கும்போது பெரியாரைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புலப்படும். பெரியாரை தமிழ்ச்சமூகம் ஏற்றுக்கொள்ளாததால்தான் தமிழ்நாடு வளர்ச்சியடைந்திருக்கிறது. தி.மு.க தேசிய தமிழ், தமிழ்த் தேசியத்திற்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. எதாவது ஒன்றைச் செய்து மக்கள் மத்தியில் திராவிடத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் முயற்சி பலிக்காது.” எனப் பதிலளித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/an-analysis-of-the-purpose-of-setting-up-the-periyar-statue-and-its-opposition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக