Ad

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடி: `கொடுத்த பணத்தை திருப்பித் தரல’ -குழிக்குள் தள்ளி கழுத்துவரை மண்ணில் புதைத்த நண்பர்கள்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகிலுள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் அஜித்குமார். பெயிண்டிங் வேலை பார்த்து வரும் இவரும், முத்தையாபுரத்தைச் சேர்ந்த தேவ ஆசிர்வாதம் என்ற தொப்புளான், முள்ளக்காடுவைச் சேர்ந்த தர்மமுனியசாமி, கக்கன்ஜிநகரைச் சேர்ந்த இசக்கிமணி ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். அஜித்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் வாங்குவதற்காக தேவ ஆசீர்வாதத்திடம் ரூ.5,000 கடனாக வாங்கியுள்ளாராம்.

குழிக்குள் கழுத்தளவு மண்ணில் புதைக்கப்பட்ட அஜித்குமார்

இந்தப் பணத்திற்கு செல்போன் வாங்காமல் தன் நண்பர்களான தேவ ஆசிர்வாதம், தர்மமுனியசாமி, இசக்கிமணி ஆகியோருடன் மது அருந்தி செலவு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் முத்தையாபுரம் உப்பளம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் அஜித்குமார் உள்ளிட்ட 4 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது தேவ ஆசிர்வாதம், அஜித்குமாரிடம் தான் கொடுத்த ஐயாயிரம் ரூபாயை திருப்பிக் கேட்டாராம். “நான் எங்க செல்போன் வாங்குனேன். அந்தப் பணத்துலதான நம்ம சரக்கு அடிச்சு செலவழிச்சுட்டேமே. நான் எதுக்காக அந்தப் பணத்தை திருப்பித் தரணும்?” என அஜித்குமார் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த ஐயாயிரம் ரூபாய் பணம் தொடர்பாக அஜித்குமாருக்கும், தேவ ஆசிர்வாதத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது. இதில், ஆத்திரமடைந்த தேவ ஆசிர்வாதம், மற்ற இருவர் அஜித்குமாரை கம்பால் அடித்தும், முதுகில் கத்தியாலும் குத்தியுள்ளனர். அத்துடன், அருகில் இருந்த குழிக்குள் அஜித்குமாரை தள்ளிவிட்டு கழுத்துவரை மண்ணைப் போட்டு மூடினர். மண்ணில் புதையுண்ட அஜித்குமார், மரண பயத்தில் சத்தமாகக் கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடி வந்துள்ளனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று பேர்

இதையடுத்து குழிக்குள் இருந்தது அஜித்குமாரை மீட்டனர். முதுகில் கத்தியால் குத்தியதில் காயமடைந்த அஜித்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், அஜித்குமார் மார்பளவு வரை மண்ணிற்குள் புதையுண்ட புகைப்படம், ‘எங்க புள்ளிங்க எல்லாம் பயங்கரம்’ என்ற வாசகத்துடன் சமூக வளைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அஜித்குமாரின் புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு சம்மன்! - ஒருநபர் ஆணையத்தின் 29-வது கட்ட விசாரணை தொடக்கம்



source https://www.vikatan.com/news/crime/three-people-were-arrested-for-pushing-into-the-pit-and-burying-till-necks-in-the-soil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக