Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

பாலக்காடு சாம்பார் | மீன் மொய்லி | செம்மீன் மசாலா ஃப்ரை - ஓணம் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!

ஓணம் பண்டிகை முடிந்திருக்கிறது. ஓணம் விருந்தின் படங்களைப் பகிர்ந்து பலரும் உங்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருப்பார்கள். போகட்டும் விடுங்கள்... இந்த வீக் எண்டில் உங்கள் வீட்டில் கேரளா ஃபுட் ஃபெஸ்டிவலே நடத்தும் அளவுக்கு இங்கே வெரைட்டியான கேரளத்து ரெசிப்பீஸ் கொடுக்கப்பட்டுள்ளன. சாத்வீகமான பாலக்காடு சாம்பார் முதல் காரசாரமான செம்மீன் மசாலா ஃப்ரை வரை விருந்துக்கு நீங்க ரெடியா?

தேவையானவை:
துவரம்பருப்பு - கால் கப்
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கவும்)
தக்காளி - 2 (மீடியம் சைஸில் நறுக்கவும்)
வெண்டைக்காய் - 2
முருங்கைக்காய் - 2 (விருப்பமான வடிவில் நறுக்கவும்)
கல்யாணபூசணிக்காய் - 50 கிராம்
சேனைக்கிழங்கு - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
புளி - சின்ன எலுமிச்சை அளவு (ஊற வைத்து வடிகட்டவும்)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - 5 இலைகள்
மல்லி (தனியா) - 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
கறிவேப்பிலை - 5 இலைகள்
துருவிய தேங்காய் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெந்தயம் - அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

பாலக்காடு சாம்பார்

செய்முறை:

காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும். துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து புளிக்கரைசல், மூன்று கப் தண்ணீர், காய்கறிகள், தக்காளி, வெங்காயம், மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து குறைவான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து மல்லி (தனியா), கறிவேப்பிலை, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இறுதியாகத் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வைக்கவும். காய்கறிகள் வெந்ததும், வெந்த பருப்பை மசித்து காய்கறிகளோடு சேர்த்துத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். அரைத்த விழுதை சாம்பாரில் சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து, தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்துப் பரிமாறவும்.

தேவையானவை:

மீன் - 500 கிராம் (சின்ன கியூப்களாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 2 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 10 (இரண்டாக நறுக்கி கொள்ளவும். காரத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்)
முதல் தேங்காய்ப்பால் - அரை கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மிள‌காய்த்தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 4
மைதா மாவு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நீளமான தக்காளி ஸ்லைஸ்கள் - அலங்கரிக்க

மீன் மொய்லி

செய்முறை:

மீனைக் கழுவி சிறிது மஞ்சள்தூள், உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகத் தேய்த்து, அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு கப் எண்ணெய் ஊற்றி, மீனை பாதி வேக்காட்டில் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மைதா மாவு, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டாம் தேங்காய்ப்பாலைச் சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், வினிகர், கிராம்பு, பட்டை, உப்பு சேர்த்து குறைந்த தீயில் பதினைந்து நிமிடங்கள் வேக விடவும். கலவை ஒன்று சேர்ந்து வரும்போது பொரித்த மீனை சேர்த்து, அது கொதிக்க ஆரம்பித்ததும் முதல் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும். எக்காரணம் கொண்டும் கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தக்காளி ஸ்லைஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

தேவையானவை:

கறிமீன் - 2
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 5 இலைகள்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வாழை இலை - சிறியது
தேங்காய்ப்பால் - 1 டேபிள்ஸ்பூன் (தண்ணீருக்கு பதிலாக)
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

ஊற வைக்க:

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கறிமீன் பொலிச்சது

செய்முறை:

மீனை நன்கு கழுவி மேலும் கீழும் கத்தியால் கீறி விட்டுக் கொள்ளவும். மிளகுத்தூளை உப்புடன் கலந்து, மீனில் தடவி அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் மீனை இருபுறமும் வேக விட்டு எடுத்து வைக்கவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கியதும், தக்காளியைச் சேர்த்துக் கரையும்வரை வதக்கவும். உப்பு போட்டுக் கிளறவும். ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்/தேங்காய்ப்பால் விட்டுக் கிளறி இறக்கவும். அடுப்பை அணைத்து கிளறியதை நான்கு பாகமாகப் பிரிக்கவும். வாழை இலையை தீயில் இரண்டு புறமும் லேசாக வாட்டி எடுக்கவும். இதில் ஒரு பாக கலவையை வைத்து, அதன் மேல் மீனை வைக்கவும். இதன் மேல் மற்றொரு கலவை பாகத்தை எடுத்துப் பரப்பவும். இலையால் மீனை மூடி வாழை நாரால் கட்டி விடவும்.

இதே போல மீதம் இருக்கும் மற்றொரு மீனிலும் கலவையைத் தடவி வாழை இலையில் வைத்து மூடவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வாழை இலை மீனை வைத்து மூடியால் மூடி சிம்மில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து மீனைத் திருப்பிப் போட்டு மீண்டும் பத்து நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வேக விடவும். அடுப்பை அணைத்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

தேவையானவை:

செம்மீன் (இறால்) - 250 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
குடம் புளி - நெல்லிக்காய் அளவு (ஊற வைக்கவும்)
மெல்லியதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள் - கால் கப்
பெரிய வெங்காயம் - 2 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 5 (மெல்லிய வட்டமாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செம்மீன் மசாலா ஃப்ரை

செய்முறை:

இறாலைச் சுத்தம் செய்து பாதியளவு இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், குடம் புளி, தேங்காய்த் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கைகளால் நன்கு பிசறவும். சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பில் வைத்து இறால் அதிகமாக வெந்துவிடாமல், எடுத்து அதிகப்படியான தண்ணீரை இறுத்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும், மீதம் இருக்கும் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் வெந்த இறால், உப்பு சேர்த்து 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வேக விடவும். தண்ணீர் வற்றி மசாலாவுடன் இறால் கலந்து வரும் வேளையில், தீயை முற்றிலும் குறைத்துக் கிளறவும். அடுப்பை அணைத்து ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறவும்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/food/recipes/palakkad-sambar-chemmeen-masala-fry-fish-molee-onam-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக