புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதியில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் இளம்பெண் வசந்தி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அவரது கணவரின் தாழ்வு மனப்பான்மை காரணமாக தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருந்ததாக கூறப்படுகிறது. கணவன் அடிப்பதால் ஏற்படும் வலியை தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும்படியும் அழுதிருக்கிறார்.
ஆனால் அவர்கள் குடும்பநல நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறிவிட்டதால் செய்வதறியாமல் வீடு திரும்பியிருக்கிறார் வசந்தி. அதன்பிறகு லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அவர் புகார் அளிக்க சென்றபோது அங்கு பணியில் தலைமைக் காவலர் சண்முகம், அந்தப் பெண்ணை அமர வைத்துக் கொண்டு அனைத்து காவலர்களையும் மதிய சாப்பாட்டிற்காக போகும்படி உத்தரவிட்டதுடன், வசந்தியிடம் ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து ஆகஸ்ட் 12-ம் தேதி நமது விகடன் இணையத்தள பக்கத்தில் விரிவாகவும் எக்ஸ்ளூசிவாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் வசந்தி லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் தலைமைக் காவலர் மீது புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், ”குடும்பத் தகராறு காரணமாக ஆகஸ்ட் 9-ம் தேதி அவசர உதவி 100-க்கு போன் செய்தேன். அதனைத் தொடர்ந்து இரண்டு காவலர்கள் என் வீட்டிற்கு வந்து எங்கள் இருவரையும் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்தார்கள். அங்கே எங்கள் இருவரிடமும் தனித்தனியாக விசாரித்தார்கள். பின்னர் தலைமைக் காவலர் சண்முகம் ’குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்’ என்று என்னிடம் கூறியதுடன் இனிமேல் நான் யாரிடமும் போனில் பேசக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டார். அதன்பிறகு எனக்கு தனியே அறிவுரை கூறுகிறேன் என்று என் கணவரையும், குடும்பத்தினரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு எனக்கு இரண்டு வழக்கறிஞர் எண்களுடன் அவருடைய செல்போன் எண்ணையும் கொடுத்தார்.
அத்துடன் எதாவது பிரச்னை என்றால் என்னை தொடர்புகொள் என்றும் கூறினார். அதன்பிறகு வீடு திரும்பியவுடன் என் கணவர் என்னை அடித்ததால் வேறு வழி தெரியாமல் மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்றேன். அப்போது தலைமைக் காவலர் சண்முகம் ‘நீ இவ்ளோ கலரா அழகா இருக்க. நீ ஏன் இவனை திருமணம் செய்துகொண்டாய் என்று கேட்டார். பிறகு உனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது போலவே இல்லை. ரொம்ப அழகா இருக்க என்றார். உனக்கு நான் வேலை வாங்கித் தருகிறேன் என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டார். பின்னர் உனது கணவரை விவாகரத்து செய்ய நான் உதவி செய்கிறேன்.
பதிலுக்கு நீ என்ன செய்வாய் என்று கேட்டார். அப்போது என்னிடம் இப்போது பணம் இல்லை சார். அப்புறம் தருகிறேன் என்று அவரிடம் கூறினேன். உடனே அங்கிருந்த காவலர்களை உணவு இடைவேளைக்கு போகும்படி கூறிவிட்டு திடீரென எனது கைகளைப் பிடித்துக்கொண்டு ’இனிமேல் நாம பிரண்ட்ஸ். எனக்கு பணம் தேவையில்லை. என்னுடன் நட்புடன் இரு என்று கூறினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அப்போது உனக்கு ஆயில் மசாஜ் தெரியுமா என்று கேட்டார். நான் அதெல்லாம் எனக்கு தெரியாது சார் என்றேன். அதற்கு ஆயில் போட்டு தடவத் தெரியாதா என்றும் நானே உனக்கு சொல்லித் தருகிறேன் என்றும் கூறினார்.
மேலும் உனக்கு நான் இருக்கிறேன் என்றும் எதுவென்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறினார். அதன்பிறகுதான் இறைவி அமைப்பிடம் எனக்கு நடந்தவற்றைக் கூறினேன். நான் கூறியதை அவர்கள் நம்பாததால் சண்முகத்தின் உரையாடலை பதிவு செய்வதற்காக எனது செல்போனில் ரெக்கார்டர் போட்டுக் கொடுத்தார்கள். அதன்பிறகு சண்முகத்திற்கு போன் செய்த நான் என் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா என்று கேட்டேன். அப்போது நான் சொன்ன வக்கீலைப் போய் பாத்தியா என்று கேட்டார்.
இல்லை என்று நான் சொன்னதும் இன்று மாலை 5 மணிக்கு புது பஸ் ஸ்டேண்ட் வா நானே அழைத்துச் செல்கிறேன் என்றார். அப்போது ஆயில் மசாஜ் என்று சொன்னீர்களே அது எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அதான்மா வக்கீல் ஆபீஸ்கு வாம்மா அங்கு பார்த்துக் கொள்ளலாம் என்றார். அப்போது வக்கீலுக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை சார் என்று நான் கூறியதற்கு, வக்கீலையும் சேர்த்து கவனிச்சிடறியானு கேட்டார். அதற்கு ஆயில் நீங்க வாங்கிட்டு வர்றீங்களா அல்லது நான் வாங்கி வரட்டுமான்னு நான் கேட்டதற்கு, நான் பாத்துக்கறேன்மா நீ வாம்மா, லேட் பண்ணாமல் வந்துடும்மா’ என்று சொன்னார்.
Also Read: `நீ ரொம்ப அழகா இருக்கே!’ - புகாரளிக்கச் சென்ற இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த புதுச்சேரி போலீஸ்?!
அதையடுத்து இறைவி அமைப்பினர் அதன் மீது புகார் கொடுத்தனர். அதனால் கோபமான காவலர் சண்முகம், என் அம்மாவிடம் சென்று நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் என்னை விபசார வழக்கில் கைது செய்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார். மேலும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஏட்டு சண்முகத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது. என்னை ஆபாசமாக பேசியதுடன், என் நடத்தையை கேவலமாக விமர்சித்த தலைமைக் காவலர் சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார். வசந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் சண்முகம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவுகள் 354-A, 509 பிரிவுகளின் கீழ் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/puducherry-police-filed-case-against-the-policeman-who-called-the-lady-for-a-massage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக