Ad

திங்கள், 19 ஜூலை, 2021

``இனி தி.மு.க Vs பா.ஜ.க-தான்...'' வேகமெடுக்கும் அண்ணாமலை; அ.தி.மு.க-வை பின்னுக்குத்தள்ள முடியுமா?

தி.மு.க ஆட்சி அல்லது அ.தி.மு.க ஆட்சி என்பதுதான் கடந்த அரை நூற்றாண்டு கால தமிழக வரலாறு. பா.ஜ.க-வைப் பொறுத்தளவில் மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருந்தாலும், தமிழகத்தில் ஏதோ ஒரு திராவிடக் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் ஒரு கட்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால் பெற்றுள்ள செல்வாக்கை வைத்து, தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்குப் பல முயற்சிகளை தமிழக பா.ஜ.க-வினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

அந்த வகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த நான்கு பேர் வெற்றிபெற்று, 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். சமீபத்தில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணையமைச்சர் ஆக்கப்பட்டு, பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், 2026-ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 150 எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். ஏற்கெனவே, ‘இனி தமிழ்நாட்டு அரசியல் என்பது தி.மு.க Vs பா.ஜ.க என்பதாகத்தான் இருக்கும்’ என்று பா.ஜ.க-வினர் பேசிவருகிறார்கள். அதையும் தாண்டுவதாக அண்ணாமலையின் இந்தப் பேச்சு அமைந்திருக்கிறது. இது எந்தளவுக்கு சாத்தியம்? இப்படிப் பேசுவதன் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளிடம் முன்வைத்தோம்.

இது குறித்து அ.தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளரான ஜவஹர் அலியிடம் பேசினோம்.

“ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக என்ன சொல்ல வேண்டுமோ, அதை அண்ணாமலை சொல்கிறார். அடுத்து நாங்கள்தான் முதல்வர் என்று அன்புமணி ராமதாஸ் பல ஆண்டுகளாக சொல்லவில்லையா? அடுத்து நாங்கள்தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று கமல்ஹாசன் சொல்லவில்லையா? அதேபோல டி.டி.வி.தினகரன் பேசவில்லையா? ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கு அப்படிச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், களநிலவரம் என்பது வேறு. தமிழகத்தைப் பொறுத்தவரையில், எப்போதுமே திராவிடக் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும். திராவிட இயக்கங்களில்கூட, ‘அடுத்த முதல்வர்’ என்று சொல்லப்பட்ட வைகோவால்கூட மேலே வரமுடியவில்லை. அனைத்து கிராமங்களிலும் நகரங்களிலும் கட்சியின் கொடி பறக்க வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் குறைந்தது பத்து பேராவது இருக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தான் இதெல்லாம் இருக்கின்றன. தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சிக்கும் இந்தளவுக்கு செல்வாக்கு கிடையாது.

ஜவஹர் அலி

அஸ்திவாரம் இல்லாமல் கட்டடம் கட்ட முடியாது. அஸ்திவாரம் வலுவாக இல்லையென்றால், கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும். எனவே, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு என்ன அஸ்திவாரம் இருக்கிறது? கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரது விருப்பத்தை அவர் சொல்கிறார். அதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. மத்தியில் பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜ.க இருந்தாலும்கூட, நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில்தான் போட்டியிட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் 70-80 தொகுதிகளில் நிற்போம் என்று சொன்ன பா.ஜ.க., 20 தொகுதிகளில்தான் போட்டியிட்டது.

இப்போது பா.ஜ.க-வுக்கு மூன்று சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கிறது என்றால், ஐந்து ஆண்டுகள் கழித்து அது ஐந்து சதவிகிதமாக வளரலாம். ஆனால், மூன்று சதவிகிதம் என்பது 30 சதவிகிதமாக வளர முடியாது. மத்தியில் ஆட்சியில் இருப்பது பா.ஜ.க-வுக்கு ஒரு பலமாக இருக்கலாம். அதை மட்டுமே வைத்து தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி

அப்படிப் பார்த்தால், காங்கிரஸ்கூடத்தான் மத்தியில் பல காலம் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதா என்ன? ராஜீவ் காந்தியைவிடவா? அவர்மீது தமிழ்நாட்டு மக்கள் எந்தளவுக்கு அபிமானம் வைத்திருந்தார்கள். அது வேறு. தமிழ்நாட்டின் மனநிலை திராவிட இயக்கங்களை நோக்கி மாறி மாறி போகுமே ஒழிய, தேசியக் கட்சிகளால் இங்கு காலூன்ற முடியாது” என்றார் ஜவஹர் அலி.

பா.ஜ.க தலைவரின் பேச்சு குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

“தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் வேண்டுமானால் பா.ஜ.க Vs தி.மு.க என்று இருக்கும். அப்படித்தான் அவரது கருத்தை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். மத்திய அரசுக்கான வாக்காலத்து அரசியலை முன்னெடுப்பதை தமிழக பா.ஜ.க தொடருமானால், மூன்று சதவிகித வாக்கு வங்கி என்ற நிலையை அவர்கள் தாண்டவே முடியாது. தமிழ்நாட்டு மக்களுக்கான வக்காலத்து அரசியலை என்றைக்கு தமிழக பா.ஜ.க முன்னெடுக்கிறதோ, அன்றைக்குதான் அவர்களால் வளர முடியும். அதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும். அதுவரை அவர்கள் மத்தியில் அதிகாரத்தில் இருப்பார்களா என்பதையெல்லாம் பொறுத்துதான் அது இருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் வளர முடியாது என்பதற்கு நான் சொல்லும் காரணம், இவர்களின் எந்தக் கொள்கையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவானது இல்லை. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் ஆதரவான நிலைப்பாடு என்று ஒன்றைக்கூட அவர்களால் சொல்ல முடியாது. பா.ஜ.க-வின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், வட இந்தியாவில் ஏதோ ஒரு கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைக்கும். பிறகு அந்த கட்சியையே பா.ஜ.க விழுங்கிவிடும். அதனால்தான், அப்படிப்பட்ட பா.ஜ.க-வுடன் உறவாடும் அ.தி.மு.க-வை எச்சரிக்கிறோம்.

தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழக மக்களின் வாழ்வியலுடன் இணைந்தவை. அதை அவ்வளவு எளிதாக பா.ஜ.க போன்ற கட்சியால் உடைத்துவிட முடியாது. அ.தி.மு.க தேர்தலில் தோற்றிருந்தாலும், அது அந்தக் கட்சியின் தலைவர்களுக்கு பின்னடைவாக இருக்கலாம். ஆனால், அ.தி.மு.க-வின் தொண்டர்களை எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க படுதோல்வி அடைந்தபோதுகூட, 21 சதவிகித வாக்குகளை அந்த கட்சி பெற்றது. எனவே, அ.தி.மு.க தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களை மொழி ரீதியாகவோ, இன ரீதியாகவோ ஒருங்கிணைத்து கட்சியை வளர்ப்பதற்கு பா.ஜ.க-விடம் என்ன திட்டம் இருக்கிறது? எனவே, ஆட்சியைப் பிடிப்போம், தி.மு.க-வுக்கு இணையாக வளருவோம் என்கிற தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு பா.ஜ.க தலைவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவ்வளவுதான்” என்றார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

Also Read: கழுதையிடம் மனு... காந்தி சிலைக்கு மாலை... தேசத்துரோக சட்டப்பிரிவு '124 ஏ' நீக்கப்படாதது ஏன்?

இது குறித்து பா.ஜ.க-வின் செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான குமரகுருவிடம் பேசினோம். “இளைஞர் ஒருவரை மாநிலத் தலைவராக நியமித்திருக்கிறோம். நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதாலேயே எங்கள் ஆட்சி தமிழ்நாட்டில் வேண்டாம் என்று அர்த்தமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். அப்படியென்றால், தமிழகத்தில் இனி காங்கிரஸுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான் போட்டி என்று சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா? கே.எஸ்.அழகிரிக்கு ஆசை இருக்கலாம். அண்ணாமலைக்கு அந்த ஆசை இருக்கக்கூடாதா?

குமரகுரு

பா.ஜ.க-வால் ஆட்சியமைக்க முடியாது என்று சொல்லப்பட்ட திரிபுரா உள்பட பல மாநிலங்களில் நாங்கள் ஆட்சியமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு நான்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருக்கிறார்கள். மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க-வின் சுப்புலட்சுமி ஜெகதீசனை பா.ஜ.க தோற்கடித்திருக்கிறது. அதை யாராவது எதிர்பார்த்தார்களா? எனவே, தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆளும் கட்சி என்கிற உயரத்தை நிச்சயம் நாங்கள் பிடிப்போம்” என்றார் குமரகுரு.



source https://www.vikatan.com/news/politics/is-possible-for-bjp-capturing-majority-vote-bank-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக