Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

'புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரம்' - சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள்!

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் வீடுகட்டித்தரும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது இந்த வாரியம். இந்த வாரியத்தின் மூலம் இதுவரை நான்கு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை புளியந்தோப்பில் இருந்த குடிசை மாற்று வாரியத்தின் கட்டிடம் பழுதடைந்ததால் அந்த பழைய கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்களைக் கட்ட குடிசை மாற்று வாரியம் முடிவு செய்தது.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

இதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கட்டமாக ரூ.112.26 கோடியில், நான்கு பிளாக்குகளாக, ஒன்பது தளங்களுடன் 864 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு ரூ.139.13 கோடி மதிப்பீட்டில், நான்கு பிளாக்குகளாக, ஒன்பது தளங்களுடன் 1,056 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன. 2018-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டுக்குள் இந்த மொத்த கட்டிடங்களும் கட்டி முடிக்கப்பெற்று அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் புளியந்தோப்பு கே.பி.பூங்கா பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். அப்படிக் குடியமர்த்தப்பட்ட ஒரு கட்டிடம் தரமற்று இருப்பதாகவும், சுவர்ப் பகுதிகள் தொட்டாலே பெயர்ந்து வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டினார். இந்த பிரச்னை குறித்த செய்தி வெளியானதும் விஷயம் பெரிதானது.

குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், துறை சார் அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பரந்தாமன் ``தொட்டால் விடும் கட்டடத்தை அதிமுக அரசு கட்டியுள்ளது. இந்தக் கட்டிடம் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளது. கட்டட ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். கடந்த ஆட்சியில் கட்டப்பட்டுள்ள ஒட்டுமொத்த கட்டிடத்தையும் ஆய்வு செய்து தரத்தை உறுதிசெய்யவேண்டும்” என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாகச் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

Also Read: `பல கோடிகளில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் பயனற்றுக் கிடக்கும் அவலம்'!-நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன். ``ஊடகங்களில் வெளியான செய்தியின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ள நானும், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறையின் அதிகாரிகளுடன் நேரடியாக அந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தோம். அந்த கடடிடத்தின் உறுதித்தன்மையைத் தெரிந்துகொள்ள ஐ.ஐ.டி க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து அந்த கட்டுமானப் பணியில் தவறு உள்ளது என்று அறிக்கையில் சுட்டிக்காட்டினார்கள் என்றால், அந்த குடியிருப்பைக் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில் அந்த கட்டிடத்தைக் கட்டிய PST கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் பதிலளித்துள்ளது. ``K.P.பார்க் பகுதியில் எங்களது நிறுவனத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் தரமான முறையில் கட்டப்படவில்லை என்றும், அதன் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகச் செய்திகள் வருகின்றன. அச்செய்தியைக் கேட்டு எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினர். அச்செய்திகள் துளியளவும் உண்மையல்ல. எங்கள் நிறுவனத்தால் தரமான முறையில் கட்டி முடிக்கப்பட்ட கட்டுமானங்களை குடிசைவாழ் மக்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒதுக்கீடு செய்யாமல் அதனைக் கொரானா தொற்றின் காரணமாகக் கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தித் தங்க வைப்பதற்கான தற்காலிக மருத்துவமனையாகச் சென்னை மாநகராட்சியால் ஓராண்டு காலம் பயன்படுத்தப்பட்டதில் பல்வேறு இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் படிக்கட்டுகள் வழியாக எடுத்துச் சென்று அதன் காரணமாகச் சேதம் ஏற்பட்டுள்ளது" என்றும்.

புளியந்தோப்பு அடுக்குமாடிக் குடியிருப்பு

மேலும், ``எங்கள் நிறுவனத்தின் சார்பாக நல்லாட்சி வழங்கும் தமிழக அரசிற்கும், பொதுமக்கள் அனைவருக்கும் பணிவுடன் தெரிவிப்பது யாதெனில் K.P.பார்க் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு எங்கள் நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டுமான குறைபாடுகளோ, அல்லது தரமற்ற பொருட்களே காரணம் அல்ல என்பதனை பணிவுடன் தெரிவிக்க விரும்புகிறோம். " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடரப்பட அமைச்சர்கள், ஆளும் கட்சியினர் என்று பல்வேறு தரப்பினர் நேரடியாக ஆய்வு செய்துவரும் நிலையில். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

பிரச்னை பூதாகாரமாகி வரும் நிலையில், நேற்று இதுதொடர்பாக, உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்டிடத்தின் தரம் குறித்த அறிக்கை வரும்போது மேலும் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும், ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் அவர்களின்மீது நடவடிக்கை எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puliyanthoppu-kp-park-housing-board-apartment-complex-issue-two-officers-suspended

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக