Ad

புதன், 18 ஆகஸ்ட், 2021

கரூர்: முதல் இறுதி பயணம்; மயானப் பாதைக்கான போராட்டத்தில் உயிரிழந்த பட்டியலினத்தவர்! -நடந்தது என்ன?

கரூரில் சுதந்திர தினத்தில், தங்களது மயானத்துச் செல்லும் பாதை ஆக்ரமிக்கப்பட்டதை மீட்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு பலியானவர் சடலத்தை, போராடி வென்றெடுத்த பாதையில் அவரது உறவினர்கள் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக, பட்டியல் இன மக்களுக்குரிய அந்த பாதையின் ஆக்ரமிப்பை அகற்றி, மண்ணைக் கொண்டு சாலை போடச் செய்ததோடு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்த, கரூர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட மயானப் பாதை

Also Read: கரூர்: சுடுகாட்டுப் பிரச்னை; விடிய விடிய போராட்டம்!- பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெரூர் தென்பாகம் கிராமத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். தங்களுக்குச் சொந்தமான சுடுகாட்டுப் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவருவதாகவும், பாதையை மீட்டுத்தரக் கோரியும் கடந்த ஆகஸ்ட் 15 -ம் தேதி இரவு சுடுகாட்டில் குடியேறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக மறுநாளும் போராட்டத்தை தொடர்ந்துவந்த பட்டியலின மக்கள், பேச்சுவார்த்தை நடத்த வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆக்ரமிக்கப்பட்ட மயான பாதை

அப்போது, எதிர்பாராதவிதமாக சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த, அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், 'ஒரு உயிரையும் இழந்துட்டோம். பாதையை மீட்டுத்தரும் வரையில் இடத்தை விட்டு நகரமாட்டோம்' என்று உறுதிகாட்டினர். இதனால், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்களிடம் பேசிய ஆட்சியர், 'நடைபெற்ற சம்பவத்திற்கும், மயான சாலை ஆக்ரமிப்பை அகற்றுவதற்கு ஆன தாமதத்திற்கும் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். பாதையை இன்று இரவுக்குள் மீட்டு தருகிறென். அதனால், இப்போது போராட்டத்தை கைவிடுங்கள்' என்று சொன்னார். அதற்கு, பொதுமக்கள் அசைந்து கொடுத்தனர். அருகில் இருந்த அதிகாரிகளிடம் ஆட்சியர், பாதையை உடனடியாக அமைத்து கொடுக்க உத்தரவிட்டார். மறுபுறம், கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த வேலுச்சாமியின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

வேலுச்சாமி உடல்

அங்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலுச்சாமியின் உறவினர்கள் மட்டுமல்லாது, பல்வேறு பட்டியலின அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆறுதல் தெரிவிப்பதற்காக கூடினர். இதனால், அங்கே அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேநேரம், சுடுகாட்டில் பாதை அமைக்கும் பணிக்காக மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, ஜே.சி.பி இயந்திரம் கொண்டு விரைவாக நடைபெற்றது. ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன.

அதோடு, இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் வண்டல் மண் கொண்டுவரப்பட்டு, ஆக்ரமிக்கப்பட்டு இருந்த சுடுகாட்டுப் பாதையில் கொட்டப்பட்டு, சாலை அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றது. அதேபோல், அன்று மாலை 4 மணி அளவில் வேலுச்சாமியின் பிரேதப் பரிசோதனை நிறைவடைந்து, போராட்டம் நடைபெற்ற வேடிச்சிபாளையம் மயானத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது. மேலும், தொடர்ந்து பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், வேலுச்சாமியின் உடலை அடக்கம் அடக்கம் செய்ய அதிகாரிகள் முயற்சித்தபோது, பொதுமக்கள், 'சாலை முழுமையாக அமைத்த பிறகு, போராட்டத்தில் உயிர் நீத்த வேலுச்சாமியின் உடலை அடக்கம் செய்வோம்' என அதிகாரிகளிடம் கூறினர். வேலுச்சாமியின் உடலுக்கு சடங்குகள், பல்வேறு தரப்பினரின் அஞ்சலி என சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

வேலுச்சாமி இறுதி ஊர்வலம்

இதற்கிடையில், முழுமையாக சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைய, உறவினர்கள், பொதுமக்கள் முன்னிலையில், வேலுச்சாமியின் உடல் இரவு 7 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சந்தியா, மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில், கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், வாங்கல் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் சுமார் 7 மணி வரை இருந்து, சுடுகாட்டுப் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தியதால், மயான பாதை துரிதகதியில் அமைக்கப்பட்டது. மயான பாதை அமைப்பதற்கு தேவையான நிலத்தை சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அரசுக்கு வழங்குவதாக ஒப்புக் கொண்டதையடுத்து, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

Also Read: ஈரோடு: `பிளீச்சிங் பவுடர் ரூ.5 லட்சம்; சாக்கடை டு சுடுகாடு ஊழல்!’ - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் புகார்

இதற்கிடையில், போராட்டத்தின்போது உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பத்திற்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, ஈம சடங்கு நிதி ரூ. 22,500 மற்றும் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் ஆகிய உதவிகளைச் செய்தார். அதோடு, வேலுச்சாமியின் மனைவி மணிமேகலைக்கு, ஆதரவற்றோர் விதவைச் சான்று மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ. 1000 பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார். மேலும், உயிரிழந்த வேலுச்சாமியின் மூத்த மகன் சந்தோஷ் (வயது 19) பத்தாம் வகுப்பு படித்துள்ளார். மற்றொரு மகன் சாரதி (வயது 13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 'இருவருக்கும் கல்வி மேற்படிப்புக்கு உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும்' என மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில், ஆக்ரமிப்பில் இருந்த மயானப்பாதை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மக்கள்,

ஆட்சியர் உதவி

"மயானப் பாதை இல்லாம, நாங்க இறந்த உடல்களை கொண்டு போய் அடக்கம் பண்ண வழியில்லாமல் அல்லாடி வந்தோம். அதற்காகதான், 'செத்த பிறகும் எங்களுக்கு சுடுகாடுப் போக சுதந்திரம் இல்லை'னு சுதந்திர தினத்தில் போராட்டம் நடத்தினோம். அந்த போராட்டத்தில் தான், வேலுச்சாமி தன்னோட உயிரை விட்டார். எதற்காக போராடினாரோ அந்தப் பிரச்னை முடிந்து, முதல் உடலாக அந்த பாதையில் பயணித்து, வேலுச்சாமி இறுதி பயணம் மேற்கொண்டது எங்க துக்கத்தை அதிகப்படுத்தியது. இன்னொருபக்கம், 'எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சுருக்கு'னு உள்ளுக்குள் நிம்மதியா இருந்தது. இந்தப் பிரச்னையை உடனே தீர்த்ததோடு, போராட்டக் களத்தில் இறந்த வேலுச்சாமியின் குடும்பத்துக்கு பல உதவிகளை ஆட்சியர் செய்தது, எங்களை உணர்ச்சியில் நெஞ்சம் விம்ம வச்சுட்டு" என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/in-karur-people-protest-for-road-and-finally-they-got-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக