Ad

வியாழன், 15 ஜூலை, 2021

பழிக்குப் பழி; கட்டட ஒப்பந்ததாரர் கொலை! - ட்ரோன் மூலம் கொலையாளிகளைத் தேடும் நெல்லை போலீஸ்!

நெல்லை மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: நெல்லை: சிறையில் கொலையான முத்து மனோ; 70 நாள்களாக வாங்கப்படாத உடல்; - நீதிமன்றம் புதிய உத்தரவு!

இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலை பெற்ற உறவினர்கள் ஜூலை 2-ம் தேதி அடக்கம் செய்தார்கள்.

அத்துடன் பிரச்னை முடிந்தது என போலீஸார் நினைத்திருந்த நிலையில், முத்து மனோ கொலைக்குப் பழிவாங்கு வகையில் நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரரான கண்ணன் என்பவர் ஜூலை 12-ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அப்பாவியான அவரை கொலை செய்ததைக் கண்டித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள்.

இறுதிச் சடங்கு செய்யும் உறவினர்கள்

சமுதாய அமைப்பினர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கண்ணனின் உறவினர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்குப் பின்னர் கண்ணன் உடலை உறவினர்கள் பெற்றுச் சென்று இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள்.

பழிக்குப் பழியாக அப்பாவியான கண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்த குறிப்பிட்ட சமுதாய சங்க செயலாளர் சண்முகவேல், ”கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த கண்ணன் குடும்பத்தினருக்கான நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏற்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் உடலை வாங்கச் சம்மதித்தோம்.

மலைப் பகுதியில் கொலையாளிகளை தேடும் போலீஸார்

நெல்லை மாவட்டத்தில் ஒரு சிலர் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அப்பாவிகளைக் கொல்லும் கொடூரச் செயலில் ஈடுபடுகிறார்கள். இனியும் இங்கு அப்பாவிகள் கொலை செய்யப்படும் சம்பவம் நடக்கக் கூடாது. அத்தகைய செயலில் ஈடுபடும் ரெளடிகளை ஒழிக்க நடவடிக்கை வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

கண்ணன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பதற்றம் நீடித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்ணன் கொலையில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. கொலை சம்பவத்துக்குக் காரணமான மேலும் சிலரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ட்ரோன் மூலம் தேடும் பணி

இதனிடையே, கொலையாளிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு மலைப் பகுதியில் உள்ள பொத்தையில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மலைப் பகுதியாக இருப்பதால் ட்ரோன் கேமரா மூலம் அங்கு தேடும் பணி நடக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/police-tries-to-nab-the-accused-of-contractor-murder-case-in-nellai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக