Ad

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

₹100-க்கே ₹2 லட்சம் இன்ஷூரன்ஸ் கவரேஜ்; வங்கிகளில் கிடைக்கும் இந்த சேவைகள் பற்றி தெரியுமா? - 9

பர்சனல் ஃபைனான்ஸ் கருத்தாக்கத்தில் முதலீடு என்பது கடன் சார்ந்தவை, பங்கு சார்ந்தவை என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் இன்று வரை ராஜாவாக இருப்பவை வங்கிகள். பர்சனல் ஃபைனான்ஸின் அடித்தளம் சேமிப்பு என்றால், சேமிப்பின் அடித்தளம் வங்கிகள்.

ஐயாயிரம் வருடங்களாக மனிதர்களுடன் உறவாடுபவை இவை. சுமேரியக் கோவில்களில் பணம் உள்ளவர்களுக்கும், கடன் வேண்டுவோருக்கும் நடுவே பாலமாக ஆரம்பித்து இன்று நம் ஸ்மார்ட் ஃபோன்களில் உறையும் வரை அதன் பயணம் நீண்ட நெடிய ஒன்று. நம் கண் முன்னரே அது அடைந்திருக்கும் மாற்றங்கள் எத்தனை!

வங்கிகள்

முதலில் மக்கள் தங்களிடம் மீதி இருக்கும் பணத்தை வங்கிகளில் போட்டு பணத்துக்குப் பாதுகாப்பும், வளர்ச்சியும் பெற்றதோடு, தேவையானபோது, தேவையான அளவு தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதியும் பெற்றனர். பணத்தைப் பெற்ற வங்கிகள் அதை தேவைப்பட்டோருக்கு கடனாகத் தந்து வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.

விலையுயர்ந்த பொருள்களை லாக்கரில் பாதுகாத்தல், கல்விக் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன், கார்ப்பரேட் கடன் போன்றவற்றைத் தருதல் – இப்படி படிப்படியாக வளர்ந்த வங்கிகள் டெலிகாம் மற்றும் டிஜிடலைசேஷன் வருகைக்குப்பின் இன்டர்நெட் பேங்கிங், ஃபோன் பேங்கிங், ஆர்.டி.ஜி.எஸ். என்.இ.எஃப்.டி என்று இறக்கை கட்டிப் பறக்கின்றன.

வங்கிகளின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நம் பர்சனல் ஃபைனான்ஸின் வளர்ச்சிக்கு உபயோகமாகும் சில வசதிகளை மட்டும் முழுமையாகப் பார்க்கலாம்.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும். ஒரு ஐ.டி.ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப், இரண்டு ஃபோட்டோக்கள் இருந்துவிட்டால் சேவிங்ஸ் அக்கவுன்ட்டை ஆரம்பித்துவிடலாம். அக்கவுன்ட்டை ஆரம்பித்ததுமே பாஸ் புக், செக் புக், ஏடிஎம் கார்டு, இமெயில் அலர்ட், எஸ்.எம்.எஸ். அலர்ட் என்று அத்தனையும் நமக்கு வந்து விடுகின்றன.

மாதாந்திர பில்கள், கடனுக்கான இ.எம்.ஐ., சேமிப்புக்கான எஸ்.ஐ.பி., இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் – இவை எல்லாவற்றுக்கும் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கலாம். அரசு தரும் மானியங்கள் இடைத்தரகர்கள் இன்றி, நம் அக்கவுன்ட்டை அடைகின்றன. இது போன்ற விஷயங்கள் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். கீழ் வரும் சில வசதிகள் இன்னும் அதிகம் பேரை சென்று அடையவில்லை.

Bank (Representational Image)

Also Read: அவசர கால நிதி: உங்கள் நிம்மதிக்கு கியாரண்டி தரும் சூப்பர் ஃபார்முலா! - பணம் பண்ணலாம் வாங்க - 7

* இன்று பல வங்கிகளிலும் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு சேவிங்ஸ் அக்கவுன்டுடன் ஆக்சிடென்டல் டெத் இன்ஷூரன்ஸும் தருகிறார்கள். வருடத்திற்கு ரூ.100 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை கவரேஜ், ரூ. 200 செலுத்தினால் ரூ.4 லட்சம் வரை இன்ஷுரன்ஸ் கவரேஜ் கிடைக்கிறது. இதை வங்கியில் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாகப் பெறலாம்.

* லட்சக்கணக்கில் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் பணம் வைத்திருப்பவர்களுக்கு லாக்கர் வாடகை, டீமேட் கட்டணம், பெட்ரோல் பங்க், ரெஸ்டாரன்ட்டுகள், தியேட்டர்கள், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல விஷயங்களில் சலுகைகள் கிட்டுகின்றன.

*வெளிநாடுகளுக்குச் செல்வோர் இன்டர்நேஷனல் டெபிட் கார்ட் வாங்கிக் கொண்டால், அந்நியச் செலாவணி பற்றிய கவலை இன்றி செலவழிக்கலாம்.

* இன்று உலகின் எந்த மூலைக்கும் பணத்தை அனுப்ப இயலும். சீனியர் சிட்டிசன்களுக்கும், பெண்களுக்கும் தேவைப்படும் வசதிகளுடன் ஸ்பெஷல் அக்கவுன்டுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* சேவிங்ஸ் அக்கவுன்ட்டுடன் தரப்படும் இன்டர்நெட் பக்கத்தில் எந்த நிதியாண்டில் நம்மிடமிருந்து எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வரிப்பிடித்தம் செய்துள்ளன என்பதைக் காட்டும் 26 ஏ.எஸ் படிவம் காணக் கிடைக்கிறது.

* சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் அதிகம் பணம் சேர்ந்துவிட்டால் வங்கிக்கு சென்று எஃப்.டி ஆரம்பித்ததெல்லாம் அந்தக் காலம். இன்று அதற்கென இருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் எப்போதெல்லாம் நம் அக்கவுன்ட்டில் நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் சேர்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு புதிய எஃப்.டி. ஒரு வருட காலத்திற்கு அன்றைய வட்டி விகிதத்தில் ஆரம்பிக்கப்படுகிறது.

Money (Representational Image)

Also Read: பணத்தை சேமித்தால் மட்டும் போதாது மக்களே; இதுவும் செய்ய தெரியணும்! - பணம் பண்ணலாம் வாங்க - 8

* ஒருவேளை, நம் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை விட அதிகப் பணத்திற்கு செக் கொடுத்தாலோ அல்லது ஏ.டி. எம்.மில் எடுக்க முற்பட்டாலோ தேவையான அளவுப் பணம் இந்த எஃப்.டி.யில் இருந்து அக்கவுன்ட்டுக்குத் திரும்புகிறது. இதனால் உபரிப் பணம் குறைந்த வட்டியில் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருப்பது தடுக்கப்படுகிறது.

இப்படி வங்கி சேவிங்ஸ் அக்கவுன்ட் பலவித சேவைகளைத் தந்தாலும், மற்ற அக்கவுன்ட்டுகளை விட எளிதாக இதில் சைபர் தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்பு இருப்பதால் அளவுக்கு அதிகமாக இதில் பணத்தை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இன்னும் சில முக்கியமான வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.

(மீண்டும் புதன் கிழமை அன்று சந்திப்போம்! )

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/business/finance/here-are-the-some-useful-services-which-easily-available-in-banks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக