தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுமையாகக் கைப்பற்றினர். அமெரிக்கா ஆப்கனில் இருந்து தனது படைகளைத் திரும்பப்பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் 20 வருடங்களுக்குப் பிறகு தாலிபன்கள் அரசிடமிருந்து தலைநகர் காபூல் உள்பட அந்நாட்டின் அனைத்து நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். 'இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆ ஃப் ஆப்கானிஸ்தான்' என்று அந்நாட்டின் பெயரை மாற்றிய தாலிபன்கள் நாட்டை கைப்பற்றிய பிறகு நேற்று முதன் முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.
தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் ஊடக மற்றும் தகவல் மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தாலிபன் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "ஆப்கனை சுமார் 20 வருடகால போராட்டத்திற்குப் பின்னர் நாங்கள் விடுவித்திருக்கிறோம். எங்கள் மண்ணிலிருந்து வெளிநாட்டவரை வெளியேற்றியிருக்கிறோம். இது ஒரு பெருமிதமான தருணம் என்று தான் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தான் இனி மோதல்கள் நிகழும் போர்க்களமாக இருக்காது என்று உறுதியளிக்கிறோம். எங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அனைவரையும் நாங்கள் மன்னித்து விட்டோம். ஆப்கன் போர் முடிவுக்கு வந்து விட்டது. எங்களுக்கு உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எந்த எதிரியும் வேண்டாம். நாங்கள் உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம்.
எங்களால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே அவர்கள் பயப்படத் தேவையில்லை. ஆப்கானிஸ்தான் முழுவதும் பாதுகாப்பான சூழல் தான் நிலவிக் கொண்டிருக்கிறது. யாரும் நாட்டை விட்டு வெளியேறத் தேவையில்லை. எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கொலையும், கொள்ளையும் நடைபெறுவதாகக் கூறப்பட்டு வருகிறது. இங்கு யாரும் யாரையும் கடத்த முடியாது. நாங்கள் ஒவ்வொரு நாளும் ஆப்கனின் பாதுகாப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கவே விரும்புகிறோம். பகையை வளர்க்க விரும்பவில்லை.
ஆப்கானிஸ்தான் 20 வருடங்களுக்கு முன்பும் இஸ்லாமிய நாடு தான், இப்போதும் இஸ்லாமிய நாடு தான், நாளையும் அதே தான். ஆனால், அனுபவம் மற்றும் பக்குவ ரீதியாக தற்போது நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பிருந்தவர்கள் அல்ல. எங்களிடம் பல விஷயங்களில் வேறுபாடுகளை நீங்கள் காண்பீர்கள். முதலில் நாங்கள் ஆப்கனில் ஒரு முறையான அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறோம். அதைத் தொடர்ந்து, இங்கு என்ன விதமான சட்டங்களை அமல்படுத்தப் போகிறோம் என்பது குறித்துத் தெரிவிக்கிறோம்.
Also Read: `தாலிபன்கள் வசமான ஆப்கன்... வெளியேறிய அதிபர் கனி; நாட்டின் பெயர் மாற்றம்?’ - தற்போதைய நிலை என்ன?
ஆப்கனில் சர்வதேச ஊடகங்கள் எந்த வித தடையுமின்றி களத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பத்திரிகையாளர்கள் 'இஸ்லாம்' மதத்திற்கு எதிராகச் செயல்படக் கூடாது.
எங்கள் தலைமையிலான ஆப்கனில் இஸ்லாமின் ஷரியா சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்படும். பெண்கள் பணி புரியவும், படிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் சமூகத்தில் எப்போதும் போல் இருக்கலாம், ஆனால் ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். மருத்துவத்துறை முதல் அனைத்து துறைகளிலும் பெண்கள் அவர்கள் விருப்பம்போல் பணியாற்றலாம். தாலிபன்கள் தலைமையிலான இந்த ஆப்கனில் பெண்களுக்கு அனைத்து விதத்திலும் சம உரிமை வழங்கப்படும். இங்கே பாகுபாடு என்ற பேச்சுக்கு இடமிருக்காது என்பதை மிக உறுதியாகக் கூறுகிறோம்" என்றார்.
தாலிபன்களின் செய்தியாளர் சந்திப்பு குறித்த செய்திகள் இன்று சர்வதேச பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வெளிவந்திருக்கிறது. தாலிபன்களின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்திருப்பதாக ஒருதரப்பினரும், இல்லை தாலிபன்கள் தற்போதும் 'மதவாதம்' என்ற கருவியைப் பயன்படுத்தி ஆப்கன் மக்களை வதைக்கத் துடிப்பதாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆப்கன் குறித்து ஒட்டுமொத்த உலகமும் பரபரத்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் சர்வதேசளவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள 'தாலிபன்' அமைப்பின் கைக்கு ஆப்கனின் ஆட்சி அதிகாரம் சென்று விட்டதால் அவர்கள் பயங்கரவாதிகள் இல்லையென்று அர்த்தம் அல்ல கூறி விட்டு, தாலிபன் தொடர்பான அனைத்து கணக்குகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாகப் பதிவிடுவோரின் கணக்குகளையும் பதிவுகளையும் சட்ட விதிகளின் படி நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றன.
Also Read: தாலிபன்கள்... ஆப்கனை ஆளப்போகும் இவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு என்ன? ஓர் அலசல்!
source https://www.vikatan.com/government-and-politics/international/women-rights-to-press-freedom-talibans-first-official-press-meet-details
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக