Ad

ஞாயிறு, 18 ஜூலை, 2021

கழுதையிடம் மனு... காந்தி சிலைக்கு மாலை... தேசத்துரோக சட்டப்பிரிவு '124 ஏ' நீக்கப்படாதது ஏன்?

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், தேவையற்ற சட்டங்கள் என்று சொல்லி பல சட்டங்களை மத்திய அரசு ஒழித்துக்கட்டியது. அதே நேரத்தில், சர்ச்சைக்குரிய பல புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் மற்றும் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை ஒடுக்குவதற்காக காலனிய ஆட்சியாளர்களால் தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ எனப்படும் தேசத் துரோகச் சட்டப்பிரிவு நீக்கப்படவில்லை. ஏன் அது நீக்கப்படவில்லை என்ற கேள்வி இன்றைக்கு வலுவாக எழுப்பப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1837-ம் ஆண்டு, தண்டனைச் சட்டத்தை தாமஸ் மெக்காலே வடிவமைத்தார். அதில், தேசத்துரோகக் குற்றம் என பிரிவு 113 சேர்க்கப்பட்டது. பின்னர், தற்போது அமலில் இருக்கும் பிரிவு 124 ஏ கொண்டுவரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ இன்றைக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டிலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் பிரச்னையாக இருக்கிறது. ஆட்சியாளர்கள் தங்களை எதிர்ப்பவர்களை, விமர்சிப்பவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு பிரிவு 124 ஏ-வை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. தனி நபர்கள், செயற்பாட்டாளர்கள், சிறிய இயக்கங்கள் மட்டுமல்லாமல், பெரிய அரசியல் கட்சிகளுக்கும்கூட அச்சுறுத்தலாக பிரிவு 124 ஏ இருக்கிறது. சிறு நகரங்களில்கூட அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகள் அல்லது காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஒருவரை தண்டிக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டால், உடனடியாக அவர்கள் பயன்படுத்துவது பிரிவு 124 ஏ-வைத்தான்.

பிரிவு 124 ஏ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். அவற்றில் பல வழக்குகள் ஆச்சர்யப்பட வைப்பவை. அதில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போடப்பட்ட ஒரு வழக்கு. 2006-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் காஞ்சி மக்கள் மன்றம் என்ற அமைப்பினர் மக்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவை ஒரு கழுதையிடம் கொடுத்தனர். மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற அதிருப்தியின் காரணமாக, ஒரு கழுதையின் மீது மாவட்ட நிர்வாகம் என்று எழுதி, அந்த கழுதையிடம் மனுவைக் கொடுத்தனர். அதற்காக அந்த அமைப்பினர் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. காந்தி சிலைக்கு மாலை அணிவித்ததற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.

கழுதையிடம் மனு கொடுத்தவர்கள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பிறகும் பல ஆண்டுகளாக நீதிமன்றத்துக்கு அலைந்தனர். கழுதையிடம் மனு கொடுத்ததெல்லாம் தேசத்துரோகம் ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அவர்கள் அனுபவித்த சிறைக்கொடுமைகள், காவல்நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அலைந்த அலைச்சல், மனஉளைச்சல், பொருளாதார பாதிப்புகள் ஆகியவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்வது?

என்.வி.ரமணா

ஆகவேதான், சட்டத்திலிருந்து பிரிவு 124 ஏ நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பலர் மனு தாக்கல் செய்தனர். இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக பிரிவு 124 ஏ இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டனர். அந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.கோபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்தச் சட்டப்பிரிவு இன்னும் ஏன் நீக்கப்படவில்லை என்று மத்திய அரசிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

“பிரிவு 124 ஏ எனப்படும் தேசத்துரோக சட்டப் பிரிவு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக காலனிய ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்ட சுதந்திரப்போராட்ட வீரர்கள் மீது இந்த பிரிவின்கீழ் வழக்குகள் போடப்பட்டன. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், இந்த சட்டம் தேவைதானா? இந்தச் சட்டத்தை மத்திய அரசு இன்னும் ரத்துசெய்யாமல் இருப்பது ஏன்?” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார்

Also Read: `ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி; நிறைவேற உதவுவாரா உதயநிதி?' - காத்திருக்கும் மருத்துவர்கள்!

மத்திய அரசின் சார்பில் இந்த வழக்கில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர், ‘பிரிவு 124 ஏ தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இந்தப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்கலாம்” என்றும் கூறினார். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு உதாரணமாக ஒன்றை அந்த அமர்வு குறிப்பிட்டது. அதாவது, "ஒரு தச்சரின் கையில் இருக்கும் ரம்பம் அழகான மேசை நாற்காலிகளை உருவாக்குவதற்கு பயன்படுகிறது. அந்த ரம்பத்தை வைத்து மரங்களை வெட்ட ஆரம்பித்தால் காடு அழிந்துவிடும்" என்று அமர்வு கூறியது.

கே.கே.வேணுகோபால்

2016-ம் ஆண்டு பிரிவு 124 ஏ-ன் கீழ் போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35. அதுவே, 2019-ம் ஆண்டு 93 வழக்குகளாக அதிகரித்தது. அதாவது, மூன்று ஆண்டுகளில் 165 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த 93 வழக்குகளில் 17 வழக்குகளில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3.3 சதவிகிதம் அளவுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரிவு 124 ஏ நீக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தொடர்ந்து குரல் எழுப்பிவரும் நிலையில், அந்த குரலுக்கு வலுச்சேர்ப்பதாக உச்ச நீதிமன்றத்தின் எழுப்பியுள்ள கேள்விகளும் அது தெரிவித்துள்ள கருத்துகளும் அமைந்துள்ளன. பிரிவு 124 ஏ நீடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/will-modi-government-should-scrapped-sedition-law

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக