கோவை நகர் பகுதிகளில் பொதுமக்கள் பலர் தடுப்பூசிக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கிராமப் பகுதிகளில், அதிலும் பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி ஆர்வம் சற்று குறைவாகவே உள்ளது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முள்ளாங்காடு, கல்கொத்திபதி,
Also Read: 11 பழங்குடி குடும்பங்களுக்குத் தடுப்பூசி; 10 கி.மீ காட்டில் நடந்த சுகாதாரத்துறையினர்!
வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களுக்கு தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறையினர் சென்றுள்ளனர். ஆனால், அவர்களைக் கண்ட மக்கள் தப்பி மரத்தில் ஏறி ஓடி ஓளிந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பழங்குடி மக்களுக்காக குரல் கொடுத்துவரும் ஏக்தா பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தனராஜ் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆதங்கத்தை பதிவிட்டிருந்தார். அதுகுறித்து அவரிடம் பேசினோம், "நிச்சயமாக தடுப்பூசி விஷயத்தில் பழங்குடி மக்களின் அறியாமை குறித்து வேதனைப்பட ஒன்றுமே இல்லை.
சுகாதாரத்துறை என்கிற துறை இதுவரை இந்த மக்களிடம் போய் முறையாக சென்று சேரவில்லை என்றுதான் இதைப் பார்க்க வேண்டும். அவர்கள் இம்மக்களுக்கு நம்பிக்கையும் அளிக்கவில்லை. இதற்காக சுகாதாரத் துறையினர்தான் தங்களை நினைத்து பரிதாபப்பட வேண்டும்.
குறிப்பாக மக்களின் வரிப்பணத்தில் நல்ல ஊதியம் பெறும் மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எங்கே குரலற்ற மக்கள் இருக்கிறார்கள்? விளிம்புநிலை மக்கள் எங்கே இருக்கிறார்கள்? எங்கே ஒடுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப்பட்ட, சக்தியற்ற மக்கள் இருக்கிறார்கள்?
எங்கே பழங்குடி மக்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகளும், திட்டங்களும் சென்றடைகிறதா? பலனளிக்கிறதா? என்பதை சிந்தித்து செயல்படும் மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளனர். இதையெல்லாம் நினைத்துக்கூட பார்க்காதவர்களும் இருக்கிறார்கள்.
மருத்துவ பணியாளர்கள் அந்த கிராமங்களுக்கு முறையாக செல்வதில்லை. தேவைப்படும் சிகிச்சை, நல வாழ்வு உதவிகள் செய்வதில்லை என்பதினால்தானே அந்த மக்களின் நம்பிக்கையைப் பெற இயலவில்லை.? மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல், கட்டாய - நிர்பந்தத்தினால் தடுப்பூசி போடுவதற்காக இலக்கை நிறைவேற்ற மட்டுமே அங்கே போனதால்தானே அதிகாரிகளைப் பழங்குடிகள் அந்நியராகப் பார்க்கிறார்கள்.
ஏன் இந்த நம்பிக்கையை அரசு இயந்திரம் பெற முடியவில்லை? என்பதை நினைத்துதான் என்னால் பரிதாபப்பட முடியும்.
இந்தச் செய்தியில்கூட பழங்குடிகள் பயந்து மரம் ஏறுகிறார்கள் என்பது இரண்டாம் பட்சம்தான். குறிப்பாக அந்த அரசு ஊழியர்கள் தான் முதலில் வெட்கப்பட வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இப்படி ஓடி மரத்தில் ஏறிய பழங்குடிகள் ஒன்றும் அடர்வனத்தில் வாழும், வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள் அல்ல.
கோவை மாநகருக்கு சற்று அருகில் உள்ளவர்கள்தாம். இவர்களை மனிதர்களாக மண்ணின் பூர்வகுடிகளாக, மூத்தவர்களாக நாம் பார்க்கவும், மதிக்கவும் தவறியதை முதலில் உணர வேண்டும்.
30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு கேரள காடுகளில் வாழ்ந்த ஒரு பழங்குடி மக்களிடம் அரசு இது போன்ற மருத்துவ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதனை தங்கள் பழமையான மூட நம்பிக்கையோடு இறுகப் பிடித்துக் கொண்ட இச்சமூகம் இன்று வாரிசுகள் இல்லாமல் வனத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
அங்கே வனத்துறையும், சுகாதாரத்துறையும் இன்னமும் அந்த மக்களிடம் இருந்து ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறது. பழங்குடிகளுக்கென்று ஓர் உலகியல் பார்வை உள்ளதென்று உணர்ந்திடாத வரையில் நாமும் ஒரு வகையில் பார்வையற்றவர்கள் தாம் என்றார்” கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/activist-speaks-about-coimbatore-tribes-and-covid-vaccine-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக