அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(69) இவருக்கும் இவரது பெரியப்பா மகன் ஆறுமுகம் என்பவருக்குமிடையே நீண்ட நாட்களாக இடத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக, அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தான், அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகன் ராதாகிருஷ்ணனை விசாரணைக்கு அழைத்துள்ளார். ராதாகிருஷ்ணனும் அறந்தாங்கி காவல் நிலையம் வந்துவிட்டார்.
அவரின் உறவினர்கள் சிலரும் அவருடன் வந்தனர். இதையடுத்து தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, காவலர், ராதாகிருஷ்ணனின் விளக்கத்தைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கும், தலைமைக் காவலர் முருகனுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசமடைந்த தலைமைக் காவலர் முருகன், ராதாகிருஷ்ணனை, ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசி, அவரது கன்னத்திலும் அறைந்துள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் தான் அவருடன் வந்த உறவினர்கள், ``சார் அவர் என்ன கொலை குத்தமா செஞ்சாரு, அவர் ஹார்ட் பேசண்ட் சார், அவரை விட்டுவிடுங்கள்” என்று கூறுகின்றனர். ஆனாலும், ஆவேசம் அடங்காத தலைமைக் காவலர் முருகன், அங்கிருந்த காவலரைக் கூப்பிட்டு, `இவங்க எல்லாரையும் பிடிச்சு உட்கார வைங்க, ரிமாண்ட் பண்ணிடுவோம்’ என்று கூறுகிறார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையை அவரது உறவினர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read: `நீ ரொம்ப அழகா இருக்கே!’ - புகாரளிக்கச் சென்ற இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த புதுச்சேரி போலீஸ்?!
தலைமைக் காவலரின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான், தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தரப்பில் வீடியோ ஆதாரங்களுடன் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்த எஸ்.பி நிஷா பார்த்திபன், உடனே அறந்தாங்கி காவல் நிலைய தலைமைக் காவலர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றியதோடு, முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தான் முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கியில் விசாரணைக்குச் சென்றவரைக் காவலர் தகாத வார்த்தையில் பேசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/in-pudukottai-attack-on-an-old-man-who-went-for-interrogation-chief-constable-suspended
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக