Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கரூர்: தரம் குறைந்த நிலக்கரி; பல கோடி ரூபாய் ஊழல்?! - டி.என்.பி.எல் ஆலை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்

புகழ்பெற்ற புகளூர் காகித ஆலைக்கு வெளிநாட்டில் இருந்து தரம் குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டி.என்.பி.எல் ஆலை

Also Read: கரூர்: மூன்று திருமணம் செய்த இளைஞர்; முதல் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது!

கரூர் மாவட்டம், புகளூர் காகிதபுரத்தில் இயங்கி வருகிறது, டி.என்.பி.எல் ஆலை. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்ட இந்த ஆலை, ஆசிய அளவில் மிகப்பெரிய காகித ஆலையாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தான், தரமற்ற நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து வாங்கியதில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததாக இரண்டு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இந்த காகிய ஆலையில் வணிகம், மின்சாரம் மற்றும் கருவியியல் பிரிவில் பொது மேலாளராக இருக்கும் பாலசுப்ரமணி என்பவரும், ஆய்வுக்கூடம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் மேலாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் என்பரும்தான், இந்த அதிரடி புகாரில் சிக்கியுள்ளனர். இந்த காகிய ஆலைக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் தரம் குறைந்த (ஈரப்பதம் அதிகமுள்ள நிலக்கரி) நிலக்கரியை டாலர் பரிவர்த்தனை மூலம் வாங்கியதில் மேற்படி முறைகேடு நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. டி.என்.பி.எல் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜூவ் ரங்கன், நிறுவனத்தின் பழைய கோப்புகளை ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

பாலசுப்ரமணி

அப்போதுதான், நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்திருப்பதை அவர் கண்டுப்பிடித்தாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அடிப்படையிலேயே அவர், பொது மேலாளர் பாலசுப்ரமணியையும், மேலாளர் ராதாகிருஷ்ணனையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்தே, முறைகேட்டி ஈடுப்பட்டதாக சொல்லப்படும் இருவரையும், டி.என்.பி.எல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (உற்பத்தி) கிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நிலக்கரி இறக்குமதியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை விசாரிக்க, தனி விசாரணைக் குழு அமைக்கப்பட இருக்கிறது. அவர்களின் விசாரணையின் முடிவில் தான், எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பது தெரியவரும். அதேபோல், இவர்கள் இருவர் மட்டும்தான் இந்த முறைகேட்டில் ஈடுப்பட்டார்களா அல்லது வேறு அதிகாரிகள் யாருக்கும் தொடர்புள்ளதாக தெரியவரும் என்பது குறித்தும் தெரியவரும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், "இருவரும் சேர்ந்து 400 கோடி வரை இந்த விவகாரத்தில் ஊழல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் மட்டும் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பல அதிகாரிகளுக்கு இதில் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கிறது. விசாரணையை தீவிரப்படுத்தி, நேர்மையாக விசாரித்தால் மட்டுமே உண்மையான முறைகேட்டை கண்டறிய முடியும். இப்போதுள்ள நிர்வாக இயக்குநர் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ராதாகிருஷ்ணன்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரில் பாலசுப்ரமணி நேற்று ஓய்வுபெற இருந்தார். ஆனால், அதற்கு முன்பே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆலையின் வருமானம் இப்படி பல அட்டைப்பூச்சி அதிகாரிகளால் உறிஞ்சப்படுகிறது. தமிழக அரசு ஆலை விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, ஆலையை சிலரது பிடியில் இருந்து மீட்கணும்" என்றார்கள்.



source https://www.vikatan.com/news/controversy/two-officers-suspended-for-forgery-in-tnpl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக