தூத்துக்குடி மாவட்டம் கொற்கை அருகில் உள்ளது அகரம். இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்சீலன் இருந்தது வந்தார். அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவரானார். அத்துடன், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 31 ஊராட்சிகளின் கூட்டமைப்புத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகரம் கிராமத்தில் கோயில் தற்போது தான் திருவிழா நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் அதே பஞ்சாயத்தின் துணைத் தலைவரான தவசிக்கனியின் வீட்டிற்கு கறிவிருந்திற்காகச் சென்றார்.
அங்கு, விருந்துச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தவசிக்கனியின் தெருவிற்குள் வந்த ஒரு காரில் வந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பொன்சீலனை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பொன்சீலன் உயிரிழந்தார். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து தகவல் அறிந்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். இச்சம்வம் தொடர்பாக ஏரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதத்தால் பழிக்குப்பழியாக கொலை நடந்ததாகத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “இதே கிராமத்தைச் சேர்ந்த மோகன், தூத்துக்குடி துறைமுகத்தில் கழிவு எண்ணெய், உரம் உள்ளிட்ட வேஸ்டேஜ்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். அவரிடம் கொலை செய்யப்பட்ட பொன்சீலனும் அவரது நண்பரான லெனினும் 10 வருஷத்துக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இதில், மோகனுக்கும் பொன்சீலனுக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்துள்ளது. கடந்த 2008-ல் மோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பொன்சீலனும், லெனினும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சாட்சிகள் இல்லாததால் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து மோகன் செய்து வந்த துறைமுக வேஸ்டேஜ் கழிவுகளை விற்பனை செய்வது தொடர்பாக பொன்சீலனுக்கும் லெனினுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் தனித்தனி அணியாகப் பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அகரத்திலுள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் வைத்து லெனினை 14 பேர் கொண்ட கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் பொன்சீலனும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு, ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. லெனினின் கொலைக்குப் பிறகு பொன்சீலன் அகரத்திலிருந்து வீட்டைக் காலி செய்து விட்டு முத்தையாபுரத்தில் வசித்து வந்தார். சமீப காலமாகத்தான் அகரம் ஊருக்குள் வந்து சென்று கொண்டிருந்தாராம். லெனினின் கொலைக்குப் பழி தீர்க்கும் வகையில் லெனினின் தம்பிகளான ஜெகன், ரூபன் ஆகியோரின் தூண்டுதலினால் பொன்சீலன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது ஒருபுறமிருக்க, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் அகரம் பெருமன்ற உறுப்பினர் தேர்தல் நடந்தது.
இதில், பொன்சீலன், ஜெபசிங் சாமுவேல் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில், பொன்சீலன் வெற்றி பெற்றார். தோல்வியுற்ற ஜெபசிங் சாமுவேலின் உறவினர். தேர்தல் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும்” என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
source https://www.vikatan.com/news/crime/panchayat-leader-brutally-hacked-to-death-is-it-because-of-antecedents
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக