Ad

ஞாயிறு, 4 ஜூலை, 2021

உறவு - உணர்வு சிக்கலைப் பேசும் மலையாள சினிமா! `ஆணும் பெண்ணும்' ஆந்தாலஜி எப்படி இருக்கிறது?

மூன்று குறும்படங்கள். அதில் இரண்டு கடவுளின் தேசத்து எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவை. மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் மூன்று பெண்களின் வாழ்க்கையை குறிப்பாக ஆண் பெண்ணிற்கு இடையிலான உறவு - உணர்வு சிக்கல்களைப் பற்றி பேசும் குறும்படங்களைக் கொண்ட 'ஆணும் பெண்ணும்' ஆந்தாலஜி எப்படி இருக்கிறது?

சாவித்ரி:

கணவனின் உயிரை மீட்பதற்காக எமனுடன் போராடிய புராணகால சாவித்திரியை நாம் அறிவோம். இவளோ கம்யூனிசத்தை கையில் பிடித்துக் கொண்ட போராளி சாவித்திரி. பிக்பாஸ் பிரிட்டிஷ் விட்டுசென்ற சுதந்திர இந்தியாவின் தொடக்க காலம். அப்போது கேரளாவில் கம்யூனிசம் பேசிய காம்ரேட்களுக்கு எதிரான வன்முறைகள் அமலிலிருந்த பின்புலத்தை மையமாகக் கொண்டு நகரும் கதையில் மகாபாரதத்தில் வரும் கீச்சக வதத்தை உருமாற்றி உட்செருகி ஒரு ஃப்யூசனாக பார்த்ததில் திரைக்கதை சற்றே கன்ஃப்யூஸ் ஆகி நிற்கிறது.

ஆணும் பெண்ணும் - சாவித்ரி

இக்குறும்படத்தின் பெரும் பலம் 1947க்கு பிந்தைய பாணி வீடு, விளக்கு, ஆடை, லைட்டிங் என அவ்விட தேசத்து மக்களின் அன்றைய வாழ்க்கைமுறையை அனைத்து காட்சிகளிலும் அப்படியே கொண்டுவந்து நிறுத்தியிருந்த கலை இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உழைப்பு. இவற்றிற்கு அடுத்து பெரும் பலமாக நடிகர்களின் தேர்வைச் சொல்லலாம்.

பார்வையினாலேயே பெண்ணுடலை மேயும் உயர் சாதி ராகவ பிள்ளையாக தேகம் முழுவதும் தெறிக்கும் திமிர்த்தனத்துடன் ஜோஜு ஜார்ஜ், தான் ஏற்ற பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருகிறார். முறைத்துக் கொண்டே இருக்கும் முரட்டு சகாவாக இந்திரஜித் சுகுமாரன் மற்றும் சாவித்திரியாக சம்யுக்தா மேனன் என ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும் பிரமாதம். ஆனால், அப்பாத்திரங்களின் மூலமாக நமக்குள் கடத்தியிருக்கப்பட வேண்டிய எதுவுமே நம்மை அடையாமல் எட்ட நின்றபடி எட்டிப் பார்த்துவிட்டு நம்மைக் கடக்கிறது. கையில் துப்பாக்கியுடன் பக்கவாதம் வந்த கிழவரின் மீசையை தளர்த்தி வீர வசனம் பேசும் காட்சியில் சம்யுக்தாவின் நடிப்பு ஏ கிளாஸ். அவரது பாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட பில்ட் அப்களைப் பார்த்து கிளைமேக்ஸில் பெரிதாக ஏதோ செய்யப்போகிறார் எனக் காத்திருந்தால் அடுத்தடுத்த காட்சிகளில் அப்பாத்திரம் வீரியத்தை இழந்து நிற்கிறது. திரைக்கதையை இன்னும் செதுக்கியிருக்கலாம் அல்லே டைரக்டர் ஜே.கே சேட்டா!

ராச்சியம்மா:

சிறுகதையோ நாவலோ ஒரு திரைப்படமாக அல்லது குறும்படமாக உருமாறும்போது திரைக்கதையில், திரைமொழியில் அதற்கான கவனக் குவிப்பும் பிரத்யேக மெனக்கெடலும் வேண்டும். இல்லாவிடில் கதாபாத்திரங்கள் அதன் வீரியத்தை இழந்து வீதியில் நிற்கும். இதற்கு சிறந்த உதாரணமாக எழுத்தாளர் உருபின் கதையை வைத்து வேணு இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் ராச்சியம்மாவைச் சொல்லலாம்.

ஆணும் பெண்ணும் - ராச்சியம்மா

பார்வதி திருவோத்தூவின் சிறப்பாக நாம் நினைப்பது, ஏற்றது எந்த கதாபாத்திரமானாலும் அப்பாத்திரமாகவே அவர் மாறுவதைத்தான். காதலனுக்காக கடைசி வரையிலும் காத்திருக்கும் ‘என்னு நின்ட்டே மொய்தீன் - காஞ்சனமாலா’ தொடங்கி பெங்களூர் டேஸில் மாற்றுத்திறனாளியான ஆர்ஜே சாரா வரையில் திரையில் நாம் பார்வதியை பார்க்கமுடியாத படி அக்கதாபாத்திரமாகவே மாறியிருப்பார். ஆனால், இக்குறும்படம் அதற்கு விதிவிலக்கு. எருமை மாடுகளை வைத்து பால் விற்று சொந்த சம்பாத்தியத்தில் கெத்தாக சுய சார்பு வாழ்க்கை வாழும் ராச்சியம்மாவாக அவர் மாறவில்லை. மாறாக மலையாளமும் கன்னடமும் தமிழும் கலந்துகட்டி பேசும் பார்வதியாக மாத்திரமே தெரிகிறார்.

குரல் உயர்த்திப் பேசுவது மாத்திரமே கம்பீரம் அல்லவே? தன் சம்பாத்தியத்தில் பிறரை சாராமல் சுயசார்பு வாழ்க்கை வாழும் தைரியமான பெண் ஒருவளின் கதாபாத்திரம் எத்தனை கம்பீரமாக இருந்திருக்கவேண்டும்? மாறாக சற்று சுய கழிவிரக்கம் கொண்ட கதாபாத்திரம் போல மாறும் அவரது பாத்திரப்படைப்பு நமக்குள் எதையுமே கடத்தவில்லை. மாறாக ‘எதற்கு இந்த தியாகம்?’ என்ற கேள்வியை மட்டுமே விதைத்துப் போகிறது. ஆரம்பக் காட்சிகளில் ஆசிஃப் அலிக்கும் பார்வதிக்கும் இடையிலான உறவை அழுத்தமாகப் பதியாதாதல் பின்பாதியில் பார்வதி எடுக்கும் முடிவு நம்மை ஆச்சர்யப்படுத்தவோ அதிர்ச்சியுறவோ செய்யவில்லை. ‘அட’ சொல்ல வைத்திருக்கவேண்டிய கதாபாத்திரத்தை அம்போவென கைவிட்டிருக்கிறது திரைக்கதை.

Also Read: Haseen Dillruba: அசத்தல் டாப்ஸி, ஆச்சர்ய விக்ராந்த்... ஆனாலும்?

ராணி:

பெயருக்கு ஏற்றார் போல் ராணி! மூன்று குறும்படங்களைக் கொண்ட ஆந்தாலஜியில் முத்தாய்ப்பான குறும்படம் என்றால் நிச்சயமாக அது உன்னி ஆர் எழுதிய சிறுகயைத் தழுவி ஆஷிக் அபு இயக்கியிருக்கும் ராணி எனலாம்.

கல்லூரியில் ஒன்றாகப் படிக்கும் காதலர்கள் ரோஷன் மேத்யூ – தர்ஷனா ராஜேந்திரன். நண்பன் சொன்ன இயற்கை சமாச்சாரத் தூண்டுதலால் காதலியை கூட்டிக் கொண்டு தனியானதொரு இடத்திற்குப் போய் உல்லாசமாக இருக்கத் துடிக்கும் ரோஷன், உணர்ச்சி வேகத்தில் முடிவெடுக்கும் இளைஞன். மற்றொரு புறம் நடைமுறை யதார்த்தத்தை உணர்ந்து எதையுமே சற்று அறிவுபூர்வமாக யோசித்து அணுகும் அழகான இளம்பெண் ராணி. இருவருக்கும் இடையிலான உறவைச் சொல்லும் குறும்படம்தான் ராணி.

ஆணும் பெண்ணும் - ராணி

இந்த இன்றைய இன்ஸ்டன்ட் யுக யுவன் யுவதியின் காதலைப் பற்றி நெடுமுடி வேணு, படுக்கையில் கிடக்கும் வயதான கவியூர் பொன்னம்மாவிடம் சொல்லும் காட்சி அப்ளாஸ் ரகம். சுவாரஸ்யமும் ஹாஸ்யமும் கலந்து தான் கண்ட காட்சிகளை ஒவ்வொன்றாக விளக்கும்போது அவரின் குரலிலும் உடல் மொழியிலும்தான் எத்தனை முதிர்ச்சி. இத்தனை ஆண்டு கால கலைஞனின் அனுபவம் திரையை நிறைக்கிறது. 'ஓ.ஹென்றி' கதைகளைப்போல முடிவில் வரும் அந்த ட்விஸ்ட் நம்மை சில நொடிகள் கட்டிப் போடுகின்றன.

பிஜிபலின் பின்னணி இசையும் வேணு, ஷைஜு காலித் மற்றும் சுரேஷ் ராஜனின் ஒளிப்பதிவும் படங்களுக்குப் போதிய பலம் சேர்த்திருக்கின்றன.

மூன்று படங்களுள் முதல் இரண்டு படங்களின் பெரும் பலவீனம் திரைக்கதை கையாளப்பட்டிருந்த விதம். பிரேமுக்கு பிரேம் அழகியலைக் கூட்டுவதற்கு மெனக்கெட்ட அளவிற்கு, கருவின் மையத்தை, அந்த நுண்ணுணர்வுகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இந்த ஆந்தாலஜியின் அனைத்துப் படங்களுக்கும் 'ஆசம்' எனச் சொல்லியிருக்கலாம். அது இல்லாததாலேயே சாவித்திரி மற்றும் ராச்சியம்மாவை விட ராணி தனித்துவம் பெற்று மிளிர்கிறாள்.


source https://cinema.vikatan.com/movie-review/aanum-pennum-malayalam-anthology-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக