Ad

புதன், 25 ஆகஸ்ட், 2021

பொடா சட்டத்தில் வழக்கு விசாரணை; 18 ஆண்டுக்கால போராட்டத்துக்கு விடை தேடும் அமைப்பினர்!

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பிற இயக்கத்தினர் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்பது தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான ஒன்றாக இடம்பெற்றது. அதன்படி ஆட்சி அமைத்ததும், ``2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுகளுக்காக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன், கணேசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எம்.நாசர், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன், தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த சுமார் 130 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறவும், அவற்றின் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பத்திரிகையாளர்கள்‌ மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப்‌ பெறப்பட்டதோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியதாகத் தொடரப்பட்ட வழக்குகளும் திரும்பப்பெறப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின்!

2002-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொடா சட்டத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என முற்போக்கு மாணவர் சங்கம், முற்போக்கு இளைஞர் அணி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம், உழவர் உழைப்பாளர் மாமன்ற அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறார்கள். நடந்தது என்ன, வழக்கை ஏன் ரத்து செய்யவில்லை என்பது குறித்து விசாரித்தோம்...

Also Read: சிறையில் சந்தித்து மனத்தை கரைத்த கலைஞர்... வைகோவின் `பொடா' நாள்கள்!

ஏன் வழக்கு தொடரப்பட்டது, அதன் தற்போதைய நிலை என்ன என பாதிக்கப்பட்ட அமைப்பைச் சேர்ந்த விநாயகம் என்பவரிடம் பேசினோம்.

``2002-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது நக்சலைட்டுகள் என்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் வைகோ, பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பத்மநாபன், புதுக்கோட்டை பாவாணன், நக்கீரன் கோபால் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். துப்பாக்கி, ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்ததாக இவர்கள்மீது வழக்கு போடப்பட்டது. அந்த அடிப்படையில் தருமபுரி மாவட்டம், ஊத்தங்கரையில் அரசுக்கு எதிராக ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்றும், மக்கள் யுத்த கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்றும் குற்றம்சாட்டி முற்போக்கு மாணவர் சங்கம், முற்போக்கு இளைஞர் அணி, தமிழ்நாடு பெண்கள் இயக்கம், உழவர் உழைப்பாளர் மாமன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆறு பெண்கள், பதினாறு வயது சிறுவர்கள் இருவர் உட்பட 27 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் கல்லாவி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்கள். இவர்களில் போலீஸார் சுட்டதில் சிலா என்பவர் மரணமடைந்தார். மூன்று நான்கு மாதங்கள் கழித்து அந்த வழக்கு பொடா வழக்காக மாற்றப்பட்டது. வழக்கு, பதிவுசெய்யப்பட்ட 2002, நவம்பர் மாதம் தமிழகத்தில் பொடா சட்டம் அமலில் இல்லை.

வைகோ

உண்மையில் 2003-ம் ஆண்டுதான் பொடா சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. இந்தநிலையில், அரசை விமர்சித்தவர்கள், போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் ஜெயலலிதா பொய்யான வழக்கு பதிவு செய்து பொடா சட்டத்தின்கீழ் அவர்களை பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதாக கடும் விமர்சனம் எழுந்தது” என்றவர்...

``மனித உரிமையாளர்களும், மூத்த வழக்கறிஞர்களும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் இணைந்து 'பொடா சட்ட எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் பெரிய போராட்டங்கள் நடத்தினர். நாடாளுமன்றத்திலும் புரட்சிகர அரசியலையும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமல்ல என்று தீர்ப்பு வந்தது. இதனடிப்படையில் வைகோ, பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், நக்கீரன் கோபால் போன்றவர்கள் படிப்படியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். எங்கள் அமைப்பிலேயே கைதுசெய்யப்பட்ட 27 பேரில் முதலில் பெண்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் நாங்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டோம். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் பழிவாங்கும் நோக்கத்தோடு போட்ட பொடா வழக்குகளைத் திரும்பப் பெறுவோம்’ என 2006 தேர்தல் நேரத்தில் தி.மு.க வாக்குறுதி அளித்தது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்திலும் `மத்திய, மாநில அரசுகள் அரசியலில் தங்களுக்கு எதிராக இருப்பவர்களைப் பழிவாங்க பொடா சட்டத்தைப் பயன்படுத்துகிறது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று எதிர்க்கட்சியினர் கடுமையாகப் போர்க்கொடி தூக்கினார்கள். தற்போது பொடா சட்டம் ரத்தும் செய்யப்பட்டிருக்கிறது. 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வைகோ, கோபால், பழ.நெடுமாறன் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் மீதான பொடா வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விநாயகம்

பொடா மீளாய்வுக்குழுவின் பரிந்துரையின்படி இதே வழக்கில் கைதான முருகேசன் என்பவர்மீது மட்டும் பொடா பிரிவு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. ஏனைய 26 பேர் மீதான வழக்குகளில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் 18 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது” என்றவர்,

மேலும், ``அதே அடிப்படையில் எங்கள் மீதும் பொடா பிரிவுகள் நீக்கப்பட்டு முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆயுதத் தடுப்பு மற்றும் வெடிமருந்துச் சட்டத்தின் கீழ் வழக்கை நடந்த வேண்டுமென உயர் நீதிமறைத்தில் முறையீடு செய்யப்பட்டது. மேலும், கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு இருப்பதால், வழக்கை நடத்த சட்ட உதவி மையத்தின் மூலம் திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட வேண்டுமென ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தற்போது ஆட்சி அமைத்துள்ள தி.மு.க அரசு, அரசியல் நோக்கத்தில் போடப்பட்ட பல்வேறு வழக்குகளை ரத்து செய்துவருகிறது. அதேபோல ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எங்கள்மீது போடப்பட்ட வழக்கையும் ரத்து செய்து எங்களின் 18 ஆண்டுக்கால போராட்டத்துக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்று வழக்கு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்டுத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதையடுத்து இந்த விஷயத்தை அவருக்குக் குறுஞ்செய்தியாகவும் அனுப்பினோம். அவர் தரப்பில் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதையும் பரிசீலித்து வெளியிடத் தயாராக இருக்கிறோம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/organizations-seeking-answers-to-18-years-of-struggle-for-prisoned-in-pota-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக