Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கொடநாடு வழக்கில் கவனம் செலுத்தும் திமுக அரசு... 'ஸ்கெட்ச்' யாருக்கு?

தமிழக அரசியல் களத்தில் கொடநாடு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

நேற்று சட்டசபையின் பொதுவிவாதத்தின்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாகப் பேச முற்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து, தி.மு.க அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர், சபாநாயகர் உத்தரவின்பேரில், அவைக் காவலர்களால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, பா.ஜ.க., பா.ம.க எம்.எல்.ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்துக்கு வெளியில் வந்தும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கினர் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.

அ.தி.மு.க போராட்டம்

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ``எதிர்க்கட்சிகள்மீது பொய் வழக்கு போடும் அராஜகச் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. திமுக அரசின் அராஜகத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும்விதமாக இன்றும் நாளையும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தைப் புறக்கணிப்பார்கள்” என்றார். கொடநாடு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்ப, எடப்பாடி பழனிசாமி மைக்கின் முன் வந்து மிக நீண்ட விளக்கம் அளித்தார்.

அவர் பேசும்போது, ``கொடநாட்டிலுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது. அந்தக் கொள்ளை முயற்சியின்போது அங்கிருந்த காவலாளி கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக ஏற்கெனவே, வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், கொடநாடு வழக்கில் சிலரின் ரகசிய வாக்குமூலத்தில் என்னுடைய பெயர் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதேபோல், இன்னும் சில அதிமுக நிர்வாகிகளின் பெயர்களையும் அதில் சேர்க்க முயற்சி நடைபெற்றுவருகிறது.

ஆனால், உண்மையில் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தவர்கள் திமுக-வினர்தான். கொடநாடு குற்றவாளிகளுக்காக ஆஜரானவர் திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆட்சியில், குற்றவாளிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும் தற்போது திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாகியிருக்கின்றனர். கொடநாடு வழக்கில் குற்றவாளிகளும், அரசு வழக்கறிஞர்களும் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனது பெயரைச் சேர்க்க முயன்றுவருகின்றனர். ஆனால், இந்தக் கொலை வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்துவருவது திமுக-தான்.

எடப்பாடி பழனிசாமி

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு ஆளும் திமுக அரசு ஆதரவளிப்பது ஏன் என்று தெரியவில்லை. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முறையாக வழக்கு முடியும் நிலையில், திமுக வேண்டுமென்றே அதிமுக நிர்வாகிகள்மீது வழக்கு பதிவு செய்து அச்சுறுத்த முயல்கிறது. அதிமுக அரசு நியாயமான முறையில் இந்த வழக்கை விசாரித்தது. ஆனால், குற்றவாளிகளைக் காப்பாற்ற கடந்த காலங்களில் திமுக முயன்றதை யாராலும் மறக்க முடியாது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மூன்று முறை தெரிவித்திருக்கிறது. இந்தநிலையில், வேண்டுமென்றே இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து திமுக எங்கள்மீது பழி சுமத்துகிறது" என்றார் காட்டமாக.

அ.தி.மு.க-வினர் சட்டசபையில் முழக்கமிட்டபோதே, முதல்வர் ஸ்டாலின் எழுந்து இந்த விவாகரம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்தார். அவர் பேசியதாவது, `` `எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதை நிரூபித்துவிட்டு இங்கிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தவரை, தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெறுகிறது. அரசியல் நோக்குடன் அல்ல. இதில் அரசியல் தலையீடோ, பழிவாங்கும் எண்ணமோ நிச்சயம் இல்லை. விசாரணை நடைபெறுகிறது. அதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில், நிச்சயமாக உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இந்த அரசு நிச்சயமாக சட்டத்தின் ஆட்சியை நடத்தும்'' என்றார்.

ஆனால், ``தி.மு.க அரசு திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கைக் கையிலெடுத்திருக்கிறது. வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க-வை முடக்கிவிட வேண்டும் என நினைக்கின்றனர்’’ என்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

வேலுமணி

அவர்கள் பேசும்போது, ``நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 1996 தேர்தலைப்போல மொத்தமாக ஸ்வீப் செய்துவிடலாம் என்றுதான் தி.மு.க தலைமை நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படி வரவில்லை. அ.தி.மு.க இவ்வளவு இடங்களைப் பிடித்ததை தி.மு.க தலைமையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதிலும் கோவை மாவட்டத்தில் மொத்தமாகத் தோல்வியடைந்தது ஸ்டாலினுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்தும், எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறோம். இதே நிலைமையில் போனால், நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என தி.மு.க தலைமை நினைக்கிறது. அதனால்தான், முதலில் வேலுமணிக்கு எதிராகச் சாட்டையைச் சுழற்றினார்கள். இப்போது கொலைப்பழியைச் சுமத்தி எடப்பாடி பழனிசாமியை முடக்க நினைக்கின்றனர்'' என்கிறார்கள்.

Also Read: கொடநாடு வழக்கு: சயானின் மூன்று மணி நேர ரகசிய வாக்குமூலம்; கலக்கத்தில் அதிமுக-வினர்?!

ஆனால் தி.மு.க தரப்பிலோ, ``இதில் அரசியல் பழிவாங்கல் என்பது துளியளவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எங்கள் தலைவர் சொன்னதுபோல தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம். அதுவும் மர்மமான முறையில் நடந்த சம்பவம் குறித்து, நியாயமான விசாரணை நடத்தவேண்டியது ஒரு அரசின் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம்'' என்கின்றனர்.

மூத்த பத்திரிகையாளர்கள் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது, ``உரிய அனுமதி இல்லாமல் மீண்டும் விசாரணை செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அது தவறு. ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துத்தான் மேலதிக விசாரணை நடக்கிறது. சட்டரீதியாக மட்டுமல்ல, அரசியல்ரீதியாகவும் இது சரியான நடவடிக்கைதான். எடப்பாடி பழனிசாமியின் மீது கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்த, சயானையும் மனோஜையும் அவருடைய காவல்துறையே விசாரணை செய்தது. எனில், விசாரணை எந்த அளவுக்கு நியாயமாக நடந்திருக்கும் என்று சொல்லுங்கள். நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. இது வெறும் கொலை, கொள்ளை வழக்கு மட்டுமல்ல, எதனால் இந்தச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன என இதற்குப் பின்னாலுள்ள அரசியல் முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டும்.

சயான்

இந்த விஷயத்தில், எடப்பாடி பழனிசாமி இவ்வளவு பதற்றப்படுவதற்குக் காரணம், அ.தி.மு.க வர்த்தக அணியில் பொறுப்பிலுள்ள, மர வியாபாரி சஜ்ஜீவன் பெயரை சயான் விசாரணையில் கூறிவிடுவானோ என்கிற அச்சம்தான். அவர் பெயர் சொல்லப்பட்டுவிட்டால் நிச்சயமாக, எடப்பாடியின் தம்பியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வாய்ப்பிருக்கிறது. நேரடியாகத் தன்னை இல்லாவிட்டாலும் தன் தம்பியை இந்த வழக்கில் சேர்த்துவிடுவார்கள் என்கிற அச்சம் எடப்பாடி பழனிசாமியிடம் அதிகமாகவே இருக்கிறது'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-government-to-focus-on-kodanadu-case-sketch-for-whom

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக