Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

சென்னை: திருடப்பட்டது முழு பைக்; கிடைத்ததோ இன்ஜின்! - பால் வியாபாரிக்கு நேர்ந்த சோகம்

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பம்மல் வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (39). இவர் அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 26.7.21-ம் தேதி வீட்டின் வெளியே தன்னுடைய splendor பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பைக்கைப் பார்த்தபோது அதைக் காணவில்லை. அதனால் 27.7.2021-ம் தேதி சங்கர்நகர் காவல் நிலையத்தில் பைக்கைக் காணவில்லை என ராதாகிருஷ்ணன் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பைக்கைத் தேடிவந்தனர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் போலீஸார் விசாரணை நடத்தியபோதிலும் பைக் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

பைக்கின் சீட்

இந்தநிலையில் பால் வியாபாரத்துக்காக ராதாகிருஷ்ணன்,கடந்த 12.08.21-ம் தேதி திருநீர்மலை பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே முட்புதருக்குள் ராதாகிருஷ்ணனின் பைக் நம்பர் பிளேட் கிடந்தது. அதைப்பார்த்த ராதாகிருஷ்ணன், நம்பர் பிளேட்டை (TN22CE2319) கையில் எடுத்தார். பின்னர் அந்தப்பகுதியில் தேடி பார்த்தபோது பைக்கின் சீட் தனியாக கிடந்தது. ஆனால் பைக் கிடைக்கவில்லை. இதையடுத்து அவற்றை எடுத்துக் கொண்டு சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு ராதாகிருஷ்ணன் சென்று விவரத்தைக் கூறினார்.

உடனடியாக சங்கர் நகர் போலீஸார், காணாமல் போன பைக்கின் உதிரிபாகங்கள் கிடைத்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ ஒன்று அடிக்கடி அந்தப்பகுதியில் வந்து, செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அந்தப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் திருட்டு போன தகவல் தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்தபோது புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரியவந்தது. அவர் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.

மணி

இந்தநிலையில் போலீஸார் தேடிய ஆட்டோ, பம்மல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் முன் நின்றுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்று ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது அனகாபுத்தூர் எல்ஐசி காலனியைச் சேர்ந்த மணி (27) என்பவர் ஆட்டோவில் இரும்பு கம்பிகளை எடுத்துச் செல்வதாகக் கூறினார். அதனால் மணியைப் பிடித்து விசாரித்தபோது அவருக்கும் பைக் திருட்டு சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிந்தது. ஆனால் மணி, இரும்பு கம்பிகளைத் திருடி விற்பது தெரியவந்தது.

தொடர்ந்து மணியிடம் பைக் திருட்டு தொடர்பாக விசாரித்தபோது அவரின் நண்பரான லாரன்ஸ் (23) என்பவர்தான் ராதாகிருஷ்ணனின் பைக்கைத் திருடி உதிரி பாகங்களை பழைய இரும்பு கடை நடத்தி வரும் கருப்பசாமி (54) என்பவரிடம் விற்ற தகவல் தெரிந்தது. மணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லாரன்ஸ், கருப்பசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். லாரன்ஸிடம் விசாரித்தபோது ராதாகிருஷ்ணனின் பைக்கின் ஒவ்வொரு பாகங்களையும் கழற்றி அதை கருப்பசாமியிடம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறினார்.

லாரன்ஸ்

பைக்கின் உதிரிபாகங்களை கருப்பசாமியும் விற்று விட்டார். ஆனால் பைக்கின் இன்ஜின் மட்டும் விற்கப்படாமல் கடையில் இருந்தது. அதை மட்டும் போலீஸார் மீட்டனர். பைக் திருட்டு வழக்கில் மணி, லாரன்ஸ், கருப்பசாமி ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். திருடப்பட்ட பைக்கின் ஒவ்வொரு உதிரிபாகங்களும் விற்கப்பட்ட நிலையில் இன்ஜின் மட்டும் கிடைத்திருக்கிறது. சட்டநடவடிக்கைகளுக்குப்பிறகு ராதாகிருஷ்ணனின் பைக் இன்ஜினை அவரிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

பைக்கைத் திருடிய லாரன்ஸ் அதை மூன்று மணி நேரத்துக்குள் ஒவ்வொரு பாகங்களாகப் பிரித்து பழைய இரும்பு கடையில் எடைக்குப் போட்டு பணமாக மாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Also Read: சென்னை: 10 ரூபாயால் துப்பு துலங்கிய திருட்டு வழக்கு... நம்பிக்கை துரோகம் செய்த தம்பதி!



source https://www.vikatan.com/news/crime/bike-theft-case-3-persons-arrested-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக