Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

நீரோடையை ஆக்கிரமித்த கொடநாடு முதல் முகம் திருப்பிக்கொண்ட ராகுல் வரை..! கழுகார் அப்டேட்ஸ்

நாளுக்கு நாள் லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகள் வேகமெடுப்பதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர், சென்னையில் கோலோச்சிய அந்த முன்னாள் `சப்ளையர்’ எம்.எல்.ஏ-வைச் சந்தித்து ``அண்ணே... நீங்க சொன்னதைத்தான் செஞ்சோம். இப்போ பாருங்க, எங்க தலைக்கு மேல கத்தி தொங்குது’’ என்று புலம்பியிருக்கிறார்கள். அதற்கு அந்த மாஜி எம்.எல்.ஏ., ``யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது... பார்க்க வேண்டியவங்களைப் பார்த்து, பேசி முடிச்சாச்சு” நம்பிக்கை கொடுத்திருக்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் அதிகார மையத்தைச் சந்தித்து, டீலிங்கை முடித்த பிறகே இப்படி நம்பிக்கை கொடுத்தாராம் மாஜி!

Also Read: மிஸ்டர் கழுகு: முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்... கண்கலங்கிய துரைமுருகன்!

ஜெயலலிதா இருக்கும் வரை யாருமே நெருங்க முடியாத மர்மக் கோட்டையாக இருந்த கொடநாடு எஸ்டேட்டில், அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. கொடநாடு மலையில் உருவாகி, எஸ்டேட்டைக் கடந்து மாயாற்றில் கலக்கும் முக்கிய நீரோடையை சட்டவிரோதமாக மறித்து, படகு சவாரிக்கான ஏரியாக மாற்றியிருக்கிறார்கள்.

கொடநாடு

அதேபோல, எஸ்டேட் அருகிலுள்ள வருவாய்த்துறை, வனத்துறை ஆகியவற்றின் நிலங்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுடன் இணைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஆட்சியில் இந்த விதிமீறல்கள் கண்டுகொள்ளப்படாத நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் நடவடிக்கை எதுவும் இல்லை. `ஏன் இந்த தயக்கம்?’ என்று கேட்கிறார்கள் உள்ளூர் மக்கள்!

நாகர்கோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்திக்குச் சொந்தமாக கார் கிடையாது. நண்பரின் காரைத்தான் பயன்படுத்துகிறார். இந்தநிலையில், எம்.எல்.ஏ-க்களை வெற்றிபெறவைத்த மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசாக வழங்கும் நிகழ்வில், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் தர்மராஜுக்கு இன்னோவா கிறிஸ்டா கார் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு அவர் கட்சியிலிருந்து கொடுத்த மாருதி சுசுகி எக்ஸ் எல் 6 காரைப் பயன்படுத்திவந்தார்.

எம்.ஆர்.காந்தி

புதிய கார் மாவட்டத் தலைவருக்கு வழங்கப்பட்டதை அடுத்து அவர் பயன்படுத்திய மாருதி சுசுகியை காந்திக்குத் தருவார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த காரை கட்சித் தலைமை வாங்கி வைத்துக்கொண்டதால் ``மாவட்டத்துல பேரு வாங்கிக்கொடுத்த அண்ணனுக்கு கார்கூட இல்லையா?’’ என்று கொந்தளிக்கிறது காந்தி தரப்பு!

நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பாக வெற்றிபெற்ற நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற அலுவலகத் திறப்புவிழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில பா.ஜ.க தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். பின்னர் நெல்லையில் பாரதியார் படித்த பள்ளிக்குச் சென்றவர்கள், பாரதி படித்த வகுப்பறையிலிருந்த அவரது படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, வகுப்பறையின் கடைசி பெஞ்சுக்கு சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

நயினார் நாகேந்திரன்

இதைப் பார்த்த பா.ஜ.க தொண்டர்களோ, ``படிக்குறப்பயும் கடைசி பெஞ்ச்சுதான்போலிருக்கு... பழக்க தோஷத்துல போய் உட்கார்ந்துட்டாங்க!” என்று கமென்ட் அடித்தபடியே கலைந்து சென்றார்கள்!

Also Read: ஆனந்த விகடன்: அச்சிலிருந்து ஆன்லைன், ஓடிடி வரை... தலைமுறைகள் தாண்டி நிற்கும் தமிழர்களின் அடையாளம்!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொறியாளர் அணி அமைப்பாளராக இருந்தவர், எம்.எஸ்.பாபு. இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதாகக் கூறி கடந்த ஜூன் 30-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பொன்முடி

இந்தநிலையில், ஆகஸ்ட் 19-ம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பிறந்தநாளன்று, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியுடன் அவர் பொன்முடி வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சலசலப்பைக் கிளப்பியிருக்கிறது. ``கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி, கட்சித் தலைமை நீக்கிய ஒருவர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வீட்டிலேயே இருப்பது சரியா?’’ என்று கொந்தளிக்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட உடன்பிறப்புகள்.

நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி அனைத்துக் கட்சி எம்.பி-க்களுடன் சகஜமாகப் பேசி, கைகொடுத்து உரையாடியது பலரையும் கவர்ந்தது. குறிப்பாக, கட்சி பேதம் தாண்டி பா.ஜ.க எம்.பி-க்களிடமும் சகஜமாகப் பேசியவர் நலம் விசாரிப்பது, தொகுதிப் பிரச்னைகளைக் கேட்டறிவது என்று சுறுசுறுப்பாக வலம்வந்தார். ஆனால், தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் கதர்க் கட்சியின் ஒரு எம்.பி மட்டும் எம்பி எம்பி குதித்து, சந்திக்க முயன்றபோதும் முகத்தைத் திருப்பிக்கொண்டாராம் ராகுல்.

ராகுல் காந்தி

காரணம், ஆரம்பித்திலிருந்தே அந்தக் கதர் குடும்பத்தின் மொத்த நடவடிக்கைகளும் ராகுலை வெறுப்பேற்றியிருந்தன என்கிறார்கள். கடந்த எம்.பி தேர்தலின்போது அந்த எம்.பி தொகுதிக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி நீடித்து, கடைசியில் வேறு வழியில்லாமல்தான் அவரை வேட்பாளராக அறிவித்தார்களாம். அதற்கும் காரணம் ராகுலின் இந்த அதிருப்திதானாம். இந்தநிலையில்தான் கட்சியின் மாநிலத் தலைவர் ஆவதற்கும் காய்நகர்த்திவருகிறார் அந்த எம்.பி!

ம.தி.மு.க பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான வைகோ, சில தினங்களுக்கு முன்பு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவைச் சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை அளித்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவருக்குத் தனிச் செயலாளராக இருந்தவரான அஷ்வினி வைஷ்ணவ், ஏற்கெனவே வைகோவுக்கு நன்கு அறிமுகமானவர். அதனால் வைகோவிடம் அன்பாகப் பேசிய அமைச்சர், ``உங்க மகன் வயது என்ன?’’ என்று கேட்டாராம்.

வைகோ

அதற்கு ``என் மகன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டார்’’ என்று வைகோ சொன்னதும், ``நானும் உங்க மகனைப்போலத்தான்” என்று சொல்லி வைகோவிடம் ஆசி பெற்றிருக்கிறார் அஷ்வினி வைஷ்ணவ். அருகிலிருந்து இதைப் பார்த்த ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி, தங்கள் தலைவருக்கு டெல்லியில் கிடைக்கும் மரியாதையை நெகிழ்ச்சியுடன் எல்லோரிடமும் சொல்லி மகிழ்கிறார்!

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi



source https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-kodanadu-estate-issue-rahul-reaction-and-other-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக