Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

``கொரோனா இந்தியாவில் எண்டெமிக் நிலையை எட்டியிருக்கலாம்!" - விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

கொரோனா சூழலில் பல உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கி வருபவர், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் சௌமியா சுவாமிநாதன். சமீபத்தில் அவர் `தி வயர்' செய்தித் தளத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் நிலை பற்றி பேசியிருந்தார்.

``இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது `எண்டெமிக்' என்னும் நிலையை எட்டியிருக்கலாம் (பேண்டெமிக், எபிடெமிக் ஆகியவற்றிற்கு முந்தைய நிலை). அதாவது, இனி வரும் காலங்களில் நிச்சயம் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்தது போன்ற நாடு தழுவிய பரவல் இருக்காது. மாறாக, சில பகுதிகளில் அவ்வப்போது பரவல் அதிகமாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சௌமியா சுவாமிநாதன்

இந்தியாவில் ஊரடங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இனி ஊரடங்கின் தேவை பற்றி சௌமியா சுவாமிநாதன் குறிப்பிடும்போது, ``நாட்டில் நோய்த் தொற்றுப் பரவலின் அடிப்படையில் மாநில, மாவட்டங்களைப் பிரித்து, அந்தந்த இடங்களுக்கு ஏற்ப ஊரடங்கை அல்லது ஊரடங்குத் தளர்வினை அமல்படுத்தி இனி கொரோனாவை எளிதாகக் கையாள முடியும்'' என்கிறார்.

Also Read: Covid Questions: மூன்றாவது அலை அச்சம்; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது சரியான முடிவா?

``கடந்த ஏழு நாள்களில் தேசிய சராசரி கொரோனா பாதிப்பு, அதற்கு முந்தைய வாரத்தை விட 12% குறைவு. எனினும் பரவல் விகிதத்தைக் கணக்கிடும் ஆர் எண்(R Number) 1ஆகதான் இருக்கிறது. ஆர் எண் 0.6ஐ விட குறைவாக இருப்பது தான் அபாயம் இல்லாத நிலை'' என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

மூன்றாவது அலை..?!

தற்போது இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் முக்கியக் கேள்வி, மூன்றாவது அலையைப் பற்றியதுதான். ''மூன்றாவது அலை குறித்து யாரும் முன்னரே கணித்துச் சொல்ல முடியாது'' என்கிறார் சௌமியா சாமினாதன். ``மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும் தீவிர பாதிப்பு ஏற்படுவது குறைவாகத்தான் இருக்கும். எனவே குழந்தைகள் குறித்து பயப்பட வேண்டாம்" எனக் கூறியுள்ளவர், ``நோய்த்தொற்று மற்றும் இறப்பினை குறைப்பதில் ரெம்டெசிவர் மற்றும் ஐவர்மெக்டின் ஆகிய மருந்துகளால் எந்த பயனும் இல்லை" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவில் தடுப்பூசி!

தடுப்பூசி பற்றிக் குறிப்பிடும்போது, மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே கொரோனாவை வெல்வதற்கான வழி என்கிறார் சௌமியா சாமிநாதன். ``இந்த ஆண்டு இறுதிவரையிலும், பிரிட்டனைப் போல இந்தியா அதிக பேருக்குத் தடுப்பூசி செலுத்த வாய்ப்பு இல்லை. இங்கிலாந்தில் 70%-75% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வெறும் 9.5% பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

covid vaccine

Also Read: கொரோனா: பேண்டெமிக், எபிடெமிக், எண்டெமிக், அவுட்பிரேக்... வித்தியாசங்களும், விளக்கங்களும்! #CoronaStudy

மேலும், ``உலகின் பல நாடுகளில் மக்கள் ஒரு தவணை தடுப்பூசிகூட போட்டிராத நிலையில் பணக்கார நாடுகள், தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு மீண்டும் தடுப்பூசி வழங்குவது தவறு. தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களிடையே நோய்ப் பரவுவதனால் வைரஸ் புதிய பரிமாணம் அடைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இல்லாதவரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்ற நிலைதான்'' என்றிருக்கிறார் சௌமியா சுவாமிநாதன்.

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#



source https://www.vikatan.com/health/healthy/india-may-have-reached-endemic-stage-in-covid-19-says-scientist-sowmya-swaminathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக