உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் காட்டுத்தீ தீவிர பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் மலைச்சரிவுகள் முழுக்க காட்டுத்தீ தன்னுடைய மஞ்சள் கரங்களில் சிக்கும் அனைத்தையும் இரையாக்கிக் கொண்டிருக்கிறது.
சைபீரியாவின் பசுமை நிறைந்த அடர்காடுகள் முழுக்க நெருப்பில் சிக்கி, பழுப்பு நிறத்தில் பொலிவிழந்துள்ளது. சைபீரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காட்டுத்தீ பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, ஐரோப்பா, வட அமெரிக்கா, ரஷ்யா என்று அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கோடைக்காலத்தின் ஜூலை மாதம், மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளது.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள் ஒவ்வோர் ஆண்டின் கோடைக்காலத்திலும் இதுபோன்ற காட்டுத்தீ விபத்துகளை எதிர்கொள்வது வழக்கமானதுதான். இருந்தாலும், காலநிலை மாற்றம் ஆண்டுக்கு ஆண்டு, புவியின் வெப்பநிலையை அதிகப்படுத்துவது, அதன்விளைவாக கோடைக்கால வறட்சி அதிகரிப்பது ஆகியவை இந்தப் பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்விளைவாக காட்டுத்தீ விபத்துகளின் வீரியமும் அதிகமாகியுள்ளது.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில், இரண்டு ஆண்டுகளாக நீடித்த வறட்சியின் விளைவாக இந்த ஆண்டில் காட்டுத்தீயின் எண்ணிக்கையும் சேதங்களும் முன் எப்போதையும்விட அதிகம். ஜூலை மாதத்தின் இடையில், ஒரேகன் மற்றும் கலிஃபோர்னியாவிலுள்ள சில பகுதிகளில் தொடங்கிய நெருப்பு, இதுவரை சுமார் 2,30,000 ஹெக்டேர் நிலப்பகுதியில் பரவி சேதங்களை விளைவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும், காட்டுத்தீ விபத்துகளால் அமெரிக்கா முழுக்க ஒரு மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை இரையாக்கிக் கொண்டுள்ளது.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில், கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், காட்டுத்தீயால் ஏற்படும் இழப்புகள் எந்த எல்லை வரைக்கும் செல்லக்கூடும் என்பதற்கான சான்றாகும் அளவுக்கு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அங்கு அமைந்துள்ள சிறிய நகரமான லிட்டன் பூமியில் மிகவும் சூடான பகுதிகளில் ஒன்றாகக் கடந்த மாதத்தில் பதிவாகியுள்ளது. அங்கு பதிவான வெப்பநிலை 49.5 டிகிரி செல்ஷியஸ். இது, கனடாவின் வெப்பநிலையில் இதுவரை பதிவாகாத வெப்பநிலை. இந்த வெப்பநிலையைத் தொடர்ந்து, மிகத் தீவிரமான காட்டுத்தீ லிட்டன் நகரம் முழுக்கப் பரவி 90 சதவிகித நிலப்பகுதி மற்றும் கட்டுமானங்களுக்குப் பரவியது. அங்கு வாழ்ந்த மக்கள் நெருப்பிலிருந்து தப்பித்துப் பிழைக்கக் கிடைத்த நேரம் மிகச் சொற்பமே.
Also Read: கனடா வெப்ப அலை: உருகும் சாலைகள், உயிரிழந்த 200 பேர்; காலநிலை மாற்றம்தான் காரணமா?
தெற்கு ஐரோப்பாவிலுள்ள மத்திய தரைக்கடல் நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலை மோசமாகப் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதியன்று வடக்கு கிரேக்கத்திலுள்ள ஒரு நகரத்தில் பதிவாகிய வெப்பநிலை 47.1 டிகிரி செல்ஷியஸ். ஐரோப்பா முழுக்கவே பதிவான சராசரி வெப்பநிலை 48 டிகிரி. ஏதென்ஸ் நகரத்தில் பரவிய காட்டுத்தீ, குடியிருப்புகள் வரை பரவியதால், நகரத்தைச் சூழ்ந்த புகைத்திரளுக்கு மத்தியில் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டுத் தப்பிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்துக்கு 11,000 ஹெக்டேர் காடுகள் இரையானதோடு, துருக்கியின் தெற்கில் அமைந்துள்ள மனாவ்கட் என்ற நகரத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்தச் சேதங்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு விமானங்கள் இல்லை என்றும் துருக்கி அரசின் செயல்திட்டம் இந்தச் சேதங்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கு இல்லையென்றும் அந்நாட்டு மக்கள் கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 800 தீ விபத்துகள் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1-ம் தேதியன்று, அந்நாட்டின் கிழக்கு கரையோர நகரமான பெஸ்காராவுக்கு அருகிலிருந்த காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தப்பிக்க, அப்பகுதிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அந்த நகரத்தின் கடற்கரை ரிசார்ட்டுகளில் தஞ்சம் புகுந்தனர். மத்திய தரைக்கடலில் இருந்து 2000 மைல் வடக்கே அமைந்துள்ள வடக்கு ஃபின்லாந்தில் காட்டுத்தீ சம்பவங்கள் மிகவும் அரிதாக நடைபெறும். ஆனால், ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் அங்குள்ள கலஜோகி நதிப்படுகையில் 300 ஹெக்டேர் காட்டுப்பகுதி தீக்கிரையானது. 1971-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீ விபத்து இதுதான்.
இங்கு மட்டுமின்றி, உலகம் முழுக்கவே காலநிலை மாற்றத்தின் தீவிரமான பிரச்னையாகக் காட்டுத்தீ நிலவி வருகிறது. ஃபின்லாந்தில் மட்டுமன்றி, அங்கிருந்து சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கிழக்கு ரஷ்யாவிலுள்ள சைபீரிய யகூடியா பகுதியிலும் இந்தப் பிரச்னை அதிகச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் இதுவரை, 4.2 மில்லியன் ஹெக்டேர் நிலப்பகுதி காட்டுத்தீ விபத்துக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சதுப்பு நிலங்களும்கூட காட்டுத்தீயில் பாதிக்கப்படுவதால், நிலத்தடி உறைபனி வரை இதன் தாக்கம் இருப்பதால், அவை உருகுவதாக ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலத்தடி உறைபனியிலுள்ள மீத்தேன் போன்ற ஆபத்தான பசுமைக் குடில் வாயுக்கள் வெளியாவது பிரச்னையை இன்னும் மோசமாக்கும் என்கின்றனர் காலநிலை ஆய்வாளர்கள். ஆகஸ்ட் 4-ம் தேதியன்று, ஐரோப்பிய யூனியனில் அமைந்திருக்கும் கோப்பர்நிகஸ் கண்காணிப்பு மையம், ``இந்த ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்துகளால் இதுவரை சுமார் 505 மெகா டன்கள் கரிம வாயு வளிமண்டலத்தில் வெளியேறியிருக்கலாம்" என்று கூறுகிறது. இந்த அளவு 2020-ம் ஆண்டு காட்டுத்தீ விபத்துகளில் வெளியான அளவைவிட அதிகம். கடந்த ஆண்டில் காட்டுத்தீ காலகட்டத்தில் வெளியான மொத்த கரிம அளவு 450 மெகாடன். 2021-ம் ஆண்டின் காட்டுத்தீ காலகட்டம் இன்னும் நிறைவடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற காட்டுத்தீ விபத்துகளின் வழியே வெளியாகும் பசுமைக் குடில் வாயு, புதைபடிம எரிபொருள் பயன்பாட்டின் மூலம் வெளியாகும் வாயுக்களோடு சேர்ந்து மேலும் அதிகமாகவே புவி வெப்பமயமாதலில் பங்கு வகிக்கும். இதனால், புவி வெப்பநிலை அதிகமாவதும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும். இனி வரும் ஆண்டுகளில் காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் முன் எப்போதையும்விட அதிகமாக இருக்கும் என்று ஐ.பி.சி.சி அறிக்கை எச்சரித்துள்ளது.
காலநிலை தொடர்பான பேரிடர்கள் உலகம் முழுக்கவே தீவிரமடைந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமையன்று வெளியான ஐ.பி.சி.சி ஆய்வறிக்கை, பூமி மனிதத் தலையீடுகளால் ஏற்படும் மாற்றங்களைத் தாக்குப்பிடிக்கும் திறனை இழந்துவிட்டது என்று கூறியுள்ளது.
Also Read: காட்டுத்தீ, வெட்டுக்கிளி படையெடுப்பு, சூறாவளி... 2020-ன் டாப் 10 சூழலியல் நிகழ்வுகள்! #Rewind2020
இயற்கையான சூழலியல் கட்டமைப்புகளை மீட்டுருவாக்குவதோடு, கரிம வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதில் பன்னாட்டு அளவிலான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் இயற்கைப் பேரிடர்களின் பின்னணியை உணர்ந்து எதிர்வினையாற்றுவதும் அவசரக்கால அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்று உலகளாவிய சூழலியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காலநிலை மாற்றம் எவ்வளவு மோசமான விளைவுகளை எதிர்காலத்தில் கொண்டு வரப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே, உலகளாவிய காட்டுத்தீ பேரிடர்களைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறப் போகும் 26-வது காலநிலை உச்சி மாநாட்டில் உலக நாடுகள் இதற்கான முடிவுகளை எடுப்பதோடு, அதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்தியாக வேண்டும். அப்போதுதான், காலநிலையின் பிரச்னைகளை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளாவது ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
source https://www.vikatan.com/social-affairs/environment/us-cities-and-european-countries-facing-worst-wildfire-disasters-due-to-climate-change
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக