புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த வருடம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சாமுவேல் (எ) ராஜாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றத்தைச் செய்தது ராஜா என உறுதியானதுடன் போலீஸார் ராஜவைக் கைதுசெய்தனர். இந்த வழக்கானது, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், மூன்று மாத காலத்துக்குள் அரசுத் தரப்பு விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, 29.12.20 அன்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, சிறுமியைக் கொடூரமாகக் கொலை செய்ததற்காகப் பிரிவு 302-ன் கீழ் மரண தண்டனையும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் திருத்தச் சட்டம் 2019-ன் கீழ் இரண்டு மரண தண்டனைகளும் என மொத்தம் மூன்று மரண தண்டனைகள் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். அதோடு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள்கால சிறைத் தண்டனையும், பிரிவு 323-ன் கீழ் ஏழு வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் அதைக் கட்டத்தவறினால் இரண்டு மாதம் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பிரிவு 201-ன் கீழ் ஏழு வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், கட்டத்தவறினால் இரண்டு மாதம் கடுங்காவல் தண்டனையும் எனக் குற்றவாளி ராஜாவுக்கு அடுத்தடுத்த தண்டனைகளை விதித்து அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.
அதோடு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு ரூ.5,00,000 இழப்பீடு வழங்கியும் உத்தரவிட்டார். ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே கடந்த ஜூலையில் அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக போலீஸார் அழைத்துச் சென்றபோது குற்றவாளி ராஜா தப்பித்து ஓடினார். போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு மாலையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். கைதி தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பியோடியது குறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த நிலையில் தான் தற்போது கைதி தப்பியோடிய வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 பிரிவுகளின் கீழ் 7 மாத சிறைத் தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் அறிவு தீர்ப்பளித்தார். தூக்குத்தண்டனை கைதியான ராஜாவிற்கு மேலும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த தீர்ப்புகளால் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆறுதல் அடைந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/7-year-old-girl-brutally-murdered-7-months-jail-for-convict-in-another-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக