Ad

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

Covid Questions: கொரோனா காலத்தில் வெளியே செல்லும் வயதானவர்கள்; பாதுகாப்பாக இருப்பது எப்படி?

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு, இரண்டு வாரங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதாவது, முடிந்த அளவு வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாம். ஏனெனில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்... அதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இது உண்மையா? நான் என் தந்தையை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வாடகை காரில் முகக்கவசம் அணிந்து ஏ.சி போட்டு பயணிக்கலாமா? ஓட்டுநர் முகக்கவசம் சீராக அணிந்து இருப்பார் என்பதை நாம் உறுதியாகக் கூற முடியாது. பலரும் மூக்குக்கு கீழ் தான் மாஸ்க் அணிகிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?

- ரிஷி (விகடன் இணையத்திலிருந்து)

வயதானவர்கள் காரில் டிரைவருடன் பயணம் செய்யும்போது கொரோனா தாக்காமல் எவ்வாறு பாதுகாப்பாகச் செல்வது? மழைக்காலத்தில் ஜன்னலைத் திறக்க முடியாது. ஏசி போட்டுக்கொண்டு பயணம் செய்யலாமா?

- சுப்பு (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக் குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``கொரோனா இன்னும் நம்மைவிட்டு முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே போவது பாதுகாப்பானது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தடுப்பூசி போட்டு இரண்டாவது வாரத்திலிருந்துதான் எதிர்ப்பு சக்தி வரத் தொடங்கும். இரண்டாவது டோஸும் போட்டு, இரண்டு வாரங்கள் கழித்துதான் முழுமையான எதிர்ப்புசக்தி கிடைக்கும். எனவே, தடுப்பூசி போட்ட அடுத்த நிமிடமே நாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டு வெளியே சுற்ற வேண்டாம்.

பெரியவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது இதைக் கவனத்தில் கொள்ளவும். உதாரணத்துக்கு அவர்களுக்கான அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் (உதாரணத்துக்கு டயாலிசிஸ் போன்றவை) போன்றவற்றுக்கு மட்டும் வெளியே அழைத்துச் செல்லலாம். அப்போது வாடகை காரில் செல்வதாக இருந்தால் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றும் வசதி உள்ளதா என்று பார்த்து அதில் அழைத்துச் செல்லலாம்.

Also Read: Covid Questions: வீட்டுக்கு வாங்கி வரும் பொருள்களை இனியும் கிருமிநீக்கம் செய்ய வேண்டுமா?

டிரைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகூட இன்று பல வாடகை கார் சர்வீஸ்களில் குறிப்பிடப்படுகிறது. அதையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். டிரைவர் முகக் கவசம் அணிந்திருக்கிறாரா, சரியாக அணிந்திருக்கிறாரா என்று உறுதி செய்யலாம். அப்படி அணியாதபட்சத்தில் அதை வலியுறுத்தலாம். காரில் பயணிப்பவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும்.

பெரியவர்களை அழைத்துச் செல்லும்போது டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் அமரச் செய்யாமல் பின் இருக்கையில் அவர்களை அமர வைத்து அழைத்துச் செல்லலாம். டிரைவர் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் நடுவில் தடுப்பு பொருத்தப்பட்ட வாகனங்கள்கூட இன்று இருக்கின்றன. அப்படிப்பட்ட வாகனங்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் பாதுகாப்பானது.

India Covid 19 Outbreak

Also Read: Covid Questions: இணைநோய்கள் உள்ள முதியோர்கள்... கொரோனா சூழலில் ஹெல்த் செக்கப் செய்யலாமா?

கூடியவரையில் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் செல்லும்போது ஏசி உபயோகத்தைத் தவிர்ப்பது நல்லது. கண்ணாடிக் கதவுகளை இறக்கிவிட்டு, காற்றோட்டமாகப் பயணிப்பதே பாதுகாப்பானது. மழைக்காலத்தில் காரில் பயணிக்கும்போது ஜன்னலை முழுமையாகத் திறக்காமல், அதே நேரம் ஏசியும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் என எல்லோருக்கும் இந்த விஷயங்கள் பொருந்தும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/how-to-ensure-the-safety-of-travelling-senior-citizens-in-this-pandemic

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக