Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

இதய வலியா, வாயுப் பிரச்சனையா... எப்படிக் கண்டறிவது? மருத்துவர் ஆலோசனை! | Doubt of Common Man

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் சகாயராஜ் என்ற வாசகர், "வலது பக்க நெஞ்சில் அடிக்கடி வலி வருகிறது. சிலர் வாயுப் பிரச்னை என்கிறார்கள். எனக்கு இதயப் பிரச்னையாக இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. இதய பிரச்னையையும் வாயுப் பிரச்னையையும் எப்படிப் பிரித்து அறிவது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

வெகுவாக மாறியுள்ள வாழ்க்கைமுறை, உணவு பழக்கவழக்கம் காரணமாக நோய்கள் நம் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்டன. வயது வித்தியாசமின்றி இதய நோய்கள் கூட அனைத்து வயதினரையும் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன. உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு நம்மைச் சுற்றி இருக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதனால், மார்பிலும் அதனைச் சுற்றியுள்ள தசைகளிலும் வலி வரும் போது அது இதய நோயா அல்லது வேறு ஏதேனும் வாயுப் பிரச்னையா என எவ்வாறு கண்டறிவது என்று மேற்கூறிய கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அவருடைய கேள்வியை இருதய நல மருத்துவர் வி.சொக்கலிங்கம் அன்பழகனிடம் முன்வைத்தோம். அவருடைய ஆலோசனை பின்வருமாறு.

doubt of common man

இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

"எப்போதெல்லாம் இடது கையிலோ இடதுபுற மார்பிலோ புதிதாக வலி வந்தால் அதை இதயத்தில் ஏற்படும் வலியாகத் தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வலது புறத்தில் ஏற்படும் வலியைப் பல நேரங்களில் இதயம் சார்ந்த பிரச்னையாக இருக்காது என நினைத்து உதாசீனம் செய்கிறோம். ஆனால் அப்படி உதாசீனம் செய்யக்கூடாது. இதயம் இடது புறம் உள்ளதால் இடது புறம் வரும் வலி மட்டுமே இதயவலி வரும் என்பது முற்றிலும் தவறான கருத்து. இதயம் நமது மார்பின் நடுவில் உள்ளது. எனவே, வலது புறம் ஏற்படும் வலியையும் இதய வலி என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதயப் பிரச்னை இருக்கும் சிலருக்கு இரண்டு பக்கமும் வலி இருக்கும், சிலருக்கு வலது புறம் மட்டும் அல்லது இடது புறம் மட்டும் வலி இருக்கும். இது தவிர ரெஃபர்ட் பெய்ன் (referred pain) எனப்படும் வலியும் சிலருக்கு இருக்கும்.ரெஃபர்ட் பெய்ன் என்பது இதயத்துக்கு அருகிலோ அல்லது மார்புப் பகுதியிலோ வலியே இருக்காது. நரம்புகள் வழியாக வலி கடத்தப்பட்டு தசைகள் மட்டுமே வலிக்கும். இந்த வலி முழங்கை, சுண்டு விரல் வரை பரவும்.

மருத்துவர் வி.சொக்கலிங்கம் அன்பழகன்
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!

இந்த வலி சில நேரங்களில் எரிச்சல் போலவும் இருக்கலாம். எரிச்சல் தானே என நினைத்து அலட்சியமாக இருக்கக் கூடாது. வலி ஏற்படும் போது மருத்துவரை அணுகி ஈ.சி.ஜி, எக்கொ கார்டியோகிராம் (echo cardiogram) அல்லது எக்ஸ்ரே செஸ்ட் மூலம் பரிசோதித்த பின் அது இதய வலியா? வாயு பிரச்னையா? மூட்டு வலியா? தசை வலியா? நரம்பு வலியா? அல்லது செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் (cervical spondylosis) எனப்படும் கழுத்துப் பகுதியில் இருந்து வரும் வலியா எனத் தெரிந்து கொள்ளலாம். உடலில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும். நீங்களே முடிவெடுத்து எதுவும் செய்யக்கூடாது. சாதாரண வலி எனக் கடந்து போய்விட்டால் இதய நோய் இருந்தாலும் கண்டறிய முடியாமல் போக வாய்ப்பு உண்டு. தொடக்கத்திலேயே பரிசோதித்துவிட்டால் என்ன வலி என்று அறிந்து அதற்குத் தகுந்த மருத்துவம் பார்த்து பூரண குணமடையலாம். இதயவலி இல்லாத பட்சத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமே குணமடைய இயலும். ஒருபோதும் நீங்களே மருத்துவராக மாறி வைத்தியம் பார்த்துக்கொள்ள நினைக்கக் கூடாது." எனக் கூறினார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man


source https://www.vikatan.com/health/healthy/doubt-of-common-man-does-pain-in-my-right-chest-indicates-any-heart-disease

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக