Ad

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு - நடைமுறை குழப்பத்தால் ஆண்களுக்கு பாதிப்பா?

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

பழனிவேல் தியாகராஜன்

பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். மத்திய அரசுப் பணியாளர்களில் பெண்களின் சதவிகிதம் சுமார் 10 சதவிகிதம்தான். தமிழகத்தில் மாநில அரசுப் பணிகளில் 40 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது பெண்களின் முன்னேற்றத்துக்கு மேலும் வழிவகுக்கும் என்று கருத்துகள் வெளிப்பட்டன. மேலும், இந்தியாவில் மற்ற மாநிலங்களில் அரசுப் பணிகளில் தமிழ்நாடு அளவுக்கு பெண்களுக்கான இடஒதுக்கீடு இல்லை என்றும், சமூகநீதியில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில், தற்போதைய அறிவிப்பு இன்னொரு வரவேற்கத்தக்க அம்சம் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.

1989-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியின்போது, அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. தற்போது மேலும் 10 சதவிகிதம் அதிகரித்து, 40 சதவிகிதமாக உயர்த்தப்படுவதன் மூலமாக நிறைய பெண்கள் அரசுப் பணிகளுக்கு வருவார்கள் என்று பலரும் வரவேற்றுவந்த வேளையில்தான், தமிழக அரசின் இந்த அறிவிப்பால் ஆண்கள் பாதிக்கப்படுவார்கள் என்று குரல்கள் எழுந்துள்ளன.

ஆண்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எழுந்துள்ள அச்சத்துக்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது அமலில் இருக்கும் 30 சதவிகித இடஒதுக்கீட்டில், 30 சதவிகித இடங்களையும் தாண்டி அதிகளவில் பெண்கள் அரசுப் பணிகளுக்குத் தேர்வாகிறார்கள். குறிப்பாக, டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே இருக்கிறது. குரூப் - 4 போன்ற பதவிகளுக்கான தேர்வுகளில்தான் ஆண்கள் அதிகளவில் தேர்வாகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி-யின் பல்வேறு தேர்வுகளில் பெண்கள் அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இடஒதுக்கீட்டின்படி 40 சதவிகிதம் போக, அதிகளவில் பெண்கள் வந்துவிடுவார்கள் என்று அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் போட்டித் தேர்வுகளை எழுதிவரும் ஆண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததைத் தொடர்ந்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச்செயலக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அந்த மனுக்களில், அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக அதிகரிக்கும் அரசின் முடிவை எல்லோரும் வரவேற்றுள்ளனர். யாரும் எதிர்க்கவில்லை.

அதே வேளையில், தற்போது அரசுப் பணிகளில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 30 சதவிகிதத்துடன் சேர்த்து, 50 சதவிகிதத்துக்கும் மேல் அரசுப் பணிகளுக்கு பெண்கள் தேர்வாகிறார்கள் என்றும், 40 சதவிகிதமாக அதிகரித்தால், ஒட்டுமொத்தமாக 65 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதம் வரை பெண்களே தேர்வாகிவிடுவார்கள் என்றும், அதனால் அரசுப் பணிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிற ஆண்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில், அச்சப்பட ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தனர். முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களில், ஆண்கள் பாதிக்காத வகையில் இந்த இடஒதுக்கீடு அதிகரிப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: உ.பி: 7 முனைப் போட்டி.. சூடுபிடிக்கும் தேர்தல் களம்! - யோகிக்கு டஃப் கொடுக்கும் தலைவர்கள் யார் யார்?

பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதால், அது ஆண்களைப் பாதிக்குமா என்ற கேள்வியை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலசந்திரனிடம் முன்வைத்தோம்.

“அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக அதிகரிக்கும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உலகத்தில் முதல் அடக்குமுறை என்பது சாதி அடிப்படையிலோ, இன அடைப்படையிலோ நடைபெறவில்லை. பாலின அடிப்படையில்தான் அது நடைபெற்றது. பெண்கள்தான் அடக்குமுறைக்கு ஆளானார்கள். அவர்கள் எழுந்துவர வேண்டும். முன்பைக்காட்டிலும் இப்போது அதிகமான பெண்கள் வெளியே வந்து, தனியார் துறைகளிலும் அரசுத் துறைகளிலும் பணியாற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் அதிகளவில் வெளியே வரவேண்டியிருக்கிறது. அந்த நோக்கத்தில்தான் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுக்கிறது.

‘ஓர் ஆணுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால், ஒரு நபருக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறோம். ஒரு பெண்ணுக்கு கல்விக் கற்றுக்கொடுத்தால், ஒரு பரம்பரைக்கு கல்வி கற்றுக்கொடுக்கிறோம்’ என்று நான் பணிபுரிந்த வங்காளத்தில் சொல்லப்படுவது உண்டு. எவ்வளவு காலம்தான் பெண்களை அடக்கிவைத்திருப்பது. கல்வியில் மட்டுமல்லாமல், அரசுப் பணிகளிலும் அவர்கள் அதிக எண்ணிக்கையில் வரட்டும்.

பாலசந்திரன்

பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டால், அந்த 40 சதவிகிதம் தவிர, மெரிட் அடிப்படையில் பொதுப்பிரிவில் கூடுதலாக 5 அல்லது 7 சதவிகிதம்தான் பெண்கள் வருவார்கள். அப்படிப் பார்த்தால், மொத்தத்தில் 45 சதவிகிதம் அல்லது 47 சதவிகிதம் பெண்கள் வரக்கூடும். எப்படிச் சொல்கிறேன் என்றால், அகில இந்திய அளவில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி பிரிவினருக்கு 49.5 சதவிகிதம் என இடஒதுக்கீடு இருக்கிறது. இதைத் தாண்டி, பொதுப்பிரிவு கட் - ஆஃப்-பில் வருகிற எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி பிரிவினிரை பொதுப்பிரிவில்தான் வைக்கிறார்கள். அதில் ஏறக்குறை 5 சதவிகிதம் வருகிறார்கள். அப்படியென்றால், 49.5 சதவிகிதம் என்பது 54.5 சதவிகிதமாக அதிகரிக்கிறது. அதே மாதிரிதான் இதிலும் வரும். அவ்வளவுதான். எனவே, ஆண்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றார் பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-40-percent-reservation-for-women-in-tamilnadu-government-jobs-is-affect-men-aspirants

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக