Ad

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

அவசர கால நிதி: உங்கள் நிம்மதிக்கு கியாரண்டி தரும் சூப்பர் ஃபார்முலா! - பணம் பண்ணலாம் வாங்க - 7

பர்சனல் ஃபைனான்ஸ் போதகர்கள் கூரை மேல் நின்று கூறும் முதல் கட்டளை, ``அவசர காலத்துக்குத் தேவையான நிதியைச் சேமியுங்கள்” என்பதுதான்.

கிரெடிட் கார்டும், பர்சனல் லோன்களும் இருக்கும் தைரியத்தில், சேமிப்பு என்பது போன வருடம் வரை ஒரு வேண்டாத விருந்தாளியாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா காலத்தில் பட்ட அவதியில் நமக்கு அதன் அவசியம் புரிந்துவிட்டது.

குடும்பத்தில் அத்தனை பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுவிட்ட நிலையில், சம்பாதிப்பது யார், பூதாகரமாக நிற்கும் பில்களுக்குக் கட்ட பணம் ஏது என்கிற நிலைதான் பலருக்கும் இருந்தது.

Savings (Representational Image)

சேமிக்காது விட்டவர்கள் நிலைமை இப்படி என்றால், சிக்கனமாக இருந்து சேமிப்பில் கணக்காக இருந்தவர்கள் கூட அவதிப்பட்டார்கள். ஏனெனில், அவசர கால நிதிக்கும் நல்ல வட்டி வர வேண்டும் என்று விரும்பிய அவர்கள் தங்கள் பணத்தை 4 - 6% வட்டி தரும் வங்கி எஃப்.டியிலும், லிக்விட் ஃபண்டுகளிலும் வைத்திருந்தார்கள்.

லிக்விட் ஃபண்டில் உடனடியாக ரூ. 50,000 வரை பணமாக்க முடிந்தாலும், மீதிப் பணம் வெளிவர ஓரிரண்டு தினங்கள் ஆகும். இடையில் விடுமுறைகள் வர நேர்ந்தால் நான்கு நாள்கள்கூட ஆகலாம். வரும் பணமும் வங்கிகள் மூலமே வரும். ஆனால், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது வங்கிகளை அணுகுவது கடினம். கேரளாவிலும் சென்னையிலும் வெள்ளம் வந்தபோது வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது இயலாத காரியமாக இருந்தது. வங்கிகள்தான் பத்தடி ஆழ வெள்ளத்தில் மூழ்கி இருந்தனவே? ஆகவே, அவர்கள் முயற்சி வீணாகியது.

வெறும் வியாதிகளும் வெள்ளங்களும் மட்டுமல்ல, கீழ்க்கண்ட பல வேளைகளும் ரெடியாகப் பணம் தேவைப்படும் அவசரகாலங்கள்தான்.

  1. விபத்து

  2. உடல் நலக் குறைவு

  3. பூகம்பம், வெள்ளம், காட்டுத் தீ, சுனாமி

  4. வேலை இழப்பு

  5. கம்பெனியே மூடப்படுவது

  6. சட்டப் பிரச்னைகள்

  7. குடும்பப் பிரச்னைகள்

  8. சொத்துத் தகராறுகள்

இது போன்ற தருணங்களில், நமக்கு உதவக்கூடியவர்களும் சிக்கலில் இருக்கும்போது, யாரிடம் கேட்க முடியும்? கொரோனா லாக்டௌனால் ஏ.டி.எம்-களில் பணம் நிரப்ப முடியாத நிலைமை வங்கிகளுக்கு. ஆஸ்பத்திரிகளிலோ, ஹெல்த் இன்ஷூரன்ஸ் கார்டைக் காட்டினாலும், முன்பணம் கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம்.

Money (Representational Image)

Also Read: சம்பளம் மட்டும்தான் உங்க நிதிப்பிரச்னைக்கு காரணம்னு நினைக்குறீங்களா? இதுவும் பிரச்னைதான்! - 5

மிகுந்த முன்யோசனையுடன் தொடங்கப்பட்ட வங்கி எஃப்.டி-க்களும், ஹெல்த் இன்ஷூரன்ஸும்கூட உதவாது எனில் எங்குதான் சேமிப்பது, எவ்வளவுதான் சேமிப்பது? இதற்கு பர்சனல் ஃபைனான்ஸ் கூறும் விடைகளைப் பார்ப்போம்.

ஒரு குடும்பத்தில் மாதம் ரூ.30,000 செலவு என்று வைத்துக் கொண்டால், அவசரகால நிதியாக ஆறு மாதங்கள் முதல் ஒன்பது மாதங்களுக்குத் தேவையான பணமாக சுமார் ரூ.2 - 2.7 லட்சம் வரை அவசரகால நிதியாக வைத்திருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால், சமீபத்தில் வெள்ளங்களால் வீடும், வீட்டு உபயோகப் பொருள்களும் மிகுந்த பாதிப்படைந்ததைக் காணும்போது அவற்றை மீட்டெடுக்க குறைந்த பட்சம் ரூ.1 லட்சம் எக்ஸ்ட்ராவாக சேமிக்க வேண்டும் என்று பர்சனல் ஃபைனான்ஸ் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அவசரகால நிதிக்கு இவ்வளவு பணம் எப்படி சேமிப்பது என்று கவலைப்பட வேண்டாம். இது ஒரே இரவில் நடக்கக்கூடிய காரியமல்ல. முன்கூட்டியே திட்டமிட்டு மாதம்தோறும் மாதம் அதற்கான பணத்தைத் தனியாக சேமித்து வர வேண்டும். தேவை எனில், மற்ற முதலீடுகளைத் தற்காலிகமாகக் குறைத்துக் கொண்டு அவசரகால நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் தவறில்லை.

எங்கு சேமிப்பது என்பதே அடுத்த கேள்வி. பணமே ராஜா (Cash Is King) என்று ஒரு பழமொழி உண்டு. அவசரகால நிதியில் இது நூற்றுக்கு நூறு உண்மை. குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்குத் தேவையான பணத்தையாவது வீட்டில் கேஷாக வைத்திருக்க வேண்டும்.

Money (Representational Image)

Also Read: குற்றவுணர்ச்சியுடன்தான் எப்போதும் பணத்தை செலவழிக்கிறீர்களா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - 6

வீட்டில் வைத்திருக்கும் பணத்துக்கு வட்டி கிடைக்காது என்பதால், வங்கி எஃப்.டி அல்லது லிக்விட் ஃபண்டுகளில் மீதிப் பணத்தைப் போட்டு வைக்க எண்ணுபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

நம் அவசரகால நிதியை மூன்றாகப் பிரித்து ஒரு பங்கை பணமாக வீட்டிலும், வங்கி சேவிங்ஸ் அக்கவுன்ட்டிலும் வைக்கலாம். அடுத்த பங்கை வங்கியில் ஒரு வருட எஃப்.டி.யிலும் மீதி உள்ளதை லிக்விட் ஃபண்டிலும் போட்டுவைக்கலாம். சுனாமியோ, பெருந்தொற்றோ மற்ற பிரச்னைகளோ வருவதைத் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால், அவற்றைச் சமாளிக்கும் கேடயமாக அவசரகால நிதி இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இனி அந்தக் கேடயத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்குவோம்!

- அடுத்து வெள்ளிக்கிழமை சந்திப்போம்.

பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர். திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!


source https://www.vikatan.com/business/finance/how-to-build-an-emergency-fund-and-why-it-is-important

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக