Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

`100 நாள்களில் அதிசயம்' என விளம்பரம்; ரூ.1.5 கோடி மோசடி! - ரியல் எஸ்டேட் அதிபர் கைது

`100 நாள்களில் அதிசயம்' என்று நாளிதழ்களில் கடந்த 2018-ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரம் கோடம்பாக்கத்தில் செயல்பட்ட `ஏஞ்சல் டிரேடிங்’ என்ற நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏஜென்ட்கள், பொதுமக்களிடம் `நீங்கள் முதலீடு செய்யும் பணம்,100 நாள்களில் இரட்டிப்பாகக் கொடுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தை நடத்திய தியாக பிரகாசம் என்பவர், `பொதுமக்கள் முதலீடு செய்யும் பணம் ரியல் எஸ்டேட், பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் நிச்சயம் எங்களால் கொடுக்க முடியும்’ எனக் கூறியிருந்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

அதை நம்பிய பொதுமக்கள், பணத்தை முதலீடு செய்தனர். ஏஜென்ட்களுக்கு கமிஷனாகப் பணம் கொடுக்கப்பட்டது. அதனால் ஏஜென்ட்களும் மக்களை மூளைச்சலவை செய்து லட்சக்கணக்கில் பணத்தை நிறுவனத்தில் முதலீடு செய்யவைத்தனர். ஆனால், நிறுவனம் அறிவித்தபடி பணம் இரட்டிப்பாகக் கொடுக்கப்படவில்லை. அதோடு முதலீடு செய்த பணமும் வழங்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதில், சென்னை ஆவடி கோயில் பதாகை கலைஞர் நகரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கொடுத்த புகாரில், ஏஞ்சல் டிரேடிங் என்ற பெயரில் நிறுவனம் நடத்திய தியாக பிரகாசம் என்பவர், 100 நாள்களில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி தன்னையும் மேலும் பலரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கோடம்பாக்கத்தில் செயல்பட்ட நிறுவனம் மூடப்பட்டது. மேலும், நிறுவனத்தை நடத்திய தியாக பிரகாசமும் தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுரேந்திரன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான போலீஸார், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தியாக பிரகாசத்தைத் தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் தலைமறைவாக இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்து அவரை நேற்று கைதுசெய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: ரூ.684 கோடி மோசடி செய்த நேபாள் தொழிலதிபர்; மும்பை ஹோட்டலில் கைதானது எப்படி?

கைது

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட தியாகபிரகாசம் என்பவர், 30,000-க்கு மேற்பட்ட மக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி 1.5 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. அந்தப் பணத்தை அவர் பங்குச் சந்தையிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் முதலீடு செய்ததாகக் கூறினார். எனவே, போலீஸ் காவலில் எடுத்து தியாக பிரகாசத்தை விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். மேலும், இது போன்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்" என்றனர்.

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-real-estate-business-man

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக