Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

`என் கதையில் நீயும், உன் கதையில் நானும் வில்லன்களே!' உடைந்த காதல்களின் உண்மை உணர்த்தும் Modern Love

மாடர்ன் லவ் - 8 கதைகள் கொண்ட ஆந்தாலஜி சீரிஸின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான காதலை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு விதத்தில் வெளிப்படுத்துகிறது. அதன் ஏழாவது எபிசோடான How do you remember me எபிசோட், மனித உளவியலை நெருக்கமாகப் படம்பிடித்திருக்கிறது.

தன் காதலனின் கைகோத்து வீதியில் நடந்துகொண்டிருக்கிறான் பென். தூரத்தில் தன் தோழிகளுடன் உரையாடிக்கொண்டு நடந்துவந்துகொண்டிருக்கிறான் ராபி. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது, தாங்கள் date செய்த அந்த நாளை கொஞ்சம் கொஞ்சமாக நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால், ஒவ்வொருவரின் கண்ணின் வழியாகவும் அந்தக் காட்சிகள் வெவ்வேறு விதமாக விரிகின்றன.

நண்பர்களின் மூலமாக அறிமுகமாகும் பென், ராபி இருவரும் ஒரு டேட்டிற்கு செல்கிறார்கள். டின்னர், பார், பென்னின் அறை என மூன்று இடங்களில் நிகழ்ந்த அவர்களின் உரையாடல்கள் ஃபிளாஷ்பேக் காட்சிகளாக விரிகின்றன. பென் நினைத்துப் பார்க்கும் டின்னர் ஃபிளாஷ்பேக்கில், ஒரு கெத்தான, தெளிவான சிந்தனையுடைய வெளிப்படையான (assertive) ஆளாகத் தெரிகிறான் ராபி. ராபியின் ஃபிளாஷ்பேக்கில், பென் திமிர் பிடித்தவன். பாரில் நடந்தவற்றை ராபி நினைத்துப் பார்க்கையில் பென் பொறுப்பற்றவன். அதையே, பென் நினைத்துப் பார்க்கையில், ராபி தன்னுடைய உலகிலேயே வாழ்பவன். ரூமில் நடக்கும் காட்சிகளில் பென் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவன். ராபியோ, பெர்சனல் ஸ்பேஸை மதிக்காதவன்.

How do you remember me

காதல் ஒன்றாகினும், பிரிந்த பின்னர் அதன் மீதான பார்வை மாறிவிடுகிறது. நம் கதையில் அவர்களும், அவர்களின் கதையில் நாமும் வில்லன்களாகிறோம். இப்படி மூன்று ஃபிளாஷ்பேக்கிலும் ஒருவர் இன்னொருவரை எப்படி நினைவில் வைத்திருக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கிறது 'How do you remember me?' யோசித்தால், 'விருமாண்டி' படக்கதை போலத்தான் இருக்கும். ஆனால், நுணுக்கமாக கவனிக்கும்போது, காதலுக்குப் பிறகான நம் உளவியலை உறித்துக் காட்டியிருக்கிறது இந்த 24 நிமிட எபிசோட்.

உடைந்த காதலின் உபரி மரியாதையும் நாம் சொல்லும் கதைகளால் காணாமல் போகிவிடும். மனித மனம், அந்தக் கதைகளில் தன்னை ஹீரோவாக உருவகப்படுத்திக்கொள்ளும். தன் முன்னாள் காதலனை/காதலியை வில்லனாக்கிவிடும். அவர்களையே பிரிவின் காரணமாகச் சுட்டிக் காட்டும். அவர்களின் தவறுகளை ஹைலைட் செய்யும் நேரத்தில், தான் டீசன்ட்டானவர் என்பதையும் நிறுவ முயலும். நம்மிடம் கதை கேட்பவர்களை மட்டுமல்லாமல், நம்மையும்கூட ஏமாற்றும். அந்தப் பொய்யில் கதை கேட்பவரோடு நாமும் மூழ்கிப்போவோம். பென், ராபி இருவரின் கதை அதை அழகாய் காட்டியிருக்கிறது.

தன் சகோதரியின் அலைபேசி மூலம் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தைத் தெரிந்து மனம் உடைந்திருக்கிறான் பென். அப்போது அவனுக்கு உதவ முற்படுவான் ராபி. ராபி தன் பெர்சனல் ஸ்பேசுக்குள் நுழைவதை பென் விரும்பமாட்டான். ஒரு சிறிய வாக்குவாதம் நடக்கும். அதனால், அந்த date இரவே இருவரும் பிரிவார்கள். இந்தப் பிரிவின் காரணமாக இன்னொருவரைக் குத்திக்காட்டும் வகையில்தான் அவர்களின் முந்தைய ஃபிளாஷ்பேக் காட்சிகளை அவர்களின் மனம் பதிந்து வைத்திருக்கும்.

Also Read: Modern Love 2: கிட்டார் கம்பி மேலெல்லாம் நிற்கவில்லை... ஆனாலும் வசீகரிக்கின்றன இந்தக் காதல் கதைகள்!

பென்னின் பிளாஷ்பேக்கில், டின்னரின்போது மட்டும்தான் சகோதரியின் அழைப்பு வரும். எதிரில் அமர்ந்திருக்கும் ராபிக்கு மரியாதை கொடுப்பதற்காக அந்த அழைப்பை அவன் எடுக்காதது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ராபியின் டின்னர், பார் இரண்டு ஃபிளாஷ்பேக்குகளிலுமே பென் அழைப்பைத் துண்டிப்பான். அதிலும், அவன் அந்த செல்போனை கீழே வைக்கும் தொனியிலேயே ஓர் அழைப்பை அவன் எப்படி உதாசீனப்படுத்துகிறான் என்பதை நிறுவ முயன்றிருக்கும் ராபியின் மனம்.

How do you remember me

இப்படி உறவுகளை உதாசீனப்படுத்துபவன், தான் உதவி செய்ய நினைக்கும்போதும் இப்படித்தான் உதாசீனப்படுத்தினான் என்பதை உணர்த்தவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் ராபியின் ஃபிளாஷ்பேக். டின்னரின்போது "நகரத்துக்கு வெளிய இருக்க ஊர்ல எல்லாம் எவனாவது வாழ்வானா" என்ற வார்த்தையிலும் பென்னின் குணத்தை மூர்க்கமானதாகச் சித்திரிக்கத் துடிக்கும் ராபியின் மனம்.

பென்னின் கண் வழியாகப் பாயும் ஃபிளாஷ்பேக் காட்சிகளும் அப்படித்தான். தான் பேசுவதைக் கேட்காத, தன்னைப் புரிந்துகொள்ள முற்படாத ஆளாகவே ராபியை காட்சிப்படுத்திப் பார்ப்பான் பென். பாரில், ராபியின் வேலையைப் பற்றி பென் பேசிக்கொண்டிருக்கும்போது, வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல், பென்னின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான் ராபி. ரூமில் நடக்கும் வாக்குவாதத்திலும் தன்னைப் புரிந்துகொள்ள முயன்றிடாத, தன் பெர்சனல் ஸ்பேஸுக்கு மதிப்பளிக்காத ஒருவனாகவே ராபி காட்டப்பட்டிருப்பான்.

இப்படி அந்த சண்டைக்குக் காரணம் மற்றவர்தான் என்பதை நிறுவுவததன் அங்கமாகத்தான் முந்தைய இரண்டு ஃபிளாஷ்பேக் காட்சிகளையும் அவர்கள் நினைத்துப்பார்ப்பார்கள். முன்பு சொன்னதுபோல், அவர்கள் வில்லன் ஆவது மட்டும் இங்கே மூளையின் நோக்கம் இல்லை. தம்மை நல்லவனாகவும், டீசன்ட்டானவனாகவும் உருவகப்படுத்திக்கொள்வதும் அதற்கு முக்கியம். இந்த எபிசோடில் அது சொல்லப்பட்ட விதம் நம் முகத்தில் அறைந்ததுபோல் இருக்கும்.

இருவருக்குமான வாக்குவாதம், பென் அறையில் காதல் புரிந்தவுடன் நிகழும். படுக்கையில் இருக்கும்போதுதான் தன் சகோதரியின் அழைப்பை எடுத்திருப்பான் பென். தன் தந்தையின் நிலை கேட்டதும் ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்திருப்பான். படுக்கையிலிருந்து எழுந்து வரும் ராபி, பென்னின் ஃபிளாஷ்பேக்கில் நிர்வாணமாக வருவதுபோலும், ராபியின் ஃபிளாஷ்பேக்கில் உள்ளாடை அணிந்து வருவதுபோலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஒட்டுமொத்த கதைக்கும் அதன் போக்கிற்கும் இது எந்த தாக்கமும் ஏற்படுத்தாத விஷயம்தான். ஆனால், இப்படியொரு அற்ப விஷயத்திலும்கூட நம் மனது நம்மை ஹீரோவாக்கும். மற்றவர்களை வில்லனாக்கும்.

How do you remember me

சண்டைக்குப் பிறகு ராபியை வெளியே போகச் சொல்லும் பென்னின் வசனமும் அப்படித்தான் அமைந்திருக்கும். பென்னின் ஃபிளாஷ்பேக்கில் "Would you just leave? Please" என்று கேட்பான் பென். ராபியின் ஃபிளாஷ்பேக்கில் please இருக்காது. Just go என்றிருப்பான்.

இவை பெரும்பாலனவர்களின் உளவியல்தான். ஆனால், இதிலும் பென் செய்தது தவறா, ராபி செய்தது தவறா என்று வாதிடவோ, முடிவுக்கு வரவோ தேவையில்லை. நாம் ராபியா பென்னா என்று அலசிப் பார்க்கவும் தேவையில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. ஒருவேளை ஒரு முடிவுக்கு வரமுடிந்தால் நம்மிடம் பிரச்னை இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷின் `பூமிகா'... பேய் சொல்லும் மெசேஜ் என்னன்னா?! ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

அவர்கள் காதலின், வாழ்க்கையின் இரு துருவங்கள். மனம்விட்டு உரையாடி, விருப்பு வெறுப்புகளைப் பேசி, காமமும் பகிர்ந்த அந்த ஒருநாள் காதல் புரியப் போதும் என்று நினைப்பவன் ராபி. ஓர் உறவின் உட்சம் உடலை அடைவதில்லை; அதைத் தாண்டிய வெளியும் ஒருவருக்கு முக்கியம் என்று நினைப்பவன் பென். அவர்கள் புரிந்துகொள்ளாமல் போனது அந்த விஷயம்தான். அது கொடுத்த குற்றவுணர்வுதான், அதன்பிறகு இருவரையும் மெசேஜ் செய்யவோ, ஈமெயில் அனுப்பவோ அனுமதிக்கவில்லை.

அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள் முடியும்போது இருவரும் ஒருவரையொருவர் கடந்து சென்ற பிறகு பின்னால் திரும்பிப் புன்னைகப்பார்களே, அதுதான் அந்தப் புரிதலின் வெளிப்பாடு. பென் இப்போது கைகோத்து நடந்துகொண்டிருக்கும் தன் காதலனின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பான். ராபி, தன் தோழிகளோடு சென்று பார்க்கவிருக்கும் அந்த ஆணுக்கான பெர்சனல் ஸ்பேசைக் கொடுப்பான்.

ஆனால், ராபியின் கதையில் பென்னும், பென்னின் கதையில் ராபியும் வில்லன்களே. காதல்கள் மாடர்ன் ஆகிவிட்டாலும், மனிதன் அப்படியேதானே இருக்கிறான்!


source https://cinema.vikatan.com/web-series/how-do-you-remember-me-an-episode-of-modern-love-reveals-the-true-mindset-of-a-broken-love

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக