தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline - NPS) மூலம் ரூ.6 லட்சம் கோடி பணம் திரட்டப்படும் என கடந்த திங்கள்கிழமை அன்று அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த அறிவிப்பு வழக்கம் போல பல விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
``70 ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாகக் கட்டிக்காத்த சொத்துகள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன’’ என விமர்சித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து சமூக வலைதளங்களிலும் பலரும் பலவிதங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனம் உண்மைதானா, இந்தத் திட்டத்தின்மூலம் மத்திய அரசாங்கம் என்ன செய்ய நினைக்கிறது என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
திட்டம் என்ன சொல்கிறது?
நாட்டின் வளர்ச்சி தொடர்பான திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் நோக்கில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு மத்திய அரசாங்கம் வைத்திருக்கும் பெயர்தான், தேசிய பணமாக்கல் திட்டம்.
இந்தத் திட்டம் மூலம் அடுத்த நான்கு வருடங்களில், அதாவது, 2022-லிருந்து 2025-ம் ஆண்டு வரையில், மத்திய அரசின் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களின் உள்கட்டமைப்பின் சொத்துகள் (Infrastructure Core Assets) மூலம் அதாவது, தேசிய நெடுஞ்சாலைகள்,
ரயில்வே,
விமான தளங்கள்,
துறைமுகங்கள்,
மின் உற்பத்தி மற்றும் விநியோகம்,
சுரங்கம்,
எரிவாயு குழாய் ஆகிய துறைகளில் ஏற்கெனவே உள்ள சொத்துகள் மற்றும் திட்டங்களின் (Brownfield Assets) மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசின் சொத்துகள் மிகவும் முக்கியம். அரசின் சொத்துகள் மூலம் மக்களுக்கு அடிப்படையான சேவைகளை நியாயமான கட்டணத்தில் அரசால் வழங்க முடிகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால், தற்போதைய நிலையில், அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது எனவும் மத்திய அரசாங்கம் விளக்கம் கொடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தைப் பற்றி பலரும் நினைக்கிற மாதிரி, அரசு நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் துறைக்கு விற்கும் திட்டமும் (Disinvestment) மற்றும் முக்கியமில்லாத சொத்துகளை (Non Core Assets) விற்கும் திட்டமும் இந்தத் தேசிய பணமாக்கல் திட்டத்தில் இல்லை என்றும் மத்திய அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
திட்டமிடப்படும் வருமானம்
இந்தத் திட்டத்தின்மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில், 2021-22-லிருந்து 2024-2025-ம் ஆண்டு வரை மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளில் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இருக்கும் அல்லது குறைவாகப் பயன்படுத்தும் சொத்துகளைப் பணமாக்கி அதன்மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வழியை உருவாக்குவது என நிதி ஆயோக் விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாடு முழுவதும் மேம்பாலங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள், சாலைகள் என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம்!#NMP | #UnionGovt pic.twitter.com/RoO57xjNDM
— NaanayamVikatan (@NaanayamVikatan) August 25, 2021
எந்தெந்தது துறையிலிருந்து எவ்வளவு பணமாக்கல்?
இந்தத் திட்டத்தின்மூலம் 13 துறைகளிலிருந்து ரூ.6 லட்சம் கோடி நிதியானது மத்திய அரசுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெடுஞ்சாலைத் துறையிலிருந்து ரூ.1,60,200 கோடியும்,
ரயில்வே துறையிலிருந்து ரூ.1,52,496 கோடியும்,
மின் விநியோகத் துறையின் மூலம் ரூ.45,200 கோடியும்,
மின் உற்பத்தி மூலம் ரூ.39,832 கோடியும்,
கேஸ் பைப்லைன்மூலம் ரூ.24,462 கோடியும்,
தொலைபேசித் துறையின்மூலம் ரூ.35,100 கோடியும்,
சேமிப்புக் கிடங்குகள்மூலம் ரூ.28,900 கோடியும்,
விமான நிலையம்மூலம் ரூ.20,782 கோடியும்,
நிலக்கரிச் சுரங்கம்மூலம் ரூ.28,747 கோடியும்,
துறைமுகம்மூலம் ரூ.12,828 கோடியும்,
விளையாட்டு அரங்கம்மூலம் ரூ.11,450 கோடியும்,
நகர்ப்புற ரியல் எஸ்டேட் மூலம் ரூ.15,000 கோடியும் மத்திய அரசாங்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் சொத்துகளை அரசு விற்கிறதா?
மத்திய அரசு நாட்டின் சொத்துகளைத் தனியாருக்கு விற்க முயல்வதாக இப்போதே இந்தத் திட்டத்துக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ஆனால், அப்படி எதுவும் இந்தத் திட்டத்தில் செய்யப்படப் போவதில்லை. நாட்டின் சொத்துகள் அனைத்தும் அரசின் வசமே இருக்கும். தனியார் துறையினர் அந்த சொத்துகளைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தும் காலம் முடிந்ததும் அரசிடம் திருப்பித் தந்துவிட வேண்டும் என்ற விதிமுறையுடன்தான் தரப்படுகிறது. இதன்மூலம் அதிகப்படியான வருவாய் ஈட்டுவது மட்டுமே இந்தத் திட்டத்தின் நோக்கம் என மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டை மத்திய அரசு ஏற்கெனவே அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. அவ்வாறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் ரயில்வே வழித்தடங்களை அவர்களுக்கு வாடகைக்கு விட்டு, அதிகப் படியான வருமானத்தை ஈட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல, விமானத் தளங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அதிகப்படியான வருமானத்தை ஈட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read: NMP: அரசின் சொத்துகள் விற்பனை; ரூ.6 லட்சம் கோடி திரட்ட முடிவு; என்ன செய்கிறார் நிர்மலா சீதாராமன்?
என்றாலும், மத்திய அரசாங்கம் இந்த பணமாக்கலை எந்தளவுக்கு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செய்யும் என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்த சொத்துக்களைக் குறிப்பிட்ட காலத்துக்குத் தனியாருக்குத் தருவதில் ஊழல் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம் விமர்சகர்கள் கேட்கும் கேள்வி நியாயமானதே. தவிர, தனியார் நிறுவனங்கள் இந்தச் சொத்துக்களைப் பயன்படுத்த அனுமதி கிடைத்தபிறகு, அந்தச் சேவைகளை மக்களுக்கு வழங்க என்ன கட்டணம் வசூலிக்கும், இப்படி வசூலிக்கும் பணம் நியாயமானதா இருக்குமா என்பதும் முக்கியமான கேள்வி. காரணம், தொலைபேசி நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டபின்பு மிகப் பெரிய அளவில் கட்டண உயர்வு நடந்திருக்கிறது. நல்ல சேவை கிடைத்தாலும் மக்கள் அதிகம் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றிலும் மேலாக, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியச் சொத்துகளை நிர்வாகம் செய்து லாபம் ஈட்ட இந்தத் திட்டம் அனுமதி அளிக்கிறது என்றும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
இந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதைப் பொறுத்தே இதன் எதிர்காலம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!
அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#
source https://www.vikatan.com/business/finance/an-analysis-on-modi-govts-national-monetisation-pipeline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக