ஒரே நாளில் வீழ்த்தப்பட்டது, ஆப்கன் தலைநகர் காபூல்! தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிபர் அஷ்ரப் கானி தப்பியோடிவிட்டார்! ஆப்கனில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளில் 90 சதவீதத்தினர் வெளியேறிவிட்டனர். இனி உயிருக்கு உத்தரவாதமில்லை, தப்பியோடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றுணர்ந்த ஆப்கன் மக்கள், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அண்டைநாடான பாகிஸ்தான் எல்லை நோக்கி தஞ்சமடைய, ஓடிக்கொண்டிருக்கின்றனர். பீதியடைந்த வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும், அங்கு இருக்கின்ற விமானநிலையங்களிலெல்லாம் ஈக்கள் போல மொய்த்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வெளியேற விரும்பும் அந்த மக்களை ஒன்றும் செய்திடவேண்டாம் என தாலிபன்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றன 60க்கும் மேற்பட்ட உலக நாடுகள்! எதற்காக இந்த மரணபயம்! என்ன நடந்தது ஆப்கானிஸ்தானில்? தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது, இனி என்னவெல்லாம் நடக்கப்போகிறது? சுருக்கமாகப் பார்ப்போம்!
இஸ்லாமியக் குடியரசான ஆப்கானிஸ்தான் பழமையான நாகரீக வரலாற்றைக் கொண்டது. அத்தகையப் பழம்பெருமை வாய்ந்த ஆப்கானிஸ்தான், இப்போது அவற்றுக்கெல்லாம் நேரெதிராக, மனித சமுதாயத்திற்கே சவால் விடுக்கும் பழமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. வெறும் பத்தே நாட்களில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் நாடும் வீழ்ந்து, தாலிபன்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. இப்படி நடப்பது இது இரண்டாவதுமுறை. ஏற்கனவே, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் தாலிபன்களின் அதிகாரக் கைகளுக்கு, முதன்முறையாக சென்றது ஆப்கானிஸ்தான். இப்போதைய அதிபர் அஷ்ரப் கனியை ஓடவிட்டதுபோல், அப்போது அதிபராக இருந்த புர்ஹானுத்தீன் ரப்பானியை தூக்கி எரிந்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை பிடித்தது தாலிபன் அமைப்பு.
ஆடல், பாடல், இசை, இன்பம், வெளியுலகத்தொடர்பு என ஆப்கன் மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பொழுதைக்கழிக்கக்கூடிய, ஒவ்வொன்றையும் முடக்கிப்போட்டனர். ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்கவேண்டும், பெண்கள் புர்க்கா அணிந்துகொண்டு, வீட்டுக்குள்ளாகவே அவர்களுக்கு சேவைகள் புரியவேண்டும். குழந்தைகள் பெற்றெடுப்பதற்கும், சமைத்துப் போடுவதற்கும் மட்டுமே பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தீவிரமான இஸ்லாமியப் பழமைவாத ஷரியத் சட்டங்களை உருவாக்கி அதை அப்பாவி ஆப்கன் மக்கள் மீது திணித்தனர். முரண்டுபிடித்தவர்கள், தவறுதலாக தவறிழைத்தவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி கொல்லப்பட்டனர். இதுதான் தாலிபன்களின் சட்டம் என்றனர்.
இவர்களின் கொள்கைகளைப் பின்பற்றும் இஸ்லாமிய மக்களுக்கும், மசூதிகளுக்கும் மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டது. மற்ற வழிபாட்டுத் தலங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. குறிப்பாக, 2001-ம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற, காலத்தால் பழமைவாய்ந்த பாமியன் புத்தர் சிலை, அப்பழமைவாதிகளால் உடைத்து துண்டாக்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தங்களின் இரக்கமற்ற செயல்பாடுகளால், உள்ளூர் மக்கள் முதல் உலகநாட்டு மக்கள் வரை கட்டுக்கடங்காத வெறுப்பை சம்பாதித்துக்கொண்டிருந்தனர் தாலிபன்கள். எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பது போல உச்சகட்டமாக நடந்தேறியது அந்த கோர நிகழ்வு. தாலிபன்களின் தயவில், அவர்களின் ஏகோபித்த ஆதரவில், அடைக்கலத்தில் செயல்பட்டு வந்த ஒசாமா பின்லேடனின் அல்-கொய்தா அமைப்பினர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் விமானத்தை மோதவிட்டு தகர்த்தெறிந்தனர்.
உலகின் மிக உயரமான உலக வர்த்தக மையம் உருத்தெறியாமல் தரைமட்டமானது. 2001, செப்டம்பர் 11 அன்று நடந்த இத்தாக்குதலில், சுமார் 3000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மக்கள் உயிரிழந்தனர். இதுபோதாதா, அமெரிக்காவை சினங்கொள்ளச் செய்வதற்கு. உலகப் பெரியண்ணனான அமெரிக்காவை பகைத்துக்கொண்டு, எந்தவொரு நாடும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது. அது எரிமலை முகடில் தலைவைப்பதற்கு சமம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியது அமெரிக்கா.
சம்பவத்திற்கு அடுத்தமாதமே பதிலடித் தாக்குதலுக்கு தயாரானது. அக்டோபர் 7-ம் தேதி தாலிபன் ஆட்சியிலான ஆப்கானிஸ்தான் மீது போர்த்தொடுத்துச் சென்றது அமெரிக்க ராணுவம். அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படையினரின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல், அடுத்த சில மாதங்களிலேயே மண்ணைக்கவ்வியது தாலிபன். இப்போது மக்கள் தப்பியோடுவது போல, அப்போது தாலிபன் மற்றும் அல்-கொய்தா அமைப்பின் முக்கியத்தலைவர்கள் முல்லா மொஹம்மது ஒமர், ஒசாமா பின்லேடன் உள்ளிட்டோர் பாகிஸ்தான் எல்லைக்குத் தப்பியோடினர்.
ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கட்டிலில் இருந்து, தாலிபன்கள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டனர். அமெரிக்கா ஆதரவுடன் 2004-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஹமீத் கர்ஸாய் புதிய அதிபராக தேர்வானர். ஆப்கன் அரச ராணுவத்திற்கு உறுதுணையாக அமெரிக்கப்படை அங்கு களத்தில் இருந்தது. இருப்பினும், தாலிபன்களின் கொட்டம் ஓயவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடியே தங்கள் இருப்பை காண்பித்துக்கொண்டிருந்தனர். அந்நிலையில், அமெரிக்காவிலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு பாரக் ஒபாமா புதிய அதிபரானர்.
அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானுக்கு போர்த்தொடுத்து வந்தவேலை இன்னும் முடியவில்லை. இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடனை பிடிக்காமல் பின்வாங்கப்போவதில்லை என்பதில் மேலும் உறுதியானது அமெரிக்கா. ஆனால், ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க தீவிரவாத குழுக்கள் மறுத்துவிடவே, போர் இன்னும் தீவிரமானது. 2009-ம் ஆண்டு சுமார் 1,50,000 லட்சம் வீரர்களை ஆப்கன் களத்தில் இறக்கியது அமெரிக்கா. உதவிக்கு கனடா, இங்கிலாந்து போன்ற சர்வதேச நாடுகளின் நேட்டோ படைவீரர்களும் நிலைகொண்டிருந்தனர்.
அமெரிக்காவின் பத்தாண்டு தேடுதல் வேட்டையின் இறுதி பலனாக அந்த நாளும் வந்தது. 2011 மே 2-ம் நாள் பாகிஸ்தானில் ரகசியமாகப் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை, அமெரிக்கா தனது சீக்ரெட் ஆபரேஷன் மூலம் சுட்டுக்கொன்றது. அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் இந்த துரித நடவடிக்கை உலக அளவில் வியந்துபார்க்கப்பட்டது.
அதற்கடுத்த ஆண்டு 2012 அக்டோபர் மாதம் பெண்கல்வி குறித்து பேசியதற்காக 15 வயது பாகிஸ்தான் சிறுமி மலாலா, தாலிபன்களால் சுடப்பட்டார். ஆனால் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மலாலா குண்டடிப்பட்ட நிகழ்வு மட்டுமே அப்போது பெரும்பாலான உலக மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், பள்ளிக்கூடம் சென்ற நூற்றுக்கணக்கான பெண்குழந்தைகள், குடிக்கும் தண்ணீரில் பாம்பு விஷத்தை கலந்தனர் தாலிபன்கள். பல பள்ளிக்குழந்தைகள் கொடூரமாக கொலைசெய்யப்பட நிகழ்வுகளும் போர்ச்சூழலுக்கு நடுவே நடந்துகொண்டுதான் இருந்தது.
அடுத்தகட்டமாக, தாலிபன் தலைவர்களின் தலையை இலக்கு வைத்தது நகர்ந்தது அமெரிக்கா, அச்சூழலில் 2013 ஏப்ரல் 23-ம் நாள் தாலிபன் தலைவரான முல்லா உமர் பாகிஸ்தான் மருத்துவமனையில் இருந்தபடியே, உடல்நலக்குறைவால் இறந்துபோன தகவலும் வெளியானது.
அமெரிக்கா படைகள், ஆப்கன் வந்த வேலை கிட்டதட்ட முடிவடைந்த நிலையில், தனது தாக்குதலில் வீரியத்தை வெகுவாக குறைத்துக் கொண்டது. காரணம், தாலிபன்களுக்கு எதிரானப் போரில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினர் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர். எனவே, பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் ராணுவத்திடமே ஒப்படைத்தது அமெரிக்கா.
2014-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் புதிய அதிபராக பதவியிலமர்கிறார் அஷ்ரப் கானி. அதே ஆண்டு, பெரும்பாலானா நேட்டோ படைவீரர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு நாடு திரும்பினர். இதுபோன்ற தொடர்ச்சியான நிகழ்வுகள் தாலிபன்களுக்கு சாதகமாக அமைந்தது. இனி ஆப்கானிஸ்தானை எளிதில் தங்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுவந்துவிடலாம் என உத்வேகம் பெற்றது. அதன் விளைவாக தற்கொலைப்படை தாக்குதல் போன்ற கொடூரமான முறையில் தாலிபன் தனது தாக்குதலை பன்மடங்கு அதிகரித்தது.
2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, சுமார் ஐம்பதாயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார். இது ஒருபுறம் தாலிபன்களின் கை ஓங்கி வருவதையும், அரச ராணுவம் பலவீனமடைந்து வருவதையும் வெளிக்காட்டியது.
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு கத்தாரில் உள்ள தோஹாவில் வைத்து சரியாக 2020 பிப்ரவரி 29-ம் நாள், அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தானது. அதில்,
இதனை ஏற்றுக்கொண்ட தாலிபன்கள் அமெரிக்க ராணுவத்தினரை தாக்கும் போக்கினை கைவிட்டனர். மாறாக, ஆப்கானிஸ்தானில் இருக்கும் முற்போக்கு சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் என குறிவைத்து தனிமனித தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், கடந்த ஏப்ரல் மாதம், 'அமெரிக்கா செப்டம்பர் 11-க்குள் முற்றிலுமாக தனது படையினரை திருப்பப்பெற்றுக்கொள்ளும்' என அறிவித்தார். அதன்படி தற்போது 90 சதவீத அமெரிக்கப்படையினர் தாயகம் திரும்பிவிட்டனர். இதுநாள் வரை ஆப்கன் அரசின் பாதுகாப்பு கேடயமாக விளங்கிவந்த அமெரிக்க ராணுவம் வெளியேறத்தொடங்கவும், ஆப்கானிஸ்தான் அரசு தனித்துவிடப்பட்டது.
Also Read: ஆப்கன்: `மூடப்பட்ட காபூல் விமான நிலையம்... திடீர் துப்பாக்கிச்சூடு’ -இந்தியர்களை மீட்பதில் சிக்கல்
அறிவிப்பு வெளியானது முதலே பல பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை படிப்படியாக பெருக்கியபடியே முன்னேறியது தாலிபன். பெரும்பாலான அமெரிக்க ராணுவத்தினர் வெளியேறியதும், ஆதரவின்றி நிற்கும் ஆப்கன் அரசை அசூரவேகத்தில் தாக்கத் தொடங்கியது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியிலிருந்து நீக்கப்படும் வரை ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பாது என பகிரங்கமாக அறிவித்தது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாநரங்களான குண்டூஸ், சார்-இ-புல், தலோகான் என அடுத்தடுத்து கைப்பற்றிய படியே, ஆப்கன் ராணுவத்தை பின்னோக்கி ஓடவிட்டது. தாலிபன்களின் இருபது ஆண்டுகால அதிகாரப்பசியும், அரக்கத்தனமாக தாக்குதல் வெறியும் ஆப்கன் அரச ராணுவத்தினரை நிர்மூலமாக்கியது. தாக்குதலை எதிர்கொள்ளமுடியாத பெரும்பாலான ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு, உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் தப்பியோடினர்.
வெறும் பத்தே நாட்களில், ஆப்கன் அரசின் அதிகார வளையம் தலைநகர் காபூலுக்குள் சுருங்கியது. இந்நிலையில், தலைநகரை சுற்றிவலைத்து தாக்கிய தாலிபன்கள், ஒரே நாளில் காபூலை தன்வசப்படுத்தினர். ``போர் முடிவடைந்துவிட்டது. ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டது" என ஊடகங்களுக்குத் தெரிவித்து வெற்றிக்கூக்குரலிட்டனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றப்போவதை முன்கூட்டியே அறிந்த அதிபர் அஷ்ரப் கனி, விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். பீதியடைந்த மக்களில் பெரும்பாலானோர் அண்டைநாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைவதற்காக எல்லை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆப்கனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், தங்கள் நாடுகள் அனுப்பும் விமானத்தில் ஏறி தப்பிச் சென்றுவிடலாம் என்ற நோக்கில் காபூல் விமான நிலையத்தில் கொத்தாக குவிந்துள்ளனர். தற்போது அந்த விமான நிலையம் அமெரிக்கா-நேட்டோ படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
Also Read: தாலிபன்கள் வசமான ஆப்கன்; தப்பியோடும் மக்கள்! கதறி அழும் பெண்கள்! - ஆப்கன் மக்களின் மனநிலை என்ன?!
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் சொந்த நாட்டு மக்களை தாலிபன்கள் தடுக்கக்கூடாது. அவர்கள் வெளியேற முழு அனுமதியளிக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 60 நாடுகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளன. ஆனால், தற்போது விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் பயணங்கள் அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், விமான நிலையத்திலேயே சிக்கிக்கொண்ட வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள் மரணபயத்தில் உறைந்துள்ளனர். தற்போது 5 பேர் காபூலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்கு அமெரிக்கப்படையினர் இருந்தாலும் அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில், தாலிபன் துணைத் தலைவர் முல்லா பரதார் வெளியிட்ட காணொளியில், `` நாங்கள் வந்த வேகத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் எட்டியிருக்கும் நிலையும் யாரும் எதிர்பார்க்காதது. நாங்கள் அல்லாவின் உதவியால் இந்த வெற்றியைப் பெற்றோம், இது போன்ற வெற்றி உலகில் எங்கும் நிகழ்ந்ததில்லை. எனவே நாங்கள் அல்லாவுக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இது சரி செய்வதற்கான நேரம். எங்கள் பணியை இந்த தேசத்துக்கு வழங்குவோம். ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானிலும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்வை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்!" என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும், தாலிபன்களின் கடுமையான இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டு, பெண் சுதந்திரம், பெண் கல்வி, பத்திரிகையாளர் பாதுகாப்பு, மதச்சிறுபான்மையினரின் நலன்கள் என அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பேரச்சத்தில் தான் இந்த நொடிவரையிலும் அம்மக்கள் தவித்துக்கொண்டிருக்கின்றனர். தாலிபன் அரசுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது இந்தியாவின் தேசநலனுக்கு பெரும் அச்சுறுத்தாக பார்க்கப்படுகிறது. அமையவிருக்கும் தாலிபன் ஆட்சியில் என்னவெல்லாம் இனி நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read: தாலிபன்கள்... ஆப்கனை ஆளப்போகும் இவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு என்ன? ஓர் அலசல்!
source https://www.vikatan.com/government-and-politics/international/what-will-happen-in-the-taliban-rule-what-is-the-future-afghanistan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக