செங்கல்பட்டு அருகே திருமணி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் தடுப்பூசிகள் தயாரிக்கக்கூடிய இந்துஸ்தான் பயோடெக் (ஹெச்.பி.எல்) நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், மன்சுக் மாண்டவியா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
"தமிழ்நாடு அரசின் கோரிக்கை குறித்து பத்து நாள்களில் பதில் சொல்வதாக மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார். ஆனால், பல நாள்களாகியும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றபோது, இது குறித்து பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார். அதற்கும் மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.
கொரோனா முதல் அலையிலும் இரண்டாம் அலையிலும் தமிழ்நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இரண்டாவது அலையில் அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐத் தாண்டிவிட்டது. மூன்றாவது அலை வரப்போகிறது அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் செலுத்திய பிறகும்கூட, ஒரு பூஸ்டர் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள். தற்போதைய சூழலைப் பார்த்தால், எல்லோருக்கும் ஒரு டோஸ் செலுத்தி முடிக்கவே பல ஆண்டுகள் பிடிக்கும் போலத் தெரிகிறது.
இந்த நிலையில், ரூ.594 கோடி ரூபாய் செலவில்100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தை, ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்று மத்திய அரசே அறிவித்தும், ஏன் இன்னும் இயக்கவில்லை என்பது புரியாத புதிர்தான். தடுப்பூசியை உற்பத்தி செய்யவும், பேக்கிங் செய்யவும் அதிநவீன வசதிகள் உள்ளன. பிசிஜி தடுப்பூசி, ஹெப்படிட்டீஸ் பி, அம்மைநோய் தடுப்பூசி, வெறிநாய் கடி தடுப்பூசி உள்பட 13 வகையான தடுப்பூசிகளை இங்கு தயாரிக்கலாம் என்கிறார்கள். 110 கே.வி மின் நிலையம், தடுப்பூசிகளைச் சோதித்துப் பார்க்க ‘அனிமல் ஹவுஸ்’, ஸ்டோரேஜ் வசதிகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை, தரக்கட்டுப்பாடு ஆய்வகம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகப் பிரிவுகள் என சகல வசதிகளும் தயார் நிலையில் இருந்தும், இந்த நிறுவனம் இயக்கப்படாமல் கிடக்கிறது.
தற்போது, மருத்துவம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுடன் டெல்லிக்கு சென்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டு ஹெச்.பி.எல் நிறுவனத்தை உடனடியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு கொடுக்கும் எண்ணம் இருந்திருந்தால், உடடினயாக மத்திய அரசு பதில் சொல்லியிருக்கும். ஆனால், பதில் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இது பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்போது பதில் சொல்லியிருக்கிறார்கள்.
கூடுதலாக ரூ. 310 கோடி செலவழித்தால், இங்கு உற்பத்தியைத் தொடங்கிவிடலாம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். நிறுவனத்தைக் கொடுத்தால் கூடுதல் செலவை பார்த்துக்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஆனால், டெண்டர் விடுவதிலேயே மத்திய அரசு குறியாக இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு முறை டெண்டர் விட்டும் யாருமே டெண்டர் எடுக்க முன்வரவில்லை. இந்தியாவில் 'பாரத் பயோடெக்' மற்றும் 'சீரம்' ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. 'இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை ஏன் தயாரிக்கவில்லை' என்று சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லை.
Also Read: `மோடி அரசைப் படங்களில் சாடிய தம்பி; குறிவைக்கும் வலதுசாரிக்கும்பல்!' - விஜய்க்கு ஆதரவாக சீமான்
இந்த நிலையில், ஹெச்.பி.எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது. “ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திடம் ஹெச்.பி.எல் நிறுவனத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அந்த வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், எங்கள் சம்பளப் பிரச்னை பெரிய விவகாரமாக மாறியிருக்கிறது. நாங்கள் மத்திய அரசு ஊழியர்கள். நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்கவில்லை என்று சொல்லி எங்கள் சம்பளத்தைக் குறைத்துவிட்டார்கள். ரூ.80,000 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சயின்டிஸ்ட்களுக்கு ரூ.25,000 தான் வழங்கப்படுகிறது. அதேபோல, ரூ.25,000 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு ரூ.10,000 தான் வழங்கப்படுகிறது. சம்பளப் பிரச்னை காரணமாக ஏற்கெனவே பலர் வேலையைவிட்டு போய்விட்டார்கள். சுமார் 200 பேர் பணியாற்றிய இடத்தில், இப்போது 75 பேர் மட்டும் பணியில் இருக்கிறார்கள்.
இந்த சம்பளமும் அடுத்த மாதத்திலிருந்து கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. காரணம், ஹெச்.எல்.எல் என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஹெச்.பி.எல் நிறுவனம். தற்போது எங்களுக்கு வழங்கப்படும் குறை சம்பளத்தையும் ஹெச்.எல்.எல் நிறுவனம்தான் வழங்கிவருகிறது. ஹெச்.எல்.எல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சி நீண்டகாலமாக நடைபெற்றுவந்தது. தற்போது அந்த பங்கு விற்பனை முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, ஹெச்.பி.எல் நிறுவன ஊழியர்களுக்கு இனிமேல் ஹெச்.எல்.எல் சம்பளம் வழங்குவதற்கு வாய்ப்பு இருக்காது என்றும் தகவல்கள் வருகின்றன. அதிகாரப்பூர்வமாக எதுவும் எங்களுக்கு சொல்லப்படவில்லை. ஆனாலும் எங்களுக்கு பெரும் அச்சமும் குழப்பமும் இருக்கிறது” என்று கவலையுடன் கூறினார்கள். பெருந்தொற்று பேரிடர் காலத்தில், விரைந்து முடிவுகளை எடுத்து விறுவிறுப்பாக செயல்படாமல், மத்திய அரசிடம் ஏன் இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு மூடுமந்திரம்? என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/will-central-government-give-chengalpattu-vaccine-complex-to-tn-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக