காலநிலை மாற்றம் உலகம் முழுக்கப் பல பிரச்னைகளை சங்கிலித் தொடராக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு, அதீத பருவநிலை நிகழ்வுகள், வறட்சி என்று நீளும் அந்தச் சங்கிலித் தொடரின் வரிசையில் மின்னல் தாக்குதல்களையும் இப்போது சேர்த்துக்கொள்ளலாம். ஆம், உலகம் முழுக்கவே காலநிலை மாற்றத்தின் வீரியம் அதிக அளவிலான மின்னல் தாக்குதல்களை உண்டாக்கிக் கொண்டிருப்பதாக சமீபத்திய அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன.
வளிமண்டல மின்சாரம் குறித்து ஆய்வு செய்யக்கூடிய ஓர் அமைப்பு (Atmospheric Electricity Group) 2020-ம் ஆண்டு வெளியிட்ட ஓர் ஆய்வு முடிவு, பிரேசிலில் அதிகரிக்கும் மின்னல் தாக்குதல்களுக்கு புவி வெப்பமயமாதல் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று கூறியது. அதேபோல் தற்போது வளிமண்டல வேதியியல் மற்றும் இயற்பியல் ஆய்விதழில் வெளியாகும் நிலையிலுள்ள ஓர் ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தைப் படித்தபோது, இந்தியாவிலும் மின்னல் தாக்கத்தின் அலைவெண் மற்றும் செறிவு இப்போது இருப்பதைவிட 21-ம் நூற்றாண்டு முடிவதற்குள் 15 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்பதும் இதன் விளைவுகளை கடலோரப் பகுதிகள் அதிகமாகச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதும் தெரியவந்தது.
அதிகரிக்கும் நகரமயமாக்கல், நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. இதன்விளைவாக, நகர்ப்புறங்களில் அதீத மக்கள் தொகை அடர்த்தியும் அதன் விளைவாக மின்னல் தாக்குதலுக்கு மக்கள் ஆளாவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகியுள்ளன. 1994-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் புவியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஷியஸ் அதிகமானால், மின்னல் தாக்குதலின் அளவு 5-6 சதவிகிதம் அதிகமாகும் என்று கூறியது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தீபகற்பத்தில் வங்கக்கடலில் உருவான அதிகமான புயல் மற்றும் பருவநிலை இடையூறுகள், இந்திய தீபகற்பம் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் மின்னல் வெட்டுகள் அதிகமாக ஒரு காரணமாக இருக்கிறது.
ஸ்ரீநகரிலுள்ள ஹெம்வதி நந்தன் பஹுகுணா கார்வால் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி கான்பூரைச் சேர்ந்த ஆய்வாளர்கள், மேகவெடிப்பு நிகழ்வுகள், மின்னல் வெட்டு ஆகியவற்றுக்கும் காட்டுத்தீ சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். மத்திய இமயமலைப் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாகப் பல்வேறு வகையான பருவநிலை நிகழ்வுகளின்போது, மேக உறைபனிக்கருவை (cloud condensation nuclei- நீராவிகள் உறையக்கூடிய சிறு சிறு நீர்த்துளிகளைப் போல் மேகத்தில் அமைந்திருப்பது) ஆய்வு செய்தவர்கள், மழைக்காலத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டுத்தீ உருவாகும்போது மேக உறைபடிக்கருவின் செறிவு வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.
மேலும், கடந்த மே மாதத்தில் ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள், இத்தகைய அதீத மேக உறைபனிக்கரு, அதிக அளவிலான ஆஸ்திரேலிய காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமாக இருந்த மின்னல் தாக்குதல்கள் உருவாகக் காரணமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதன்மூலம், காலநிலை மாற்றத்தால் நிகழும் சீரற்ற பருவநிலை நிகழ்வுகள் மேகவெடிப்பு மற்றும் மின்னல் தாக்குதல்களை அதிகப்படுத்துவதால், காட்டுத்தீ சம்பவங்களும் அதிகமாக நடைபெறுகின்றன.
புவி வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்போது, மின்னல் தாக்கத்தின் அலைவெண் 12 சதவிகிதம் அதிகரிக்கும். அதன்படி, தற்போது புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், மின்னல் தாக்குதலின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், கோடைக் காலங்களில் நிகழும் மின்னல் தாக்குதல்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளின்படி, 2010-ம் ஆண்டில் கோடைக்காலத்தின்போது 18,000 மின்னல் வெட்டுகள் பதிவாகியுள்ளன. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக 2020-ம் ஆண்டின் கோடையில் 1,50,000 மின்னல் வெட்டுகள் பதிவாகியுள்ளன.
2019-20 ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் மின்னல்தாக்கம் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து இந்தியா அறிக்கை வெளியிடுகிறது. அதில் 2019-20 நிதியாண்டுக்கான தரவுகளைப் பார்க்கையில் இந்தியாவில் சுமார் 1,38,00,000 மின்னல் வெட்டுகள் நிகழ்ந்துள்ளன. 2020-21 நிதியாண்டுக்கான தரவுகளைப் பார்க்கும்போது அந்த எண்ணிக்கை 1,85,44,367 மின்னல் வெட்டுகள் நிகழ்ந்துள்ளன. அதாவது ஒரே ஆண்டில், மின்னல் வெட்டுகளின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், பீகார், புதுச்சேரி, இமாசலப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முந்தைய ஆண்டைவிட 100 சதவிகிதம் அதிகமான மின்னல் வெட்டுகள் ஏற்பட்டுள்ளன.
Also Read: `ஒரே நாளில் 41,000 மின்னல்கள்... 3,000 மரணங்கள்' - காரணம் காலநிலை மாற்றமா!?
ஏப்ரல், 2020 முதல் மார்ச் 2021 வரைக்குமான காலகட்டத்தில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 20,43,238 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மின்னல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 5,99,688 மின்னல் தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ள சுமார் 18 மில்லியன் மின்னல் தாக்குதல்களில், நாடு முழுவதும் 1,697 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 401 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 238 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 228 பேரும் ஒடிசாவில் 156 பேரும் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் நிகழ்ந்துள்ள மரணங்கள் மட்டுமே மின்னல் தாக்கியதால் நாடு முழுக்க ஏற்பட்ட மொத்த மரணங்களில் 13.5 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. ஒடிசாவில் மட்டும் சுமார் 20 லட்சம் மின்னல் வெட்டு நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் 1979 முதல் 2011 வரை மொத்தமாக மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,259. ஆனால், 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான ஒரே ஆண்டில் 1,697 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்குதல்கள் கடந்த 10 ஆண்டுகளில் எந்தளவுக்கு அச்சுறுத்தக்கூடிய அபாயமாக உருவெடுத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தரவுகளே போதுமானது.
காலநிலை மாற்றத்தின் விளைவாக நிகழும் சீரற்ற, மோசமான பருவநிலை மாறுதல்களால் இனிவரும் நாள்களிலும் மின்னல் தாக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
Also Read: ``காடுகளை பழங்குடிகளிடம் கொடுங்கள்; பல்லுயிரியம் பாதுகாக்கப்படும்!"- ஆய்வறிக்கை சொல்லும் உண்மை
குறிப்பாக, கடலோரம், மலைப்பகுதி, நகர்ப்புறம் ஆகிய நிலப்பகுதிகளில் அதிகமான பாதிப்புகள் இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்தச் சேதங்களைக் கட்டுக்குள் கொண்டுவர, மாநில அரசுகள் ஆங்காங்கே மின்னல் தாக்குதலை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். உலக நாடுகள், புவி வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் அவசரக்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று காலநிலை போராளிகளும் சூழலியல் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசுகள் அதை நடைமுறையில் சாத்தியப்படுத்தாதவரை, காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு எளிய மக்கள் பாதிக்கப்படுவது தொடரும் என்பதற்கு இந்த 1,697 மரணங்கள் மற்றுமோர் உதாரணம்.
source https://www.vikatan.com/social-affairs/environment/1697-people-died-because-of-lightning-strikes-in-india-last-year-why
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக