Ad

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

`இமயமலையில் பனிமனிதர்கள் வாழ்வது உண்மையா?' - இத்தாலியரின் ஆதாரங்கள் சொல்வது என்ன?

2019, ஏப்ரல் 29-ம் தேதியன்று இந்திய ராணுவம், தன் ட்விட்டர் பக்கத்தில் போட்ட ஒரு பதிவுக்காக நாடு முழுவதுமுள்ள நெட்டிசன்களால் சரமாரியான கலாய்களுக்கு உள்ளானது.

`எட்டி (Yeti)' என்று அழைக்கப்படும் மனிதக் குரங்கு போன்ற உடலமைப்பு கொண்ட (பனிமனிதன் போல) , மிகவும் உயரமான ஓர் உயிரினத்தின் கால்தடங்களைப் பார்த்ததாக இந்திய ராணுவம் பதிவு செய்ததுதான் நெட்டிசன்களின் கலாய்களுக்கு உள்ளானதன் காரணம்.

இமயமலை, சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இந்த எட்டி என்ற கற்பனை உயிரினம் பற்றிய கதைகள் நிறைய புதைந்துகிடக்கின்றன. அது எப்படியிருக்கும் என்பதற்குப் பெரிய கற்பனையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. ஸ்கூபி டூ, டின்டின், மான்ஸ்டர்ஸ் இன்க், பிக் ஃபூட் ஆகிய படங்களில் ஒரு கதாபாத்திரமாகவே இந்த எட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி பல சினிமாக்களில், வீடியோ கேம்களில் என்று பல ஆண்டுகளாகவே எட்டி என்ற கற்பனை உயிரினம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பனி படர்ந்த மலைகளினூடே, கூர்மையான பற்களோடு, பெரிய, நீண்ட கால்களோடு இருக்கும் இந்த எட்டி வாழ்ந்து வருவதாக சில நாட்டுப்புறக் கதைகள் உலவுகின்றன.

ஆனால், இந்த எட்டி என்ற கற்பனை விலங்கைப் பொறுத்தவரை, கட்டுக்கதைகளைத் தாண்டி ஏதேனும் உண்மைகள் இருக்கின்றனவா?

கிழக்கு நேபாளில் சுமார் 12,000 அடி உயரத்தில் வாழும் ஷெர்பா இன மக்களின் நாட்டுப்புறக் கதைகள்தான் எட்டி உருவான இடம். இதை மையமாக வைத்து ஷெர்பா நாட்டுப்புறக் கதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் எப்போதும் மக்களிடையே அச்சத்தைத் தோற்றுவிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய கதைகள் சொல்லப்பட்டதன் பின்னணியில் பல நோக்கங்கள் இருந்தன. உத்வேகம் மற்றும் அறநெறி ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டுமென்பதும் குழந்தைகள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், தவறி வேறு எங்கும் அபாயம் இருக்கும் பக்கமாகப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அச்சமூட்ட வேண்டுமென்பதும் அத்தகைய நோக்கங்களில் சில.

Footprints posted by Indian Army saying 'Yeti'

ஆனால், மேற்கு நாடுகளைச் சேர்ந்த மலையேற்றம் செய்பவர்கள் இமயமலையில் ஏறத் தொடங்கியபோது, எட்டியின் கட்டுக்கதைகள் உயிர்பெறத் தொடங்கின. 1921-ம் ஆண்டு ஆங்கிலேயே ஆய்வுப் பயணியான சார்லஸ் ஹோவார்ட்-பரி, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிய பயணத்தை முன்னெடுத்தார். அப்போது சில பெரிய காலடித் தடங்கள் அவர் கண்ணில் படவே, அதுபற்றி உள்ளூர் மக்களிடம் விசாரித்தபோது, ``மெடோ-காங்மி" என்று கூறியுள்ளனர். அதற்கு, மனித கரடி-பனி மனிதன் என்ற பொருள்கள் உண்டு.

அவருடைய குழு எவரெஸ்ட் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியவுடன், ஹென்ரி நியூமேன் என்ற ஒரு பத்திரிகையாளர் அந்தக் குழுவினரை பேட்டியெடுக்கிறார். அந்தப் பேட்டியின்போது, கால்தடம் பற்றியும் பேசப்படவே, எட்டி என்ற ஊர்க்கதைக்கு உயிர் கிடைக்கிறது.

1950-களில் இதுபற்றிய ஆர்வம் இமயமலையின் உச்சத்தைவிடப் பெரிதாக வளரவே, பல குழுக்கள், எட்டியைத் தேடி மலையேற்றம் மேற்கொண்டனர். ஹாலிவுட் நட்சத்திரமான ஜேம்ஸ் ஸ்டூவர்ட் கூட இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். ஈடுபட்டது மட்டுமன்றி, தன்னுடைய லக்கேஜில், எட்டியின் விரல் என்று கூறி ஒரு விரலையும் வைத்திருந்தார். 2011-ம் ஆண்டில் அதை டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான், அது எட்டியின் விரல் அல்ல, மனிதர் ஒருவரின் விரல் என்பது தெரியவந்தது.

Yeti, the mystical creature

இந்தத் தேடுதல் வேட்டை தொடங்கியதிலிருந்தே, கால்தடங்கள், தெளிவற்ற மங்கலான ஒளிப்படங்கள், எட்டியைப் பார்த்த நேரடி சாட்சியங்கள் என்று `ஆதாரங்கள்' முன்வைக்கப்படுவதும் தொடங்கியது. எட்டியின் மண்டையோடு, எலும்பு துண்டுகள், முடி மாதிரிகள் என்று பலவும் கொண்டுவரப்படும். ஆய்வுகளுக்குப் பின்னர், அவை கரடி, பெரிய மான் வகை, அல்லது குரங்கு வகை உயிரினங்களுடையது என்று நிரூபிக்கப்படும். இப்படி, உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும்கூட, எட்டியைத் தேடி மக்கள் இமயமலைக்குப் படையெடுப்பது மட்டும் குறையவில்லை. அறிவியலில், இதை cryptozoology என்றழைப்பார்கள். அதாவது, சில விலங்குகள் வாழ்ந்ததற்கான அல்லது வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்காதவரை அப்படியோர் உயிரினம் இருப்பதாகச் சொல்ல முடியாது.

இத்தாலியைச் சேர்ந்த மலையேறுபவரான ரெயின்ஹோல்ட் மெஸ்னர், எட்டியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தேடுதல் வேட்டையில் இறங்கி, 1980-களில் ஒன்றை பார்த்ததாகவும் கூறினார். ஆனால், அவரைப் பொறுத்தவரை, எட்டியைக் கதைகளில் சொல்வதுபோல், மிகப்பெரிய உருவமாகச் சொல்லிவிட முடியாது. அது ஒரு கரடி. ``மக்களுக்கு எதார்த்தத்தைவிட, சுவாரஸ்யமான கதைகளின் மீதுதான் ஆர்வம் அதிகம். எட்டியை ஒரு பெரிய மனித கரடியைப் போல் சித்திரிக்க அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், எட்டி ஒரு கரடிதான்" என்றார்.

2014-ம் ஆண்டில், அவருடைய குழு லடாக் மற்றும் பூடானிலிருந்து கொண்டுவந்த, எட்டி என்று கூறப்பட்டவற்றின் முடி மாதிரிகளின் டிஎ.ன்.ஏ-வை ஆய்வு செய்தபோது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த துருவக் கரடிகளின் மரபணுவோடு ஒத்துப்போனது. இதன்மூலம், துருவக்கரடி வகையைச் சேர்ந்த இதுவரை தெரியாத ஒரு கரடி இனம் வாழ்வதாக ஒரு கருதுகோள் உருவானது. ஆனால், அதுவும் நிலைக்கவில்லை.

Also Read: மருத்துவ குணங்கள் கொண்டதா மாட்டுக் கோமியம்... அமெரிக்கா பேடன்ட் வாங்கியது உண்மையா?

டென்மார்க், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஸ் பார்னெட் என்பவர், அந்த மரபணுவை மறு ஆய்வு செய்து பார்த்தபோது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த துருவக் கரடிகளின் மரபணுவோடு அது ஒத்துப்போகவில்லை. ஆனால், இப்போதைய துருவக் கரடிகளோடு மிகவும் குறைந்த அளவில் ஒற்றுமை இருந்தது. பின்னர்தான் அந்த மரபணு மாதிரிகள் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. அதன்பிறகு, அதேபோன்ற அடுத்தகட்ட ஆய்வுகளைப் பல தரப்பினர் செய்துபார்க்கவே, இமயமலையில் இப்போது வாழும் பனிக்கரடிகளின் (Brown Bears) மாதிரிகளாகவே இவை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், இப்போதும்கூட குரங்கு போன்ற ஒரு விலங்கு இமயமலையின் பனிமலைகளின் ஊடே வாழ்ந்துகொண்டிருப்பதாகப் பலரும் நம்புகின்றனர். அப்படிப்பட்ட நம்பிக்கையில்தான் இந்திய ராணுவமும் அப்படியொரு பதிவையும் போட்டது. அதுமட்டுமன்றி, இந்தப் பனி மனிதன் கதைகளில் சொல்லப்படுவதைப் போல் இருந்தால், அதுவும் மனிதர்கள், குரங்குகளைப் போலத்தான். இத்தகைய உயிரினங்களால், நீண்ட காலத்துக்கு, கடுமையான இமயமலை பனிப் பிரதேசத்துக்குள் வாழ முடியாது. எவ்வளவு அடர்த்தியான முடிகளைக் கொண்டிருந்தாலும் பிரைமேட்கள் அப்படிப்பட்ட காலநிலையில், ரகசியமாகப் பிழைத்திருக்கவே முடியாது.

Himalayan Brown Bear

Also Read: IPCC ரிப்போர்ட்: `காலநிலை மாற்றம்' டு `காலநிலை ஆபத்து'- விஞ்ஞானிகளின் இறுதி எச்சரிக்கை சொல்வது என்ன?

ஒருவேளை அழிந்திருந்தால், இந்நேரத்துக்கு அவை வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கும். இரண்டுமே இல்லையென்பதால், எட்டி என்றொரு விலங்கு இருந்திருக்க முடியாது என்றே அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் எட்டி பற்றிய தேடல் இதோடு முடிந்துவிடப் போவதில்லை. அறிவியல் எவ்வளவுதான் ஆதாரங்களோடு உண்மைகளை முன்வைத்தாலும், இதுபோன்ற புராண உயிரினங்களைத் தேடிச் செல்பவர்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள். எது எப்படியிருந்தாலும், நாட்டுப்புறக் கதைகளையும் விசித்திரமான கட்டுக்கதைகளையும் நாம் ரசித்துக் கேட்கும் வரை, நாம் கண்டிப்பாக எட்டியை மறக்கப்போவதில்லை.

அதோடு கூடவே, எட்டி ஒரு கற்பனை விலங்கு என்பதை மறந்துவிடாதீர்கள்.

அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#



source https://www.vikatan.com/news/environment/story-of-the-mystical-creature-himalayan-yeti-and-the-scientific-truth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக