Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

40 ஆண்டுக்குப் பின் சார்லஸ் - டயானா திருமண கேக் ஏலம்; ₹1.9 லட்சத்துக்கு வாங்கப்பட்ட ஆச்சர்யம்!

காதலுக்கும் சர்ச்சைக்கும் பெயர்போன ஜோடி சார்லஸ்-டயானா. டயானா உயிருடன் இல்லையென்றாலும் அவரின் திருமண நிகழ்வு இன்றளவும் மெச்சப்படும் விஷயங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்தத் திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட கேக் துண்டுதான் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

Diana

Also Read: `அவர்கள் பேசியது கேட்டு அதிர்ந்து போனேன்!' - மேகன் - ஹாரி தம்பதி பகிர்ந்த அரண்மனை அதிர்ச்சிகள்

சார்லஸ்-டயானா திருமணத்துக்கு வருகை தந்திருந்தவர்களை உபசரிக்க பல்வேறு நாடுகளிலிருந்து 23 கேக்குகள் வரவழைக்கப்பட்டன. அப்போது வெட்டிப் பரிமாறப்பட்ட கேக் துண்டு ஒன்று டயானாவின் அரண்மனையில் பணிபுரிந்த மோயா ஸ்மித் என்பவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அதை அவர் சாப்பிடாமல் பத்திரப்படுத்தி வைக்க, அவர் குடும்பத்தினரும் கேக் துண்டை பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கேக் துண்டை ஒரு கலெக்டருக்கு விற்பனை செய்ய, அதே கேக் துண்டு மீண்டும் ஏலத்திற்கு வந்து கலக்கியிருக்கிறது. மெல்லிய கண்ணாடி இழை போன்ற பேப்பரில் மூடி வைக்கப்பட்ட கேக் நாற்பது வருடங்களுக்குப் பிறகும் தயாரிக்கப்பட்ட அன்று எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. அப்படி பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டதால்தான் 40 வருடங்கள் கழித்தும் மவுசு குறையாமல் உள்ளது.

சார்லஸ் - டயானா திருமண கேக்

இதை ``சாப்பிடமட்டும் கூடாது" என்ற நிபந்தனையுடன் ஏலத்துக்கு வந்த கேக்கை தட்டிச்செல்வதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, அரபு உள்ளிட்ட நாடுகளிலிருந்து நீயா நானா என முந்திக்கொண்டு ஒன்றுகூடியிருக்கின்றனர். 300 பவுண்டு ஸ்டெர்லிங்கில் தொடங்கிய இந்த கேக் துண்டின் ஏலம், இறுதியாக யாரும் எதிர்பாராத விதமாக 1850 பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கு (இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 1.90 லட்சம்) விலைபோயிருப்பது ஏல நிறுவனத்திற்கே இன்ப அதிர்ச்சியாம்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/oddities/international/40-years-old-cake-piece-given-at-charles-diana-wedding-sold-for-1850-pounds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக