போன வாரம் சொன்னேன். மே 7, துபாய் விமான நிலையம். எல்லாம் திட்டப்படி. EK 229 - 0955க்கு புறப்பாடு. துபாய் - சியாட்டல் ஏறக்குறைய 15 மணி நேரம், நிறுத்தமில்லாமல். சிறிது கடினம்தான், இருந்தும் தினம் செல்வதில்லையே.
முன்பே சொன்னதுபோல், நீண்ட பயணங்களுக்கு நல்ல திட்டமிடல் அவசியம். பாதை, நிறுத்தும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முன்பே தேர்வுசெய்து முன் பதிவு செய்துவிடவேண்டும். ஆரம்பிக்கும்போது இன்னும் பல நாட்கள் பெட்டி வாழ்க்கைதான் என்று சுய ஒப்புதல் வேண்டும். மேலும் இடத்திற்கேற்ற உடைகள். அப்புறம், கைபேசி, கணினி, கடவு புத்தகங்கள், சீப்பு, பேஸ்ட், சீட்டு கட்டு, விக்ஸ், Tiger Balm போன்ற இன்றியமையா பொருட்கள். பாத்ரூமிற்கு சுடோகு / குறுக்கெழுத்து அவசியம்.
முக்கியமாக உடல் மற்றும் மனநிலை ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் இந்த பயணம் போகும்போது (வளர்ந்த) குழந்தைகள் நம்மை சார்ந்திராதது பெரிய அனுகூலம். அவர்கள் சொல்லிவிட்டார்கள் நீங்கள் எக்கேடு கெட்டாவது போங்கள், எங்களுக்கு எங்கள் படிப்பு முக்கியம் என்று.
மனைவியின் அறிவுரைப்படி இரு பெரிய மற்றும் இரு சிறிய பெட்டிகள். பெரிய பெட்டிகள் எப்பொழுதும் வாகனத்தில். சிறிய பெட்டிகள் ஒவ்வொரு முறை விடுதியில் தங்கும்போது, தேவையான பொருட்களை மட்டும் எடுத்து செல்ல.
சரி, இந்த மாதிரி ஊர் ஊரா அலைவதில் என்ன பிரயோஜனம், வீண் செலவு என்று சொல்பவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. சிலருக்கு காசை சேமிப்பது, சிலருக்கு தர்ம காரியங்களில் ஈடுபடுவது, சிலருக்கு எல்லோரையும் எல்லாவற்றையும் குறை சொல்வது. எல்லோரும் அவரைப்போலவோ இவரைப்போலவோ இருக்க வேண்டும் என்பது கிடையாது. நம் வாழ்க்கையை மற்றவர்களுக்காக வாழ்வதை விட நமக்காக வாழ்வது மேல் என்று நினைக்கிறவன். நல்ல மனிதனாக இரு. நாலு பேருக்கு முடிந்ததால் நல்லது பண்ணு. தீங்கு விளைவிக்காதே. எளிமையான நோக்கு, எங்களுடையது.
37 நாட்கள் சொன்னேன். ஆனால் ஒவ்வொரு நாளை பற்றியும் சொல்லி உங்களை டால்ச்சர் (தமிழ் வார்த்தையா?) பண்ணப்போவதில்லை. 35 வருடங்களுக்கு முன் அமெரிக்கா ஒரு வேற்று உலகம். இன்று அப்படியில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் குடும்ப நபரோ, மாமனோ, மச்சானோ சிக்காகோவிலோ சியாட்டலிலோ. ஆகவே முடிந்தவரை அரைத்தமாவை தவிர்க்கிறேன்,
May 7-9 – Silver Cloud Hotel, Seattle, Washington:
மே 7 – சியாட்டல் (Washington State): மதியம் 2 மணி போல இறங்கியாயிற்று. பெரிய விமான நிலையம். குடியுரிமை சோதனை நிறைய நேரம் எடுத்தது. அறைக்கு வந்தாகியது. துபாய் ஒப்பிடுகையில் சியாட்டல் 11 மணி நேரம் பின். ஓரிரு நாட்கள் உடம்பு ஆடும். பின் சரிப்படுத்திக்கொள்ளும். ஓய்வுதான் இன்று.
மே 8: முதல் வேலை டார்கெட் (Target) சென்று சிம் அட்டை. பின் சியேட்டல் ஊசி (Needle), ஸ்டார்பக்ஸ் முதல் துவங்கிய கடை, பைக்ஸ் மார்க்கெட், புதையுண்ட நகரம் (Underground City) என வழக்கமான இடங்களை பார்த்து முடித்தோம்.
நாங்கள் பார்த்த வகையில், அமெரிக்கா ஒரு விந்தையான நாடு. மிக அதீதங்கள், நல்லதும் சரி கெட்டதும் சரி. நான் பொதுப்படுத்த (generlise) முயலவில்லை. நீங்கள் மாறுபடலாம்.
எனக்கு பிடித்த முதல் அம்சம் வாகனம் ஓட்டுவதற்கு (நீண்ட பயணம்) அமெரிக்கா, கனடா இரண்டும் மிக ஏற்ற நாடுகள். ஐரோப்பாவில் ஓட்டியவரை, UK மற்றும் ஐயர்லாந்து சாலைகள் சற்றே குறுகளானவை. வாகனம் நிறுத்துவதும் ஒரு சவால். ஆஸ்திரேலியாவில் நீண்ட தூரம் ஓட்டியதில்லை. நியூஸிலாந்து சென்றதில்லை. நண்பர்கள் சொல்வர்கள் இந்த இரு நாடுகளும் கூட சுகமான அனுபவம் என்று. அனுபவிக்க வேண்டும்.
இரண்டாவது அம்சம், அவர்கள் அந்த நாட்டு சிறப்பம்சங்களை சிரத்தையோடு பாதுகாப்பது. தேசிய பூங்காக்கள், நினைவில்லங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள். எல்லாம் அழகோ அழகு.
அடுத்து அவர்களுடைய "வாடிக்கையாளர்" திருப்திப்படுத்தும் நோக்கம். நம்மூரில் பல்பொருள் அங்காடியில் ஒரு பொருள் எங்கே என்று கேட்டால் பொத்தாம்பொதுவாக "அந்தப்பக்கம் சார்" என்று கை காட்டிவிட்டு அடுத்த வேலைக்கு போய்விடுவார்கள். நீங்கள் வால்மார்ட் போன்று எந்த கடைக்கு சென்றாலும், பொறுமையாக உங்கள் தேவை கேட்டறிந்து கூடவே வந்து பொருள் இருக்கும் இடத்தை காட்டி நீங்கள் திருப்தி என்றால் நகருவார்கள். இது பொதுவான ஒன்று. உடனே, நியூயார்க்ல எனக்கு1927ல ஒரு கடையிலன்னு ஆரம்பிக்காதீங்க. விதிவிலக்குகள் எங்கும் உண்டு. அதேபோல் அவர்களுடைய "திரும்ப பெறும்" கொள்கை. குறிப்பிட்ட சில நாட்களுக்குள் வாங்கிய பொருள் மீது திருப்தி இல்லையென்றால் கேள்வியில்லாமல் திருப்பி கொடுத்துவிடலாம். அதை எப்படியெல்லாம் முறையில்லாமல் பயன்படுத்த முடியும் என்று நம் மக்கள் Phd செய்துள்ளார்கள்.
பொது மக்களின் மன மகிழ்வுக்காக ஏராளமான இடங்கள். சுத்தமாக, குழந்தைகளுக்கு மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஏதுவாக, ஒழுங்கான ஏற்பாடுகளுடன் அதே சமயம் வணிக மயமாக செய்திருப்பார்கள். மக்களும் ஒரு அவசர கதியில் இல்லாமல் பொறுமையாக அனுபவிக்கும் சூழலை பெரும்பாலும் காணலாம். கார் நிறுத்துவதற்கு ஏராளமான இடங்கள் ஏற்பாடு செய்திருப்பார்கள். நியூயார்க், அட்லாண்டா போன்ற மிகப்பெரிய நகரங்கள் தவிர்த்து நாங்கள் எங்கேயும் பிரச்சினை எதிர்நோக்கவில்லை.
எனக்கு கவனம் ஈர்க்கின்ற விஷயம் என்றால், போதை அடிமைகள் மற்றும் மன நோயாளிகள். எல்லா பெரிய நகரங்களிலும் அமெரிக்காவின் மற்றொரு பக்கம் அப்பட்டமாக தெரியும். அது எந்த அளவுக்கு என்றால் இது ஒரு பெரிய விஷயமே இல்லாதமாதிரி மக்கள் பழகிவிட்டார்கள். டௌன்டவுன் என்று சொல்லுவார்கள். பெரும்பாலும் வணிக இடங்கள் மற்றும் அலுவலகங்கள் இருக்குமிடங்கள். மாலை 6-7 மணிக்கு பிறகு சற்றே மாறிவிடும். போதை மருந்துகள், விளிம்பு மக்கள், மன நோயாளிகள் சற்று அதிகமாகி ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். சியாட்டல் முதல் நாளே நிறைய வீடற்றவர்கள், மனநோயாளிகள் என சற்றே அச்சமூட்டியது. இன்னும் 35 நாட்கள். நிறைய பார்ப்போம், நிச்சயமாக.
அடுத்து சற்றே அச்சம் கொடுக்கின்ற "தெரியாத தெரியாத" (Unkown Unknown) விஷயம் எங்கே எப்போது துப்பாக்கி வெளியே வரும் என்பது. முதல் பயணத்தில் (1994, பாம் பீச், Florida) அதிகாலை ஒரு டாக்ஸி ஓட்டுநர், தான் எப்போதும் துப்பாக்கி வைத்திருப்பதாகவும் (இனவெறி கருத்துக்களை கூறி) உபயோகிக்க தயங்கமாட்டேன் என்றும் மார்தட்டினார்.
மே 9 – எவெரெட் (Washington State): அடுத்த நாள் போயிங் (Boeing) விமான தொழிற்சாலை பார்வையிட திட்டம். என் கணிப்பில் போயிங் ஒரு கணிசமான வருமானம் இந்த "வழிகாட்டப்பட்ட சுற்றுலா" (Guided Tour) மூலமே ஈட்டும். அவ்வளவு நேர்த்தியாக அவ்வளவு மக்களை தொழிற்சாலை முழுவதும் சுற்றி காட்டுவார்கள். நம் கண்ணெதிரே விமானங்கள் பல கட்டங்களில் உருப்பெறுவதை பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். எல்லா இடங்களையும் போல, இறுதியில் அவர்களின் கடை மூலமாக வெளியேறும்படி அமைத்திருந்தார்கள். அங்கே நின்று நினைவு பொருட்கள், மேலாடைகள், குடைகள் இத்யாதி இத்யாதி வாங்கும்படி செயலற்ற உந்துதல் (passive persuasion) செய்வார்கள்.
மதியம், இந்திய உணவு அருந்திவிட்டு விடுதிக்கு திரும்பினோம். ஒரு விஷயம் நிச்சயம் கவனம் கொள்ளுங்கள். உணவகங்கள் தரும் உணவின் அளவு சற்றே அதிகம், நம்மூருக்கு ஒப்பிடுகையில். மேலும், சைடு டிஷ் தருவித்தால் கூடவே சாதம் இலவசம். ஆகவே, முன்பே கேட்டறிவது நலம். நீங்கள் எந்த சிறு ஊருக்கு சென்றாலும், இந்திய உணவகங்கள் (குறைந்தபட்சம் நேபாளி, பங்களாதேஷி நடத்துகிற) நிச்சயம் கிடைக்கும். அறையில், சில சுற்றுகள் சீட்டாடிவிட்டு நன்கு உறங்கினோம். மறுநாள் போர்ட்லேண்ட், Oregon, 270 கிமீ, செல்லவேண்டும்.
மே 10 – சியேட்டல் – போர்ட்லேண்ட் (Oregon): முதல் இரண்டு நாட்கள் பயணங்கள் Uber / Lyft உபயம். இன்று வாகனம் எடுக்கவேண்டும். என் தேர்வு என்டர்ப்ரிஸ் (Enterprise Rent-A-Car) தான். 2018 அனுபவம் கொடுத்த நம்பிக்கை.
விடுதி கணக்கு சரிபார்த்து Uber மூலம் சியாட்டல் விமான நிலையத்தை ஒட்டிய வாடகை வாகன நிலையம் வந்தோம். பொதுவாக விமான நிலையத்துக்கும் வாடகை வாகன நிலையத்திற்கும் நல்ல இணைப்பு இருக்கும். (High speed trains or Bus). ஒப்பீட்டுக்கு சொல்லவேண்டுமென்றால் ஏறக்குறைய சென்னை உள்நாட்டு விமான நிலையம்போல் இருக்கும் வாடகை வாகன நிலையம். விமான கம்பெனிக்கு பதிலாக Budget, Avis, Alamo என்று 10-15 கம்பெனிகள் அலுவலகம் வைத்திருப்பார்கள். முன்பதிவு செய்திருந்தால், சில நிமிடங்களில் உங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் கடன் அட்டை பரிசோதித்து உங்களின் வாகனம் உறுதி செய்து குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல வழிசொல்வார்கள். அங்கே உங்கள் தெரிவுக்கேற்ப வாகனம் சுத்தம் செய்யப்பட்டு எல்லா சோதனைகளும் செய்து கையில் சாவியையும் சில ஆவணங்களையும் பிரதிநிதி கொடுப்பார். ஓட்டை உடைசல் இருந்தால் முன்னமே தெரிவுபடுத்தி விடவேண்டும். GPS கருவி இன்றியமையாதது. உறுதி செய்துகொண்டு, இலக்கை (Crown Plaza போர்ட்லேண்ட், Oregon) தெரிவு செய்து பயணத்தை ஆரம்பித்தோம்.
ஓட்டுவதற்கு ஆயத்தமாக முறுக்கு, சீடை மனைவி கையில். போனில் இளையராஜா. பயணம் இனிதே அமைய விநாயகனுக்கு வேண்டிக்கொண்டு, டொயோட்டா ஹைலாண்டர் வண்டியை நகர்த்தினோம்.
20-30 நிமிடம் பழக்கப்பட்ட பிறகு, சரளமாக ஓட்ட ஆரம்பித்துவிடுவோம். துபாய் போலவே அமெரிக்கா சாலையின் வலதுபுறம் ஓட்டும் வழிமுறை உள்ள நாடு. இந்தியா, UK, ஆஸ்திரேலியா போன்று சில நாடுகள் மட்டுமே இடதுபுறம்.
ஒரு முக்கியமான விஷயம். நாம் என்னதான் கவனமாக ஓட்டினாலும், மற்றவர் கவனக்குறைவால் விபத்துக்கள் சமயங்களில் ஏற்படலாம். அல்லது நம்மை அறியாமல் "போக்குக்குவரத்து சமிக்கை" மீறி இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் காவலர்களால் நிறுத்தப்பட்டால் முக்கியமாக செய்யவேண்டிய விஷயம் ஒன்றும் செய்யாமல் இருப்பது. வாகனத்தை அணைத்து, கண்ணாடியை இறக்கி கையை காவலர் கண்படும்படி "இயக்காழி" (Steering) மீது வைத்து காவலர் சொல்படி நடந்துகொள்ளவேண்டும். தேவை இல்லாமல் சிரிப்பதோ, கையை இங்கே அங்கே வைப்பதோ நம்மை சங்கடத்தில் தள்ளலாம். என் அமெரிக்க உறவினர்கள் தந்த முக்கியமான ஆலோசனை இது. முன்னோர்கள் செய்த புண்ணியம், எங்கும் எதற்கும் நாங்கள் சாலைகளில் நிறுத்தப்படவில்லை. (உண்டியில் காணிக்கை செலுத்திவிட்டோம்).
முதலில் சாமி பாடல். பின்பு ராஜாதான். இடையிடையே சீடையோ முறுக்கோ நொறுக்கி பழைய நினைவுகளை அசை போட அப்படியே வாடகை வண்டி எடுப்பதில் என் முதல் அனுபவம் ஞாபகத்திற்கு வந்தது. இந்த மூளை எப்படி பலவற்றை மறந்து சிலவற்றை மட்டும் சேமித்து வைக்கிறதோ? அந்த சிலவற்றை எப்படி தேர்வு செய்கிறது? எங்கே சேமித்து வைக்கிறது?
நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதிய அல்ஜீப்ரா கணிதம் எல்லாம் மறந்தே போயாச்சு. ஆனால் அந்த இயற்பியல் டீச்சருடைய மகளின் அழகான திமிரான முகம் இன்றும் ஞாபகத்தில் உள்ளது. அப்புறம் பள்ளியில் பேச்சுப்போட்டியில் முதன்முதல் கலந்துகொண்டு பேச முடியாமல் நா குழறி துவங்காமலேயே அவமானப்பட்டு வெளியேறியது, கசப்பாக ஞாபகம் உள்ளது.
போர்ட்லாண்டில் 10/11 மே தங்கி. மோல்டனோமா அருவி மற்றும் கொலம்பியா ஆறு பள்ளத்தாக்கு பார்த்துவிட்டு 12 அன்று சால்ட் லேக் சிட்டி (Utah, 1200 கிமீ) நோக்கி பயணமானோம். அடுத்த வாரம் அந்த அனுபவங்களை பகிர ஆவலுடன்.....
-சங்கர் வெங்கடேசன்
(shankarven@gmail.com)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-village-man-travel
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக