Ad

வியாழன், 15 ஜூலை, 2021

யானைகளைக் கொல்லும் கேரள - தமிழக ரயில் பாதைகள்; தடுக்க அரசு செய்யவேண்டியவை என்னென்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளில் கொட்டக்காடு முதல் மதுக்கரை வரையிலான ரயில் பாதையில் இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரத்தில் வரக்கூடிய ரயில்களில் அடிபட்டு 8-ல் 7 யானைகள் உயிரிழப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன் வெளியான தெற்கு ரயில்வே துறையின் பாலக்காடு பிரிவு தரவுகள் கூறுகின்றன. தென்காசியைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற இந்தத் தரவுகள் மூலம், இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரையிலான நேரத்துக்குள் கொட்டக்காடு-மதுக்கரை ரயில் பாதையில் பயணிக்கும் ரயில்களால் ஏற்படும் விபத்துகள்தான் அந்தப் பகுதியில் அதிக அளவிலான யானைகள் உயிரிழக்கக் காரணமாக இருப்பது தெரியவந்தது.

யானை

இந்தப் பாதையில் அமைந்துள்ள வாளையார் ரயில் நிலையத்தின் நீட்சியில் இருக்கும் 5.8 கி.மீ நீள ரயில்பாதையில்தான் விபத்துக்குள்ளாகும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தரவுகளின்படி, கொட்டக்காடு-மதுக்கரையை இணைக்கும் இரண்டு ரயில் பாதைகளில் ஒன்று 17 கிலோமீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஊடுருவி வருகிறது. இன்னொரு ரயில்பாதை 23 கிலோமீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஊடுருவி வருகிறது.

இந்த இழப்புகளைத் தவிர்க்க, யானைகள் அதிகமாக அப்பகுதியில் நடமாடும் இரவு நேரத்திலிருந்து அதிகாலை வரை, அந்தப் பாதையில் செல்லும் ரயில்களை வேறு பாதையில் திசைமாற்றிவிட வேண்டும், அந்தப் பாதையிலுள்ள அதிக அளவிலான ரயில் போக்குவரத்துகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த வழக்கை முன்னெடுத்து விசாரித்து, ஒன்றிய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தமிழ்நாடு மற்றும் கேரள ரயில்பாதைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கும் யானைகள் பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. மேலும், அந்த கமிட்டி, ரயில்வே துறை, இந்திய காட்டுயிர் நிறுவனம், தமிழ்நாடு மற்றும் கேரள அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியது.

கொட்டக்காடு-மதுக்கரை பாதையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே காடுகளை ஊடுருவிச் செல்லும் ரயில் பாதைகளில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

ரயில் பாதை

சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் தரவுகள்படி, 2009-10 முதல் 2020-21 வரையிலான பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் 186 யானைகள் ரயில் விபத்துக்குப் பலியாகியுள்ளன. அதிகபட்சமாக, அஸ்ஸாம் மாநிலத்தில் 62 யானைகள், மேற்கு வங்கத்தில் 57 யானைகள், ஒடிசாவில் 27 யானைகள் உயிரிழந்துள்ளன.

தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் அமைக்குமாறு வலியுறுத்தியுள்ள இந்த கமிட்டி, ரயில் பாதைகளில் ஏற்படும் யானைகளின் மரணத்தைப் பதிவு செய்வதோடு, கூடுதலாக அங்கு நிகழும் யானை மரணங்களைத் தவிர்க்க என்ன மாதிரியான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரைகளையும் கொடுத்தால், அதன் அடிப்படையில் ரயில் விபத்துகளால் நிகழும் யானை மரணங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கரிடம் பேசியபோது, ``இரண்டு மாதங்களுக்கு முன்னர் தி இந்து நாளிதழில் 2015 முதல் 2021 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 10 யானைகள் இறந்துள்ளதாக ஒரு செய்தி வெளியானது. அதை அடிப்படையாக வைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் தன்னிச்சையாக இந்த வழக்கை எடுத்து விசாரித்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில், அந்தச் செய்தியில் கூறியுள்ளதைப் போல் 10 யானைகள் இறக்கவில்லை, 3 யானைகள் மட்டுமே இறந்துள்ளன என்று கூறினோம்.

மேலும், தமிழ்நாடு அரசு யானைகள் விபத்தில் சிக்குவதைத் தவிர்ப்பதற்காக, வேகத்தைக் குறைத்தல், ரயில்வே அதிகாரிகளுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் மேற்கொள்ளுதல், ஜொலிக்கும் எச்சரிக்கை பலகைகளை அமைத்தல், கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தல் போன்ற பரிந்துரைகளை ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளோம். இந்த விளக்கங்களைக் கேட்டபிறகு, இதுபோன்ற நடவடிக்கைகளை பரவலாக எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதற்காக ஒரு கமிட்டியையும் உருவாக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள்" என்று கூறினார்.

ரயில் தண்டவாளம்

Also Read: கோவை: `ரயில் விபத்திலிருந்து யானைகளைக் காக்க இதுதான் வழி!' - சமூக ஆர்வலரின் ஆலோசனை

யானைகளின் வழித்தடங்கள் பரவலாக ஆக்கிரமிப்புகளுக்கும் துண்டாக்கப்படுதலுக்கும் ஆளானதால்தான் யானை-மனித எதிர்கொள்ளல் அதிகரிக்கிறது என்று தொடர்ந்து காட்டுயிர் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் விமர்சித்து வருகின்றனர். யானைகளின் வழித்தடப் பாதை துண்டாக்கப்படும்போது, அவை விவசாய நிலங்களுக்குள் வந்து பயிர்களை அழிப்பது, மின் வேலிகளில் சிக்கி உயிரிழப்பது ஆகியவற்றுக்கு உள்ளாவதைப் போலவே, அந்த வழித்தடங்களை ஊடுருவிச் செல்லும் ரயில்பாதைகளும் அவற்றுக்குப் பேராபத்தாக எழுந்து நிற்கின்றன. யானை வழித்தடத்தை ஊடுருவிச் செல்லும் ரயில்கள், அந்த வழித்தடத்தில் பயணிக்கும் யானைகளிடையே விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

யானைகளின் பாதையைத் துண்டாக்கி அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாதைகளில் எவ்வளவு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அங்கு ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க முடியாது, அதிக விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும் ரயில் பாதைகளைத் திசை திருப்புவதே, அவ்வழியாகப் பயணிக்கும் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

ரயில் பாதைகளில் நிகழும் யானைகள் விபத்துக்குள்ளாகும் சிக்கலை எப்படிக் கையாள்வது என்பது குறித்து நம்மிடையே பேசிய காட்டுயிர் ஆர்வலர் டி.சுப்ரமணிய ராஜா, ``யானைகள் கடந்து செல்வதற்கு ஏதுவாக, நிலத்தடி பாலங்களை அமைக்க வேண்டும். கிராமப்புறங்களை ஊடுருவி சாலைகள் செல்லும்போது, அந்தச் சாலையை எப்படி உயரமாக அமைத்து, அதற்குக் கீழே கிராம மக்கள் சென்றுவருவதற்கு வசதியாக வழி செய்கிறோமோ, அப்படிப்பட்ட வசதிகளை ரயில் பாதைகள் அமைக்கும்போதே யானைகள் பயணிக்க ஏதுவாக பாலம் அமைத்து, அதற்குக் கீழே அவை செல்ல வழிவிட்டு அமைக்க வேண்டும். இல்லையேல், நிலத்தடி பாதைகளையாவது உருவாக்க வேண்டும். இது இருந்தாலே யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு வராமல் பாதுகாப்பாகக் கடந்து செல்லும்.

ரயில் மோதி பலியான யானை

Also Read: கேரள அரசின் சில்வர் லைனிங் ரயில்வே திட்டம்; சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வித்திடப்போகிறதா?

செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள கோட்டமலை கருப்பசாமி கோயில் யானை வழித்தடப் பாதையிலும் இதே சிக்கல்தான் பல ஆண்டுகளாக நிலவுகிறது. அங்கு முதலில் ஆற்றைக் கடக்க வேண்டும். அதைத் தொடர்ந்து சாலை மற்றும் ரயில் பாதைகளைக் கடக்க வேண்டும். இந்தத் தடைகளைத் தாண்டி, தென்மலையிலிருந்து புனலூர் வரை புலிகள், யானைகள் எதுவுமே அந்த வழித்தடத்தைக் கடந்து பயணிக்க முடியாது. சுமார் 30 கிலோமீட்டர் தொலைவுக்கு யானைகளால் எங்குமே கடந்து செல்ல முடியாது. யானை ஆய்வாளர் ஜான் சிங் போன்றோர் பல கட்ட ஆய்வுகளின் மூலம், அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கூறினர்.

அங்கு இரண்டு மலைகள் அருகருகே அமைந்துள்ளன. அந்த மலைகளை இணைக்கும் வகையில் யானைகளுக்காக ஒரு பாலம் அமைக்கக் கோரினார்கள். இந்தப் பாலத்தை வெற்றிகரமாக அமைத்திருந்தால், இந்தப் பிரச்னையைச் சரிசெய்திருக்கலாம். ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை. இதுபோன்ற பாலங்களை அங்கு மட்டுமன்றி, காடுகளை ஊடுருவிச் செல்லும் அனைத்து சாலை மற்றும் ரயில் பாதைகளிலும் அமைக்க வேண்டும். மேலும், கோட்டக்காடு-மதுக்கரையை இணைக்கும் A, B பாதைகளில் B ரயில்பாதை வனப்பகுதிக்குள் மிகவும் அதிகமாக ஊடுருவி வருகிறது. 23 கி.மீட்டருக்கு ஊடுருவி வரும் அந்தப் பாதையில்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதை முற்றிலுமாக மூடிவிட்டு, A பாதையை மட்டும் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

இரண்டு விதமான வாழிடங்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்துகிற ஓர் இணைப்புதான் காட்டுயிர் வழித்தடம். உணவு, நீர் ஆகிய தேவைகளை ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டுக்குப் பயணித்து பூர்த்தி செய்துகொள்ள இவை உதவுவதோடு, காட்டுயிர்களின் இனப்பெருக்கத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய மேம்பாலங்கள், நிலத்தடிப் பாதைகள், ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் மின்கம்பிகள் பொருத்துதல் போன்ற கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக, இந்திய ரயில்வே மற்றும் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை அமைச்சகம் முன்னர் ஆலோசனைகளை மேற்கொண்டது. ஆனால், அதைத் தொடர்ந்து அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலே விட்டுவிட்டது என்றும் இந்த உத்தரவின்போது நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேற்குத்தொடர்ச்சி மலை ரயில் பாதை

Also Read: ̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை

காட்டுயிர் வழித்தடத்தின் வழியே தடையின்றிப் பயணித்துக் கொண்டேயிருப்பதற்கான வசதியை அழித்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உயிரினங்கள் வாழவும் அங்குள்ள குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்களுக்கு இடையிலேயே இனப்பெருக்கம் செய்துகொள்ளவும் வேண்டிய கட்டாயம் ஏற்படும். அது அடுத்து பிறக்கும் சந்ததிகளிடையே மரபணு பன்மையைச் சீர்குலைக்கும். அதனால் மரபணு குறைபாடுகள் ஏற்படும். ஆகையால், அந்தப் பகுதியில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமே அழியும் நிலைக்குக்கூட தள்ளப்படலாம். யானைகளுக்கு அப்படியோர் அவல நிலை ஏற்படும் முன்னரே அவற்றின் வழித்தடங்களைச் சிதைக்கக்கூடிய பிரச்னைகளுக்கு இந்திய அரசு முடிவுகட்டியாக வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/environment/ngt-advises-to-form-central-committee-to-control-elephant-deaths-due-to-train-accidents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக