இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு மிகவும் அதிகமாகக் காணப்பட்டது. டெல்டா வகை கொரோனா பரவல் தான் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது இந்த டெல்டா வகை வைரஸ் உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.
தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் பெரும் உச்சத்தைத் தொட்டிருந்தது. ஏப்ரல் 20-ம் தேதி அன்று 28,395 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 277 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் அந்த காலகட்டத்தில் பெரும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியது. படுக்கைகள் கிடைக்காது மக்கள் நீண்ட நெடும் வரிசையில் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் காட்சியை எல்லாம் நாம் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்போம். டெல்லியில் ஆக்ஸிஜன் தேவை தினசரி சராசரி 700 டன் என்ற அளவுக்குச் சென்றது.
நாளொன்றுக்கு இறப்புகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300 என்ற விகிதத்திலிருந்ததால், டெல்லியிலிருந்த பெரும்பாலான மாயணங்கள் இரவு பகலாகத் தொடர்ந்து எரிந்துகொண்டே தான் இருந்தது. பூங்காக்களை எல்லாம் எரியூட்டும் இடங்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஆக்ஸிஜன் கிடைக்காது, வென்டிலேட்டர் கிடைக்காது, படுக்கைகள் கிடைக்காது நிலைமை கைமீறிப் போகவே செய்வதறியாது மக்கள் தவித்துக்கொண்டிருந்த நிலை உருவாகியிருந்தது. டெல்லி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
டெல்லி அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை அடுத்து அதிகரித்துக் காணப்பட்ட கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வந்தது. ஏப்ரல் மாதத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று தற்போது நிலவரப்படி 50 என்ற எண்ணிக்கையில் குறைத்துள்ளது. அதுமட்டுமில்லாது கொரோனா தொற்றால் ஒருவர் கூட இறக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி முழுவதுமே 468 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1.12 கோடி நபர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.
Also Read: டெல்லியில் கொரோனா பாதிப்பு: இரவு பகலாக எரியும் சடலங்கள்; நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள்
source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-spread-in-new-delhi-reduced-to-50-from-30000-in-april
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக