Ad

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

நெருங்கும் பொறியியல் கலந்தாய்வு; சரிசெய்யப்பட்ட இடஒதுக்கீடு பிரச்னை!

மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக பலரும் படையெடுப்பது பெறியியல் படிப்புகளுக்குத்தான். சமீப காலமாக மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமானதால் மருத்துவப் படிப்புபகளின் பக்கம் செல்ல விரும்பாத மாணவ, மாணவிகள் பொறியியல் பக்கம் செல்கிறார்கள். அந்த வகையில் கடந்தாண்டுகளை விட இந்தாண்டு சற்று அதிகமானோர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிட்டதில் குழப்பம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

பொறியியல் படிப்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணா பல்கலை பேராசிரியர்கள், “பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 1, 74,930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியான 1, 39,033 பேருக்கான ரேண்டம் எண் எனப்படும் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 87,291 பேர் மாணவர்கள், 51,730 பேர் மாணவிகள், 12 பேர் திருநங்கைகள் ஆவர்.

மொத்தம் 1 லட்சத்து 51,870 இடங்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 39,033 பேருக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12,837 இடங்கள் காலியாகியுள்ளன. எனினும் இது கடந்த காலங்களைவிட குறைவாகும். கடந்த ஆண்டு கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு 50,000-க்கும் மேற்பட்ட இடங்களும், 2019-ல் 60,000-க்கும் மேற்பட்ட இடங்களும் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ படிப்பு போன்று பொறியியல் படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு 15,185 பேர் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 11,390 பேருக்கு இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கும். இந்த இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தனியாக நடைபெறும்.

தரவரிசைப்பட்டியல் வெளியிட்டதில் குளறுபடிகள் நடந்ததுதான் பிரச்னையாக வெடித்தது. அரசுப் பள்ளி மாணவர்களை தனியார் பள்ளி மாணவர்கள் என்று மாற்றிக் குறிப்பிட்டும், இடஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெயர்கள் விடுபட்டும் வெளியானதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரடியாக அண்ணா பல்கலைக்கழகம் விரைந்து ஆய்வு செய்தார். அப்போது தவறு நடந்தது உண்மை எனத் தெரிந்தது. பிறகு தவறை சரிசெய்து மீண்டும் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு மட்டும் வெளியிடப்பட்டது.

Also Read: GATE 2022: ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பொறியியல் பட்டதாரித் தகுதித்தேர்வு - ஒரு வழிகாட்டல்!

பொன்முடி

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "நிலைமை சரிசெய்யப்பட்டுவிட்டது. இடஒதுக்கீடுப் பிரிவு தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெயர்கள் விடுபடவில்லை. அப்படி விடுபட்டிருப்பதாக மாணவர்கள் புகாரளித்தால் இணைத்துக்கொள்ளப்படும்" என்றார்.

ஒருவழியாக பிரச்னை சரிசெய்யப்பட்டது. செப்டம்பர் 17-ம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வும் தொடங்கியது. அரசு பள்ளி மாணவ - மாணவியர், விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கு வரும் 24-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன் பின்னர், வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அக்டோபர் 19 முதல் 23 வரை துணை கலந்தாய்வும், மத்திய அரசு அளிக்கும் உதவியைப் பெறும் பட்டியலின மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அனைத்துவித கலந்தாய்வும் அக்டோபர் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது.” என்று முடித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/tamilnadu-engineering-counselling-starts-from-september-27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக