Ad

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கபில வனத்தின் கந்தன்: கடினமான காட்டுப்பாதையில் இருக்கும் இலங்கை முருகன் கோயில்! சிறப்புகள் என்னென்ன?

இலங்கையில் முருக வழிபாடு என்பது தொன்மையான காலத்தில் இருந்தே இருந்து வருகின்றது என்கிறது அந்நாட்டின் வரலாறு. இலங்கையின் அனுராதபுரா, பின்விவா, கந்தரோட்டை மற்றும் புனக்காரி பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள் சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் முருக வழிபாடு உண்டு என்பதை நிரூபிக்கின்றன. அதற்கு சான்றாக ஒரு ஆலயமும் உள்ளது. அதுவே கபில வனம்.

இலங்கையின் மொனராகல மாவட்டத்திலுள்ள யால சரணாலயத்தின் மத்தியில் கபில்வத்தை அல்லது கபிலித்தை என கூறப்படுகின்ற இடம் உள்ளது. அங்கு மிகவும் பழைமையான சக்திவாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது. கட்டடங்கள் இல்லாத, பூசகர் இல்லாத சக்தி வாய்ந்த கோயில் இது. 12 சிற்றாறுகளைக் கடந்து, 32 கி.மீ ட்ராக்டர் வண்டியில் கடினமாக பயணம் செய்தே இந்த வனத்தை அடைய முடியும்.

கபில வனம்

கபிலித்தை என்று அழைக்கப்படும் இந்த இடம் முருகப்பெருமான் வாழும் இடம் என்கிறார்கள் மக்கள். மிகப் பண்டைய காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில் இது என்றும் கூறுகிறார்கள். இங்குதான் முருகப்பெருமான், ஆதியில் தவமிருந்து சக்திகளை பெற்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின்னர் தனது தங்க வேலை எறிந்ததாகவும், அந்த வேல் ஓர் புளியமரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளியமரத்தின் கீழ் வேடுவர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சியம்பலவா தேவலாயா
ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம் நவபாஷாண வேல் இங்குதான் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதிகதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்துடன் இன்றும் இங்கு நவகோடி சித்தர்கள் தவமிருப்பதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

மேலும் இலங்கையில் அக்காலத்தில் மன்னர்கள் இங்கு சென்று வழிபட்ட பின்னர்தான் தங்கள் அரச பதவிகளை ஏற்பது வழக்கமென்றும் பரம்பரை பரம்பரையாக கதைகள் உலவி வருகின்றன. முறையாக முருகப்பெருமானை நினைந்து விரதமிருந்து, அங்கு சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் நடைபெறுமென்பதும் ஐதீகம்.

புனித பயணம்

கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. எனவே, இது ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. பண்டைய செவிவழி கதையின்படி, ஒரு மழை நாளில் முருகன் தனது வருங்கால மனைவி வள்ளியை இந்த இடத்தில் ஒரு புளிய மரத்தின் (சிங்கள மொழியில் 'சியாம்பலா' மரம்) அருகே சந்தித்தார், அதில் இருந்து 'சியம்பலவா தேவலாயா' என்று பெயர் வந்தது என்கிறார்கள்.

முருக பெருமான் இந்தப் புனித நிலத்தில் வசித்து தியானிக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். எனினும் இங்கு முருக பெருமான் தனது ஒளி தேகத்தோடு கபில முனிவருக்கு காட்சி கொடுத்ததால் இந்த வனத்திற்கு கபில வனம் என்ற பெயர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: வயலூர் முருகன் கோயில் அற்புதங்கள்: வாழ்வளிக்கும் வள்ளலே, வயலூர் பெருமானே! | திருச்சி கோயில்கள் - 3

இங்கு முருக பெருமான் ஒளி தேகத்தோடு நவகோடி சித்தர்களோடு நிஷ்டையில் அருள் புரிகிறார் என்றும், போகர் கதிர்காமத்தில் வணங்கிய நவபாசான நவாக்க்ஷரி யந்திரம் மற்றும் முருகபெருமானின் வேல், ஆபரணங்கள் என்பன புனித புளியமரத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஐதீகம் உள்ளது.

எனவே யாரும் வேடிக்கைக்காக கபிலவனம் செல்லக்கூடாது என்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. அது கண்டிப்பாக ஒரு புனித பயணம். இந்தப் புனித இடத்தை பார்வையிட திட்டமிட்டால், நாம் ஒரு தூய்மையான இறை சாதகனாக மாற வேண்டும். இந்த புனித யாத்திரைக்கு குறைந்தபட்சம் 21 நாள்களுக்கு முன்பு மது, மாமிசம் தவிர்த்து பிரம்மச்சரியம் மேற்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்ள வேண்டும். கபிலவனத்தின் ஆன்மிக சக்திகளின் காரணமாக, இந்த நடைமுறைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் வீடு திரும்பும் வழியில் பல தடைகளை எதிர்கொள்வார்கள் என்பது நம்பிக்கை.

புனித யாத்திரை

மேலும் இங்கு உள்ள காவல் தெய்வமான கடவற கலுபண்டா அப்பச்சி யானை வடிவில் வந்து விரதத்தை ஒழுங்காக மேற்கொள்ளாதவர்களை புனித புளியமரத்தை தரிசனம் செய்ய விடாமல் விரட்டி அடிப்பது பல முறை நிகழ்ந்து உள்ளது. இங்கு தற்போது பக்தர்களால் சிவலிங்கம் ஒன்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

கபில வனம் யாலா தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. பிளாக் IV மற்றும் கபில வனத்தை (சியம்பலாவா தேவலாயா) தரிசனம் செய்ய மூன்று முக்கிய வழிகள் உள்ளன. இருப்பினும் இந்த வழிகள் அனைத்தும் யால காட்டில் உள்ளது. எனவே இது யாருக்கும் எளிதான பயணம் அல்ல எனலாம்.

சியம்பலாவா தேவலாயா தரிசனம்
மிகவும் கடினமான இந்தப் பயணத்துக்கு வின்ச், ஸ்னாட்ச் பெல்ட், ஹை லிப்ட் ஜாக், கூடுதல் எரிபொருள் போன்ற பாகங்கள் கொண்ட நான்கு சக்கர வாகனம் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு காட்டின் நடுவில் இருப்பதால், தங்குவதற்கு ஓய்வு இடங்கள் இருக்காது. எனவே உங்கள் முகாம் உபகரணங்கள், உணவுகள் மற்றும் ஏராளமான குடிநீரை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

Also Read: ஆடி மாத அம்மன் தரிசனம்: பெரிய பாளையத்து பவானி - அண்டியோரைக் காக்கும் ஆயன் சோதரி!

கபில வனத்திற்கான காட்டுப்பாதை வழிகள்:

பாதை 1: குமன - குடா கெபிலித்த - அடா கும்புகா- கால் அமுனா- கபிலவனம் புனித புளியமரம் (முருகன் ஆலயம்).

பாதை 2: யலா - தொகுதி 2 - குறுக்கு கும்புகன் ஓயா- குடா கெபிலித்த- அடா கும்புகா- கால் அமுனா - கபிலவனம் புனித புளியமரம் (முருகன் ஆலயம்)

சிவலிங்கம்

பாதை 3: மோனராகலா -> கோடயனா -> 5 கனுவா (5வது இடுகை) -> கோட்டியகலா -> போகாஸ் ஹனிடியா சாலை அல்லது கம்மல் யயா சாலை-> கபிலவனம் புனித புளியமரம் (முருகன் ஆலயம்) (கோட்டியாகலத்திலிருந்து கபிலவனம் வரை 31 கி.மீ)

  • இலங்கை மென்டிஸ்

கடினமான இந்தப் பயணத்தை மேற்கொள்ள தகுந்த வழிகாட்டிகள், சீரான வாகன வசதி, சரியான காலநிலை, அரசின் அனுமதி யாவும் அவசியம்.


source https://www.vikatan.com/spiritual/temples/srilanka-murugan-temple-how-to-visit-the-kabila-vanam-murugan-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக