நான் 2015-ம் ஆண்டு Guillain Barre Syndrome (GBS) நோயால் பாதிக்கப்பட்டேன். அப்போது கைகால்கள் முழுவதும் செயல் இழந்தன. தற்போது நலமாக இருக்கிறேன். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
- சுப்பிரமணி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் இந்தப் பாதிப்பை பற்றி விளக்கிவிடுகிறேன். குலியன் பாரி சிண்ட்ரோம் என்பது நரம்புகளைப் பாதிக்கிற ஒரு பிரச்னை. அது பாக்டீரியா அல்லது வைரஸ் என ஏதோ ஒரு தொற்றின் பின்விளைவாக இருக்கலாம் அல்லது எந்தக் காரணமும் இல்லாமலும் வரலாம்.
இதுவரை இதுதான் குலியன் பாரி சிண்ட்ரோமை ஏற்படுத்துகிறது என எந்தக் காரணமும் கண்டறியப்படவில்லை. இந்தப் பாதிப்பு வரும்போது நம் உடலிலுள்ள நரம்புகளை எதிர்த்து உடலானது எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. அப்போது நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அதனால் மூளை மற்றும் முதுகுத்தண்டை உள்ளடக்கிய மத்திய நரம்பு மண்டலமும், உடலின் பிற நரம்புகளை உள்ளடக்கிய பெரிஃபரல் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகின்றன.
Also Read: Covid Questions: தொட்டாலே நமக்கு தொற்றுமா கோவிட்?
தொடுதல் உள்ளிட்ட அத்தனை உணர்வுகளும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவை என்பதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், குத்துவது போன்ற உணர்வு, கூச்சம், மரத்துப்போவது, கைகால்களைத் தூக்க முடியாமல்போவது போன்றவை வரலாம். முதலில் உடலின் ஒரு பக்கத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் பல தசைகளையும் பாதிக்கும் அளவுக்கு இந்த நோய் தீவிரமாகக்கூடும்.
பெரும்பாலும் பலரும் இதிலிருந்து சீக்கிரமே குணமாகிவிடுகிறார்கள். சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு தீவிரமாவதும் உண்டு. இதற்கென பிரத்யேக சிகிச்சை இல்லை. தொந்தரவுகளுக்கேற்ப ஆதரவு சிகிச்சையும், எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தும் சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும்.
Also Read: Covid Questions: முதலில் சினோஃபார்ம் போட்டுக்கொண்டேன்; இப்போது ஃபைஸரும் போடச்சொல்கிறார்கள்; போடலாமா?
ஏற்கெனவே குலியன் பாரி சிண்ட்ரோம் பாதிப்புக்குள்ளாகி குணமானவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. ஜான்சன் அண்டு ஜான்சன் தயாரிக்கும் கோவிட் தடுப்பூசி, சமீபத்தில்தான் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்வோரில் அரிதாகச் சிலருக்கு (0008% பேருக்கு) தடுப்பூசியின் பக்க விளைவாக குலியன் பாரி சிண்ட்ரோம் பாதிப்பு வருவதாக ஒரு தகவல் சொல்கிறது.
ஏற்கெனவே குலியன் பாரி வந்தவர்கள் எனில், எந்தத் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என உங்கள் மருத்துவரிடம் ஓர் ஆலோசனை கேட்டுக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தசைகளில் பலவீனம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/i-have-suffered-from-guillain-barre-syndrome-in-the-past-can-i-take-covid-vaccine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக