கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக புகார் எழுந்ததையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்டனர். நான்கு நாட்கள் கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்ட நிலையில், சகோதரர்கள் மீது இதுவரை 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் தெரிவித்தார்.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்(51).எம்.ஆர்.சுவாமிநாதன்(48) சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை உள்ளிட்ட தொழில்கள் செய்து வந்தனர். சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம் வந்ததால் கும்பகோணம் பகுதி மக்களால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர்.
ஹெலிகாப்டர் பிரதர்ஸ், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் திருப்பி தரப்படும் என வணிகர்கள், தொழில் அதிபர்கள், கருப்பு பணம் வைத்திருக்கும் பெரும் முதலாளிகள், பொதுமக்கள் என பலரையும் குறி வைத்து நிதி வசூல் செய்தனர். ஆரம்பத்தில் சொன்னது போலவே பணத்தை திருப்பி தந்ததால் பலரும் தாமாக முன் வந்து அவர்களிடத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
Also Read: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு: ``போலீஸ் மீதுள்ள புகார் உட்பட அனைத்தும் விசாரிக்கப்படும்" - ஐ.ஜி தகவல்
இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள் எங்களிடம் ரூ. 15 கோடி மோசடி செய்து விட்டதாக தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தலைமறைவாகினர். பின்னர் எம்.ஆர்.கணேஷின் மனைவி உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வக்கீல் ஒருவது பண்ணை வீட்டில் சகோதரர்கள் பதுங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து. அவர்களை போலீஸார் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். பின்னர் இருவரையும் போலீஸார் கடந்த 9-ம் தேதி நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். கஸ்டடி முடிந்த நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்த பிறகு மீண்டும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மேலும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்தும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, `நாங்கள் எல்லோருக்கும் பணத்தை கொடுத்து விடுவோம்’ என கூறியுள்ளனர். `எப்படி தருவீர்கள்?’ என கேட்டதற்கு அவர்களிடத்தில் உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது. அதன் பின்னர் டிஐ.ஜி பிரவேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
Also Read: தலைமறைவான ஹெலிகாப்டர் பிரதர்ஸ்; பண்ணையில் ஆதரவின்றி நிற்கும் 350 வெளிநாட்டு பசு மாடுகள்!
அப்போது அவர் கூறியதாவது, ``கும்பகோணம் நிதிநிறுவனத்தில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் 30 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறி இதுவரை 35 பேர் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் மீது 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து மோசடி புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் பிரதர்ஸை மீண்டும் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/news/crime/kumbakonam-helicopter-brothers-case-totally-35-cases-filed-against-them-says-dig
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக